இத்தாலியுடனான சரித்திரத்தை மாற்றி எழுதுமா இங்கிலாந்து?

0
265
Article Top Ad

யூரோ 2020 கால்பந்தாட்ட இறுதிப் போட்டி நாளைய தினம் லண்டன் வெம்பிளி விளையாட்டரங்கில் நடைபெறும் போது தாயக அணியான இங்கிலாந்து மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் இத்தாலி அணிக்கெதிரான சரித்திரத்தை மாற்றி எழுத களமிறங்குகின்றது.

1966ம் ஆண்டில் உலகக்கிண்ண கால்பந்தாட்டப் போட்டியில் சம்பியன் பட்டம் வென்ற பின்னர் கால்பந்தாட்டத்தின் தாயகமாக கருதப்படும் இங்கிலாந்து இதுவரையில் பெரும் சம்பியன்பட்டங்கள் எதனையும் வெல்லவில்லை.

அத்தோடு இறுதிப்போட்டியில் சந்திக்கும் பலம்வாய்ந்த இத்தாலி அணிக்கெதிராக உலகக்கிண்ணப் போட்டிகளிலோ அன்றேல் யூரோ கிண்ண போட்டிகளிலோ இதுவரை எந்த போட்டிகளிலும் வெற்றிபெற்றதில்லை.

இதற்கு முன்னர் நான்கு முறை பெரும்போட்டிகளில் இரு அணிகளும் சந்தித்துள்ளன. இதில் 1980ம் ஆண்டு நடைபெற்ற யூரோ கிண்ண ஆரம்பச் சுற்று போட்டிகளில் 1ற்கு 0 என்ற அடிப்படையில் இங்கிலாந்து இத்தாலியிடம் தோற்றது.

பின்னர் 1990ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கிண்ண த்தின் போது 3வது இடத்திற்கான போட்டியில் 2ற்கு 1 என்ற கணக்கில் தோல்வியுற்றது.

2012ம் யூரோ கிண்ண காலிறுதியில் உத்தியோகபூர்வ மற்றும் மேலதீக நேரங்களில் கோல்கள் ஏதும் பெறப்படாத நிலையில் பெனால்ட்டி சூட் அவுட்டில் 4ற்கு 2 என்ற கோல்கள் கணக்கில் இத்தாலி வெற்றிபெற்றது.

கடைசியாக 2014 உலகக்கிண்ண ஆரம்ப குழுநிலைப்போட்டிகளில் 2ற்கு 1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் இத்தாலி வெற்றிபெற்றது.

இந்த நிலையில் தான் நாளையதினம் இத்தாலி அணியை இங்கிலாந்து சந்திக்கின்றது. 2018ம் ஆண்டு உலகக்கிண்ணத்திற்கே தகுதிபெறத்தவறிய இத்தாலி அணி ரொபர்ட்டோ மன்ஸினி முகாமையாளராக பதவியேற்ற பின்னர் விளையாடிய 38 போட்டிகளில் 28ல் வெற்றிபெற்றுள்ளது.

இரண்டில் மாத்திரமே தோல்வியுற்றுள்ளது. அதிலும் கடைசியாக 33 போட்டிகளில் இத்தாலி அணி தோல்வியடைவில்லை என்பது இங்கிலாந்திற்கு முன்பாக எத்தகைய சவால் காத்திருக்கின்றது என்பதைப் பறைசாற்றுகின்றது.

பலம்வாய்ந்த அணியைக் கொண்டிருக்கும் இங்கிலாந்திற்கு தாயகத்தில் 60,000ற்கும் அதிகமான ரசிகர்கள் புடைசூழ வெம்பிளி விளையாட்டரங்கில் விளையாடுவது பெரும் சாதகமாக பார்க்கப்படுகின்றது.

எனினும் பெரும்போட்டிகளில் 55 ஆண்டுகளாக கிண்ணம் வெல்லாத அணி என்பது சுமார் மூன்றுவருடகாலமாக தோல்வியைத்தழுவாத இத்தாலி அணிக்கெதிராக விளையாடுவதும் பெரும் சவாலாக அமையும் என்பதில் ஐயமில்லை.