சிறுவர்கள் உட்பட நூற்றுக்கணக்கான நிராயுதபாணி தமிழர்களை அரச பாதுகாப்புப் படையினர் கொன்றதாக குற்றம் சுமத்தப்பட்ட பாரிய படுகொலையின் 384ஆவது நினைவேந்தல் நிகழ்வு கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்றுள்ளது.
கொல்லப்பட்ட 230 பேரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு, மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை, மகிழடித்தீவில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபிக்கு முன்பாக, கடந்த செவ்வாய்க்கிழமை (ஜனவரி 28) நினைவேந்தல் இடம்பெற்றதாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இலங்கை தமிழ் அரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இளையதம்பி சிறிநாத், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் ஆகியோரின் பங்கேற்புடன் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் உயிரிழந்தவர்களின் உறவினர்களும் கலந்துகொண்டனர்.
படுகொலைகள் இடம்பெற்று 38 வருடங்கள் கடந்துள்ள நிலையில், கொலையை மேற்கொண்ட இராணுவத்தினருக்கோ அல்லது அதன் பின்னணியில் உள்ளவர்களுக்கோ எதிரான விசாரணைகள் ஆரம்பிக்கப்படவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேத்திரனே ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார்.
“படுவான்கரையில் இராணுவத்தினர் மேற்கொண்ட படுகொலையில் 157ற்கும் அதிகமானவர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். அதனைவிட கணக்கெடுக்க முடியாத வகையில் படுகொலைகள் முன்னெடுக்கப்பட்டன. பாரிய இனப்படுகொலையொன்று முன்னெடுக்கப்பட்டது. 1987ஆம் ஆண்டு என்பது கிழக்கு மாகாணத்தில் இந்த கொக்கட்டிச்சோலை பகுதியில் பெரியளவிலான படுகொலை முன்னெடுக்கப்பட்டது.”
இரத்தம் தோய்ந்த ஜனவரி 1987
மட்டக்களப்பு மாவட்டத்தில் கொக்கட்டிச்சோலை எனப்படுவது விவசாயம், மீன்பிடி மற்றும் இறால் வளர்ப்பு போன்றவற்றை தமது வாழ்வாதாரமாக கொண்ட மக்கள் வாழும் பிரதேசமாகும்.
1987 ஆம் ஆண்டு ஜனவரி 28ஆம் திகதி தொடக்கம் மூன்று நாட்களாக தமது கிராமத்தை தாக்கிய இலங்கை அரசாங்கத்தின் படைகளால் கிராம மக்கள் கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களுக்கு உள்ளானதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
பின்னர், கொண்டவட்டுவான், களுவாஞ்சிக்குடி, வெல்லாவெளி மற்றும் கல்லடி முகாம்களில் இருந்து வந்த படையினர் வாகனங்கள் மற்றும் ஹெலிகொப்டர்கள் மூலம் கிராமத்திற்குள் நுழைந்தன.
14 முதல் 40 வயதுக்குட்பட்ட கிராமவாசிகளை அவர்கள் கடத்திச் சென்று அவர்களில் பெரும்பாலானவர்களைக் கொன்றதாக உள்ளூர்வாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
கொக்கட்டிச்சோலை மகிழடித்தீவில் இறால் பண்ணை அமெரிக்காவின் உதவியுடன் இயங்கி வந்தது. அங்கு ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிந்ததோடு, 1987 ஜனவரி 28 அன்று கொல்லப்பட்டவர்களும் இந்த இறால் பண்ணையில் வேலை செய்த தொழிலாளர்களில் அடங்குவர்.
கொக்கட்டிச்சோலை அரிசி ஆலையில் தஞ்சமடைந்த 24 பேரும் இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக பிரதேசவாசிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். கொல்லப்பட்டவர்களில் 12 பேர் 12 வயதுடையவர்கள்.
இந்த இறால் பண்ணையில் செல்லத்துரை ரவிநாதன் என்பவர் காவலாளியாக இருந்தார். படுகொலை நடந்த அன்று ரவிநாதன் பகல்வேளை பணியில் ஈடுபட்டிருந்தார். இந்த சம்பவம் குறித்து அவர் அந்த நேரத்தில் ஊடகங்களிடம் இவ்வாறு கருத்து வெளியிட்டிருந்தார்.
“நான் காலையில் வேலைக்குச் சென்றேன். வழமையை விட அன்று காலை இரண்டு மூன்று ஹெலிகொப்டர்கள் வானத்தில் சுற்றிக் கொண்டிருந்தன. ஏதோ விசித்திரமாக நடக்கப்போகிறது என நினைத்தேன். நான் பலருடன் இறால் பண்ணைக்கு ஓடினேன். வெள்ளையர்களுக்கு இறால் பண்ணையை வைத்திருந்ததால் நாங்கள் அங்கே பாதுகாப்பாக இருப்போம் என்ற நம்பிக்கை எங்கள் அனைவருக்கும் இருந்தது. இதற்கு முன் இரண்டு முறை பிடித்து விசாரணை நடத்திய போதும், இராணுவம் எங்களை விடுவித்தது. அங்கு பாதுகாப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையால் அங்கு ஓடினோம். சந்தியில் ஒரு பெரிய இராணுவ வாகனம் இருந்தது. இராணுவத்தினர் வாகனத்தில் இருந்து குதித்து வீதிக்கு வந்தனர். STF எப்படி இருக்கும் என்பதை அன்றுதான் நாங்கள் முதல் முறையாக அறிந்துகொண்டோம். வீதிக்கு வந்த இராணுவத்தினர் இறால் பண்ணை இருக்கும் திசையில் துப்பாக்கியை நீட்டினர். ஒரு நபர் துப்பாக்கியுடன் எங்களை நோக்கி வந்தார். இதைப் பார்த்து எங்களுடன் இருந்த இரண்டு மூன்று பேர் குனிந்து மெதுவாக அந்த நீர்வழிப் பாதையில் மறுபக்கம் சென்றனர்.”
முதலைக்குடா, முனைக்காடு, மகிழடித்தீவு, அம்பிளாந்துறை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இராணுவத்தினர் வசமாகியிருந்ததாக தெரிவித்த ரவிநாதன், தனது அனுபவத்தை மேலும் விபரித்திருந்தார்.
“நாங்கள் இருந்த இடத்திற்கு மூன்று இராணுவத்தினர் வந்தனர். அவர்கள் கூச்சலிட்டு எங்களை ஒரே இடத்தில் கூடுமாறு சொன்னார்கள். அனைவரும் அச்சத்தில் நடுங்கினர். அப்போது துப்பாக்கியால் சுட்டனர். அப்போது அனைவரும் அங்கிருந்து ஓடிவிட்டனர். நான் இறால் பண்ணையில் உள்ள ஒரு செடியில் ஒளிந்து கொண்டேன். எங்களுக்கு முன்னரே தேவநாயகம் என்ற சிறுவன் ஓடிப் போனான். திடீரென்று துப்பாக்கிச் சத்தம் கேட்டது. அவருக்கு என்ன ஆனது என்று எங்களுக்குத் தெரியாது. உடனே அருகில் இருந்த சிறிய மரத்தில் ஒளிந்து கொண்டேன். நேசதுரை என்ற சிறுவனும் என் முன்னே இதையே செய்தான்.”
இதற்கிடையில் மக்கள் ஓடும் பகுதியில் இராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் செல்லத்துரை ரவிநாதன் கூறியுள்ளார்.
“சிறு பறவைகளை விரட்ட, இறால் பண்ணையில் இருந்த சிறுவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள். இந்த ஏழை சிறுவர்கள் அதிகாலையில் பண்ணைக்கு வந்து, அங்கு வளர்க்கப்படும் இறால்களை எந்தப் பறவையும் தாக்காமல் பார்த்துக் கொள்கின்றனர். இந்தப் பணிக்காக எவ்வளவு சிறிய தொகையாக இருந்தாலும் அந்த பணத்தை அவர்கள் எதிர்பார்ப்பார்கள். இந்த ஏழை சிறுவர்கள் மீது என்ன மனதுடன் துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள்?”
தனது உயிரைக் காக்க எடுத்த நடவடிக்கைகளை இவ்வாறு விபரித்திருந்தார் செல்லத்துரை ரவிநாதன்.
“நான் அணிந்திருந்த ஆடைகளைக் களைந்துவிட்டு சிறு காட்டிற்குள் ஓடினேன். ஓடிக்கொண்டிருந்தபோது துப்பாக்கிச் சூட்டு சத்தம் கேட்டது. சிறிது நேரம் கழித்து இறால் பண்ணையின் பக்கமிருந்து எந்த சத்தமும் கேட்கவில்லை. நான் திரும்பிச் செல்ல வேண்டுமென நினைத்தேன். திரும்பிச் சென்று என்ன நடந்தது என்பதைப் பார்க்க வேண்டுமென நினைத்தேன். “மனுசனே, தயவு செய்து திரும்பி போகாதே. அவர்கள் அனைவரையும் சுட்டுக் கொன்றுவிட்டார்கள்.” என, நான் செல்ல முற்பட்டபோது, ஒரு முதியவர் என்னைத் தடுத்தார்.”
படுகொலையை நேரில் பார்த்த அவரது மூத்த சகோதரர் மூன்று நான்கு நாட்கள் சுயநினைவின்றி இருந்ததாக செல்லத்துரை ரவிநாதன் தெரிவிக்கின்றார்.
கொக்கட்டிச்சோலையில் இடம்பெற்ற முதலாவது படுகொலைச் சம்பவத்தின் ஐந்து வருடங்கள் நிறைவடைவதற்குள், மீண்டும் ஒருமுறை, அரசாங்கப் பாதுகாப்புப் படையினரால் 1991ஆம் ஆண்டு அந்தக் கிராமத்தில் மீண்டும் ஒரு படுகொலை நிகழ்த்தப்பட்டது.
1991ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12 ஆம் திகதி கொக்கட்டிச்சோலையில் உள்ள அரிசி ஆலைக்குள் இராணுவத்தினர் நுழைந்து அரிசி ஆலையை எரித்ததில் அங்கு பணியாற்றிய 17 தொழிலாளர்கள் கொல்லப்பட்டதுடன் அருகில் இருந்த 400 வீடுகளையும் ஒரே நாளில் சேதப்படுத்தியதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.