55 வருடங்களில் முதற்தடவையாக கால்பந்து போட்டியில் ஜேர்மனியைத் தோற்கடித்த இங்கிலாந்து

0
287
Article Top Ad

இங்கிலாந்து கால்பந்தாட்ட அணி சர்வதேச அளவில் வென்றெடுத்த ஒரே கிண்ணமான 1966 உலகக்கிண்ணத்தின் இறுதியாட்டத்திற்கு பின்னர் 55 வருடங்கள் கழித்து இங்கிலாந்து அணி நேற்று ஜேர்மனியைத் தோற்கடித்துள்ளது.

1966ம் ஆண்டில் இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கிண்ண கால்பந்தாட்ட இறுதியாட்டத்தில் ஜேர்மனி அணிக்கெதிரான 4ற்கு 2 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது இங்கிலாந்து அணி.

அதன்பின்னர் உலகக்கிண்ணப் போட்டிகளிலோ யூரோ போட்டிகளிலோ இங்கிலாந்து அணியால் ஜேர்மனியைத் தோற்கடிக்கமுடியாதிருந்த வரலாறு நேற்றையதினம் நடைபெற்ற யூரோ போட்டிகளில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

போட்டியின் 75வது நிமிடத்தில் ரஹீம் ஸ்டேர்லிங்கும் 84வது நிமிடத்தில் அணித்தலைவர் ஹரி கேனும் அடித்த கோல்களின் துணையுடன் 2ற்கு0 என்ற கணக்கில் வெற்றிபெற்றது இங்கிலாந்து அணி.

நேற்றையதினம் நடைபெற்ற மற்றுமொரு போட்டியில் சுவீடன் அணியைத் தோற்கடித்த உக்ரேய்ன் அணியை எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள யூரோ காலிறுதியாட்டத்தில் எதிர்த்தாடவுள்ளது.

1960 ஆண்டு முதல் நடைபெற்றுவரும் யூரோ போட்டிகளில் இதுவரை இங்கிலாந்து சம்பியன் பட்டம் வெல்லவில்லை. முன்னாள் சம்பியன்களான பிரான்ஸ் ஜேர்மனி நெதர்லாந்து ஆகியவற்றுடன் நடப்புச்சம்பியன்கள் போர்த்துக்கல்லும் வெளியேறியுள்ள நிலையில் இம்முறை இங்கிலாந்துக்கு வாய்ப்புக்கள் பிரகாசமாக உள்ளன. ஆனாலும் இன்னமும் மற்றைய முன்னாள் சம்பியன்களான இத்தாலி ஸ்பெயின் செக் குடியரசு மற்றும் டென்மார்க் ஆகியன எஞ்சியுள்ளமை குறிப்பிடத்தக்கது.