உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், வாக்களிப்பு நிலையங்களைத் தயார்படுத்தும் பணிகள் இன்று (05) காலை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
339 உள்ளூராட்சி மன்றங்களுக்காக, நாடளாவிய ரீதியில் 13,759 வாக்களிப்பு நிலையங்களில் வாக்குப்பதிவு இடம்பெறவுள்ளதோடு, ஒரு கோடியே 71 இலட்சத்து 56,338 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அத்தோடு, உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை இன்னும் பெறாத வாக்காளர்கள் இன்றும் நாளையும் சம்பந்தப்பட்ட தபால் நிலையத்திற்குச் அவற்றைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று தேர்தல் ஆணைக்குழு தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 65,000இற்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலைகளும் இன்றும் நாளையும் மூடப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. பல்கலைக்கழகங்களிலும் மாணவர்களுக்கு விடுமுறை வழங்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

