விம்பிள்டன் போட்டிகளில் 20வது கிராண்ட்ஸலாம் சம்பியன் பட்டத்தை வெல்வாரா ஜொஜோவிச் ?

0
233
Article Top Ad

இம்மாத நடுப்பகுதியில் நிறைவுற்ற பிரஞ்சு பகிரங்க டென்னிஸ்போட்டியில் ஆடவர் ஒற்றையர் சம்பியன் பட்டத்தை வென்றெடுத்திருந்தார் சேர்பிய வீரர் நொவாக் ஜொகோவிச் . இது அவரது 19வது கிராண்ட்ஸ்லாம் சம்பியன் பட்டமாக அமைந்தது.

இன்று திங்கட்கிழமை ஜுன் 28ம் திகதி முதல் ஜுலை 11ம் திகதிவரை நடைபெறவுள்ள இம்முறை விம்பிள்டன் போட்டிகளில் தமது 20வது கிராண்ட்ஸ்லாம் சம்பியன் பட்டத்தை வென்றெடுக்க எதிர்பார்ப்பதாக ஜொகோவிச் கூறியுள்ளார்.

உலகின் முன்னணி டென்னிஸ் வீரர்களில் ஒருவரான ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் போட்டிகளில் பங்கேற்காத நிலையிலும் சுவிட்ஸர்லாந்தின் நட்சத்திரவீரர் ரொஜர் பெடரர் உபாதையில் இருந்து சில நாட்களுக்கு முன்பே மீண்டுவந்துள்ள நிலையிலும் இம்முறை விம்பிள்டன் போட்டிகளில் வெற்றிபெறும் வாய்ப்பு நொவாக் ஜொகோவிச்சிற்கு அதிகமாக உள்ளது.

இரண்டு வாரங்களுக்கு முன்னர் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்ற ஆண்டின் இரண்டாவது கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடரில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் உலகின் முதல்நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் சம்பியன் பட்டம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எதிர்பார்ப்பு மிக்க இறுதிப் போட்டியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் கிரேக்கத்தின் ஸ்டெபீனோஸ் ஸிட்சிபாசை எதிர்கொண்டார்.

பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் முதலிரண்டு செட்டுகளை 7-6, 6-2 என்ற கணக்கில் ஸ்டெபீனோஸ் ஸிட்சிபாஸ் கைப்பற்றினார்.

இதையடுத்து நடைபெற்ற செட்டுகளில் ஆதிக்கம் செலுத்திய ஜோகோவிச் தொடர்ந்து 6-3, 6-2, 6-4 என்ற செட் கணக்குகளில் வெற்றிபெற்று சம்பியன் கிண்ணத்துக்கு முத்தமிட்டார்.

இந்த வெற்றியானது பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடரில் ஆறு ஆண்டுகளுக்கு பிறகு ஜோகோவிச், பெற்ற சம்பியன் பட்டமாகும். முன்னதாக 2016ஆம் ஆண்டு முதல் முறையாக பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் சம்பியன் பட்டத்தை வென்றிருந்தார்.

இதுதவிர நோவக் ஜோகோவிச் ஒட்டுமொத்தமாக பெற்ற 19ஆவது கிராண்ட்ஸ்லாம் சம்பியன் பட்டம் இதுவாகும்.