யுத்தத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் : பேரவையின் தீர்மானங்களை இலங்கை ஏற்றுக்கொள்ளாது

0
32
Article Top Ad

2009 இல் முடிவடைந்த யுத்தத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் (UNHRC) கொண்டுவரும் எந்தவொரு தீர்மானத்தையும் இலங்கை ஏற்றுக்கொள்ளாது என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

நேற்று புதன்கிழமை (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர்,

”மேற்குலக நாடுகள் தமது நாடுகளில் வசிக்கும் புலம்பெயர் இலங்கையர்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் இலங்கை மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றன. வெளிநாட்டுக் கொள்கைகள் வாக்கு வங்கி அரசியலை அடிப்படையாக கொண்டதாக இருக்கக் கூடாது.

2022ஆம் ஆண்டு ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானமொன்று கொண்டுவரப்பட்டது. அந்த தீர்மானத்தின் காலம் முடிவடைவதால் இந்த ஆண்டு செப்டெம்பர் மாதத்தம் மீண்டும் ஒரு தீர்மானத்தை கொண்டுவர உள்ளனர். இந்த தீர்மானம் குறித்த அறிக்கையை சமர்ப்பித்துள்ளனர்.

குறித்த தீர்மானத்தை நாங்கள் நிராகரித்துள்ளோம். தற்போதைய தீர்மானத்திற்கான காலம் முடிவடைவதால், அதைத் தொடர புதிய தீர்மானத்தை அவர்கள் அறிமுகப்படுத்த வேண்டும். அதனையே நிராகரித்துள்ளோம்.

எவ்வாறாயினும், மனித உரிமைகள் பேரவையின் அணுகுமுறையை நாங்கள் ஏற்கவில்லை என்பதைக் குறிப்பிடுவது முக்கியம்.

குறிப்பாக, தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, வெளிநாட்டில் நீதிமன்ற வழக்கைத் தொடங்குவதற்கான முன்மொழிவுடன் நாங்கள் முற்றிலும் உடன்படவில்லை. இது நமது இறையாண்மைக்கும் எமது சட்ட அமைப்புக்கும் எதிரானது. இலங்கையின் நீதித்துறை அத்தகைய தலையீட்டை அனுமதிக்காது.

வெளிநாட்டு சக்திகளுக்கு நாம் கூறுவது என்னவென்றால், 15 வருடங்களுக்கு முன்னர் முடிவடைந்த மோதலுக்கு தீர்வு காண்பதற்கு உள்ளக நடவடிக்கைகளை இலங்கை நடைமுறைப்படுத்தியுள்ளது. அதுதான் இலங்கையின் செயல்முறை. எமது சமூகங்களுக்குள் பிளவுகளை ஏற்படுத்த வெளிச் சக்திகள் முயற்சிப்பதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.

இந்தத் தலையீட்டின் பின்னணியில் உள்ள உந்துதல் என்னவென்றால் இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து மேற்குலக நாடுகளின் வாழும் மக்களின் வாக்களாகும்.

இதைத்தான் நாங்கள் வாக்கு வங்கி அரசியல் என்று அழைக்கிறோம். மேலும் இலங்கை தொடர்பான இந்த நாடுகளின் வெளியுறவுக் கொள்கைகளை நிராகரிக்கிறோம்.

மனித உரிமைகள் பேரவை அதன் எல்லைக்குள் இருந்தால், அவர்களுடன் ஒத்துழைப்போம். மனித உரிமைகள் பேரவைக்கு பொருளாதாரம் பற்றி என்ன தெரியும்? பொருளாதார விடயங்களில் நிபுணர்களான ஐஎம்எப் (IMF), உலக வங்கி, அமெரிக்க திறைசேரி மற்றும் ஜப்பானிய வெளியுறவு அமைச்சுடன் இணைந்து பணியாற்றுகிறோம்.” என்றார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஜனாதிபதி வேட்பாளர்கள் அளித்துவரும் வாக்குறுதிகள் குறித்து கருத்து தெரிவித்த அலி சப்ரி, அவ்வாறு செய்வது வரவிருக்கும் மாதங்களில் எதிர்பார்க்கப்படும் சுமார் 1.3 பில்லியன் அமெரிக்க டொலர் அந்நிய செலாவணி உதவியை பாதிக்கலாம் என எச்சரித்தார்.