அனுரவின் ஆட்சி செயற்பாடுகள் திருப்திகரமாக உள்ளன: தமிழரை தேசிய இனமாக அங்கீகரித்தால் இணைந்து செயற்பட தயார்

0
13
Article Top Ad

புதிய ஜனாதிபதியின் போக்கு திருப்திகரமாக இருக்கிறது. அவர் தமிழ் மக்களை தேசமாக அங்கீகரித்து செயற்பட்டால், அவருடன் இணைந்து பயணிப்போம் என நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சி. வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஜனாதிபதி அநுரவிற்கு நாடாளுமன்றில் எனக்கு அருகில் உள்ள ஆசனம் தான் ஒதுக்கப்பட்டு இருந்தது. அவர் பேசுவதனை நான் ஆவலுடன் பார்த்துக்கொண்டு இருப்பேன்.

அவர் உற்சாகமாக பேசுவார். யாரவது குறுக்கிட்டால் அவர்களின் பின்னணி பற்றி கதைப்பார். அந்தளவுக்கு மற்றவர்கள் பற்றி நன்கு அறிந்து வைத்திருந்தவர்.

அவர் ஒரு தடவை என்னிடம் கேட்டார். எங்களுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என ஏன் கூறினீர்கள் என, அதற்கு நான் சொன்னேன்.

வடக்கு கிழக்கை பிரித்தது நீங்கள் தான் என தமிழ் மக்களுக்கு தெரியும். அதனால் அவர்கள் உங்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என, அதற்கு அவர் பார்ப்போம் என்றார்.

நான் சொன்ன மாதிரி தமிழ் மக்களின் வாக்குகள் குறைவாகவே கிடைத்தது. அவர் ஜனாதிபதியாக பதவியேற்றதும் அவருக்கு வாழ்த்து கூறிய போது , நான் சொன்ன மாதிரி தமிழ் மக்கள் பெரியளவில் உங்களுக்கு வாக்கு போடவில்லை என கூறினேன்.

அதேநேரம் , தமிழ் மக்களை நீங்கள் ஒரு தேசிய இனமாக , தேசியமாக கருதி செயற்பட்டால் நாமும் உங்களுடன் இணைந்து பயணிக்க முடியும் என கூறினேன். அவர் அதற்கு எதுவும் சொல்லவில்லை.

இதுவரையில் அவரின் செயற்பாடு திருப்திகரமாக எனக்கு தெரிகிறது. எனது பாதுகாப்புக்கு இருந்த நாலு பொலிஸாரையும் திருப்பி எடுத்து விட்டார்கள். அதனால் எனக்கு எந்த பாதிப்பும் இல்லை. மனஸ்தாபமும் இல்லை.

பதுளையில் நான் மேல் நீதிமன்ற நீதிபதியாக இருந்த 1988ஆம் ஆண்டு கால பகுதியில் ஜே.வி.பி கிளர்ச்சி உக்கிரமடைந்திருந்த கால பகுதி. அப்போது எனக்கு பொலிஸ் பாதுகாப்பு தர கேட்டார்கள். நான் வேண்டாம் என மறுத்து விட்டேன்.

ஏனெனில் ஜே.வி.பி யினர் ஆயுதங்களுக்காக பொலிஸாருடன் சண்டை போடுவார்கள். அதனால் எனக்கு தான் தேவையில்லா பிரச்சனை அதனால் பொலிஸ் பாதுகாப்பு வேண்டாம் என கூறி தனிய இருந்தேன்.

அதனால் தற்போது எனக்கு இருந்த பாதுகாப்பு எடுக்கப்பட்டது தொடர்பில் எனக்கு எந்த மனஸ்தாபமும் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.