கோபா அமெரிக்க சம்பியன் பட்டம் உலகின் தலைசிறந்த கால்பந்தாட்டவீரர் மெஸி என்பதை உறுதிப்படுத்துமா?

0
207
Article Top Ad

தென் அமெரிக்க கால்பந்தாட்ட சம்மேளனத்தால் நடத்தப்படும் கோபா அமெரிக்கா கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளில் 28 ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் ஆர்ஜென்டினா அணி சம்பியன் பட்டம் வென்றுள்ளது.

இன்று அதிகாலை இலங்கை நேரப்படி 5.30ற்கு ஆரம்பமான இந்தப்போட்டியின் 21வது நிமிடத்தில் ஏஞ்சல் டி மரியா மூலம் முதலில் கோல் அடித்த ஆர்ஜென்டினா அணி அதற்குப்பிறகு பிரேஸில் அணியிடம் இருந்து வெளிப்பட்ட வலுவான எதிர்ப்பையும் முறியடித்து சம்பியன் பட்டம் வென்றமை குறிப்பிடத்தக்கது.

1993ம் ஆண்டில் ஈக்வடோர் நாட்டில் நடைபெற்ற கோபா அமெரிக்க போட்டிகளில் ஆர்ஜென்டினா சம்பியன் பட்டம் வென்றிருந்தது.

அதன் பின்னர் 2007, 2015 மற்றும் 2016ம் ஆண்டுகளில் நடைபெற்ற கோபா அமெரிக்க கிண்ண போட்டிகளில் இறுதியாட்டம் வரை முன்னேறியிருப்பினும் கவலைதரும் தோல்விகளை ஆர்ஜென்டினா அணி சந்தித்திருந்தது.

இந்த மூன்று இறுதிப்போட்டிகளிலும் உலகின் தலைசிறந்த கால்பந்தாட்ட வீரர் மகுடத்திற்கு உரித்துடையவராக அடிக்கடி பேசப்படும் லயனல் மெஸி விளையாடியிருந்தாலும் வேதனைதான் எஞ்சியிருந்தது.

கழக மட்டத்தில் அடித்த கோல்கள் சாதித்த சாதனைகள் வென்றெடுத்த கிண்ணங்கள் அபாரமானதாக இருந்தாலும் சர்வதேச மட்டத்தில் தாயக ஆர்ஜென்டினா அணிக்காக கிண்ணத்தை வென்றுகொடுக்காமை கடும் விமர்சனங்களுக்குள்ளானது.

கோபா அமெரிக்க கிண்ணத்தின் மூன்று இறுதி ஆட்டங்களில் அடைந்த தோல்விகளுடன் 2014ம் ஆண்டு பிரேஸிலில் நடைபெற்ற உலகக்கிண்ண இறுதியாட்டத்தில் ஜேர்மனியிடம் அடைந்த தோல்வியும் லயனல் மெஸி

தாயகத்திற்காக விளையாடும் போது கழகத்திற்காக விளையாடும் போது காண்பிக்கும் பற்றுறுதியைக் வெளிப்படுத்துவதில்லை என்ற விமர்சனங்களை வலுப்படுத்தின.

இந்த நிலையில் தான் 2021 கோபா அமெரிக்க கிண்ண போட்டிகளை மெஸி எதிர்கொண்டார். அணி தோல்வியைத் தழுவிய கடைசி நான்கு பெரும் சர்வதேசப் போட்டிகளில் 2015 மற்றும் 2016ல் சிலி அணிக்கெதிரான இறுதிப்போட்டிகள் பெனால்டியில் மிகவும் துயரமிக்க தோல்விகளைத்தந்தன.

இருப்பினும் இம்முறை இறுதிப்போட்டியில் பிரேஸில் அணியை 1ற்கு 0 என்ற கோல்கணக்கில் வீழ்த்தியதன் மூலம் கடந்த கசப்பான தோல்விகள் யாவும் மறைந்துபோயின.

இம்முறை அணியாக ஆர்ஜென்டினா சிறப்பாக விளையாடியதில் மெஸியின் பங்களிப்பு அபரிமிதமானது ஆர்ஜென்டினா சுற்றுப்போட்டியில் நான்கு கோல்களை அடித்ததோடு மட்டுமன்றி சக வீரர் கோல்களை அடிப்பதற்கு ஐந்து முறை பந்துப்பரிமாற்றங்களுடாக பங்களித்திருந்தார்.

இதன் மூலம் அதிக கோல்களை அடித்தவர்களுக்கான கோபா அமெரிக்க விருதும் சுற்றுப்போட்டியின் சிறந்த வீரருக்கான விருதும் மெஸி வசமானது.

உலகக்கிண்ணம், யூரோ மற்றும் கோபா அமெரிக்க கிண்ணத்தில் ரொனால்டோ மெஸியின் பெறுபேறு

 

உலகின் மிகச்சிறந்த கால்பந்தாட்ட வீரர் என்ற மகுடத்திற்கு மெஸின் நெருங்கிய போட்டியாளராக கருதப்படும் கிறிஸ்டியானோ ரொனால்டோ 2016ம் ஆண்டு யூரோ கிண்ண போட்டிகளில் போர்த்துக்கல் அணியை சம்பியன் ஸ்தானத்திற்கு

வழிநடத்தியமை முதலாக சர்வதேசப் போட்டிகள் என்று வரும்போது மெஸியை விட ஒரு படிமேலாகவே பேசப்பட்டார் . அதற்கு இம்முறை கோபா அமெரிக்க வெற்றியின் மூலம் பதிலளித்துவிட்டார் லயனல் மெஸி.

இரண்டு வீரர்களின் சாதனைகளை ஒப்புநோக்கினால் உலகக்கிண்ணம் என்று வருகின்றபோது 2006ம் ஆண்டில் அரையிறுதிவரை சென்றமையே ரொனால்டோவின் சாதனையாக உள்ளது. 2014ல் மெஸி ஒரு படி மேலாக இறுதிப் போட்டிவரை ஆர்ஜென்டினாவை அழைத்துச்சென்றிருந்தார்.

2014ம் ஆண்டு உலகக்கிண்ணத்தை ஆர்ஜென்டினாவால் வெல்ல முடியாமற் போயிருந்தாலும் அந்த உலகக்கிண்ணத்தொடரின் சிறந்த வீரருக்கான விருதை மெஸி வென்றெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இதன்படி உலகக்கிண்ண பெறுபேறுகளில் மெஸி ஒரு படி மேலேயே நிற்கிறார்.

உலகக்கிண்ணத்திற்கு அடுத்து போர்த்துக்கல் அணிக்கு உயர்வான கிண்ணமாக அமையும் யூரோவில் 2004ம் ஆண்டு இறுதிப் போட்டியில் ரொனால்டோ விளையாடியிருந்தார். அப்போது கிரேக்க அணி சம்பியனாகியது.

அதன்பின்னர் 2016ல் பிரான்ஸ் அணிக்கெதிரான யூரோ இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று முதன் முறையாக யூரோ கிண்ண சம்பியனாகியது போர்த்துக்கல் . இதன் போது அணிக்கு ரொனால்டோவே தலைமை தாங்கியிருந்தார்.

மறுமுனையில் உலகக்கிண்ணத்திற்கு அடுத்து ஆர்ஜென்டினாவிற்கு முக்கியமான கோபா அமெரிக்க போட்டிகளில் 2007 ,2015, 2016ல் இறுதி போட்டிகளுக்கு முன்னேறி தோற்ற ஆர்ஜென்டின அணிகளில் மெஸி விளையாடியிருந்தார்.

2019ல் கோபா அமெரிக்க போட்டிகளில் 3ம் இடத்தை ஆர்ஜென்டினா பெற்றிருந்தது. இம்முறை ஆர்ஜென்டினா சம்பியன் பட்டம் வென்றபோது அதற்கு லயனல் மெஸியே தலைமை தாங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில் உலகக்கிண்ணத்திற்கு அடுத்து முக்கியமான சர்வதேச பெரும் போட்டிகளான யூரோ மற்றும் கோபா அமெரிக்க பெறுபேறுகளைப் பார்க்கையில் மெஸியின் பெறுபேறுகளே மேலானதாக காணப்படுகின்றது.

கழக மட்டத்தில் இருவர் அடித்துள்ள கோல்களைப் பார்க்கின்றபோது ரொனால்டோ மொத்தமாக 674 கோல்களை அடித்துள்ள அதேவேளை மெஸி 672 கோல்களை அடித்துள்ளார்.

ஆனால் மெஸியை விட ரொனால்டோ இரண்டு கால்பந்தாட்ட பருவகாலங்கள் அதிகமாக விளையாடியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது. அதேபோன்று சர்வதேசபோட்டிகளில் ரொனால்டோ 109 கோல்களை அடித்து உலகில் அதிக சர்வதேச கோல்களை அடித்தவர்கள் பட்டியலில் ஈரானிய வீரர் அலிடேயுடன் முதலிடத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.

மெஸி இதுவரையில் 76 சர்வதேச கோல்களையே அடித்துள்ளார். இதில் ரொனால்டோ மொத்தமாக 179 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள அதேவேளை மெஸி இதுவரை 151 சர்வதேசப்போட்டிகளிலேயே விளையாடியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

தனிப்பட்ட ரீதியில் எத்தனை கோல்களை அடித்தாலும் அவர்கள் தமது நாட்டிற்காகவும் கழகங்களுக்காகவும் எத்தனை கிண்ணங்களை வென்றுகொடுத்திருக்கின்றார்கள் என்பதில் தான் வரலாற்றில் அவர்களது இடம் பெரிதும் தீர்மானிக்கப்படுவதுண்டு அந்தவகையில் இருவர் வென்றுள்ள கிண்ணங்களின் பட்டியல் இதோ

இருவரும் வென்றெடுத்த ஒட்டுமொத்த கிண்ணங்களின் அடிப்படையிலும் மெஸியே அதிகம் வென்றுள்ளார். இதனை வைத்து மாத்திரம் இருவரில் யார் சிறந்தவர் என்பதைத் தீர்மானிக்க முடியுமா என்று கேட்டால் அதிலும் சிக்கல் உள்ளது. இதற்கு காரணம் கால்பந்தாட்டம் என்பது ஒரு அணி விளையாட்டு .

தமது அணியில் ஏனையவீரர்கள் சிறப்பாக இருக்கும் போதே அணியாக கிண்ணங்களை வெல்லமுடியும். ஒப்பீட்டளவில் ஆர்ஜென்டினா அணி எப்போதுமே போர்த்துக்கல் அணியை விடவும் சிறந்த அணியாக பார்க்கப்படுகின்றது.

அதுபோன்றே பார்சிலோனா அணியும் கழக மட்டத்தில் ரியல் மட்ரிட்டை விட நல்ல வீரர்கள் பலரைக் கொண்ட அணியாக திகழ்ந்தது. இந்த வகையில் மெஸிக்கு இது அனுகூலமானதாக அமைந்ததில் வியப்பில்லை.

இருவரும் தனிப்பட்ட ரீதியில் கால்பந்தாட்ட ஆற்றல் வெளிப்பாட்டிற்காக வென்றெடுத்துள்ள விருதுகளைப் பார்க்கின்றபோது இருவருமே ஒருவருக்கொருவர் சளைக்காதவர்களாக இருக்கின்றனர் என்பதைப் புரிந்துகொள்ளமுடிகின்றது.

இந்தப்பட்டியலில் இன்றையதினம் மெஸி வென்றெடுத்த கோபா அமெரிக்கா 2021 போட்டிகளில் சிறந்த வீரர் மற்றும் அதிக கோல் அடித்தவர் விருது உள்ளடக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோன்று இன்று ஞாயிறு ஐரோப்பிய நேரத்தில் நடைபெறவுள்ள யூரோ இறுதிப்போட்டியில் விளையாடும் வீரர்களில் இங்கிலாந்து அணித்தலைவர் ஹரி கேன் மேலும் இரண்டு கோல்களை அடிக்காவிடின் யூரோ 2021 தொடரில் அதிக கோல்களை அடித்த வீரருக்கான விருது கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு செல்லும் வாய்ப்பு அதிகம் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

இந்தவகையில் இவ்விரு வீரர்களின் பிரசன்னம் கால்பந்தாட்ட விளையாட்டை சிறப்பாக்கிக்கொண்டிருக்கின்றது என்றால் மிகையல்ல. யார் மிகச்சிறந்தவர் என்ற மகுடத்திற்கு இருவருமே உரிமைகோரத்தகுதியானர்கள் என்றால் உங்கள் பதில் என்ன என்பது இங்கே குறிப்பிடுங்கள்