மேற்கத்திய நாடுகளுக்கு புடின் கடும் எச்சரிக்கை: ஆயுதங்கள் தயார் நிலையில்

0
9
Article Top Ad

தொலைதூர ஏவுகணைகளைப் பயன்படுத்தி ரஷ்யா மீது தாக்குதல் நடத்த உக்ரேனை அனுமதித்தால் அது ரஷ்யாவுடன் மேற்கத்திய நாடுகள் நேரடியாகப் போரிடுவதற்குச் சமமாகும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.

அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் போரின் தன்மை மாறிவிடும் என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேற்கத்திய நாடுகளிடமிருந்து பெற்றுக்கொண்ட ஏவுகணைகளை ரஷ்யாவுக்கு எதிராகப் பயன்படுத்த அனுமதி வழங்கும்படி கூட்டணி நாடுகளிடம் உக்ரேனிய ஜனாதிபதி வொலோடிமியர் ஸெலென்ஸ்கி கடந்த பல மாதங்களாக மன்றாடி வருகிறார்.

மேற்கத்திய நாடுகள் அனுப்பிவைத்துள்ள ஏவுகணைகளை இயக்கும் ஆற்றல் உக்ரேனுக்கு இல்லை என்றும் நேட்டோ உதவி செய்தால் மட்டுமே உக்ரேனால் அவற்றைப் பயன்படுத்த முடியும் என்று புடின் கூறியுள்ளார்.

ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகளின் ஏவுகணைகளைப் பாய்ச்ச உக்ரேனுக்கு அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் உதவினால் அதற்குத் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் புடின் எச்சரித்துள்ளார்.

ஆனால் எத்தகைய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவிக்கவில்லை.

ரஷ்யாவுக்கு எதிராக மேற்கத்திய நாடுகள் செயல்பட்டால், வெளிநாடுகளில் அவற்றுக்குச் சொந்தமான படைகள், உடைமைகள் ஆகியவை மீது தாக்குதல் நடத்த மேற்கத்திய நாடுகளின் எதிரிப் படைகளுக்கு ரஷ்யா ஆயுதங்கள் அனுப்பிவைக்கக்கூடும் என்று புடின் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார்.

மேலும் அமெரிக்காவையும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளையும் எட்டக்கூடிய ஏவுகணைகளைத் தயார்நிலையில் வைப்பது குறித்தும் கடந்த ஜூன் மாதத்தில் அவர் உத்தரவிட்டிருந்தார்.

2022ஆம் ஆண்டில் உக்ரேனுக்கு எதிராக ரஷ்யா படையெடுத்ததை அடுத்து, பனிப்போர் காலகட்டத்துக்குப் பிறகு மேற்கத்திய நாடுகளுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான உறவு பாரிய விரிசலை சந்தித்துள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here