ஒஸ்கார் ஃபிகாரோ: தன்னம்பிக்கையின் அடையாளம்

0
261
Article Top Ad

2008 பீய்ஜிங் ஒலிம்பிக்கில் படுதோல்வி ஒரு முறை கூட எடையை தூக்க முடியாமல் மிக மோசமான செயல்பாடுகளோடு போட்டியில் இருந்து வெளியேற்றம். கடுமையான விமர்சனங்கள், முதுகுத் தண்டில் வலி, மெல்ல செயலிழக்கும் வலது கை, உடல் மீது போர் தொடுக்கும் வயது என தன்னையும், தன் சூழலையும் வென்ற ஒலிம்பிக் நாயகன் ஒஸ்கர் ஃபிகாரோ (Oscar Figueroa) குறித்து பார்க்கப் போகிறோம்.

நானும் இவர்களோடு சேர்ந்து பயிற்சி பெற விரும்புகிறேன் என சிறுவனாக இருந்த ஆஸ்கர் கேட்டதற்கு ‘வா, வா வந்து பயிற்சி செய்’ என ஊக்கமளித்து பாலபாடம் எடுத்தவர் அவரது முதல் பயிற்சியாளர் டமரிஸ் டெல்காடோ.

‘நான் நம்பர் 1-ஆக இருப்பது பிடிக்கும்’ என ஆஸ்கர் அடிக்கடி கூறுவார். வாகனங்களில் முன் வரிசை காலியாக இருந்தால் அவர் அங்கேயே அமர்ந்து கொள்வார் என ஒஸ்கரின் இளமை காலங்களை நினைவுகூர்கிறார் டமரிஸ்.

அவர் டமரிஸின் பயிற்சிக் கூடத்துக்கு வந்த போது அவருக்கு பளுதூக்குதல் குறித்து ஒன்றுமே தெரிந்திருக்கவில்லை. காலப்போக்கில் சட்டெனெ நுணுக்கங்களைக் கற்றுக் கொள்ளத் தொடங்கினார் என்கிறார் டமரிஸ்.

இளைஞர்களை சுண்டி இழுக்கும் குற்ற சம்பவங்கள் ஆஸ்கரையும் வசீகரித்து வளைத்துப் போட முயன்றது. இருப்பினும் காலம் அவரை ஜெய்பெர் மஞ்சரெஸ் என்கிற பயிற்றுநரிடம் அழைத்துச் சென்றது.

கொஞ்ச காலத்திலேயே ஒஸ்கர் ஒரு நல்ல விளையாட்டு வீரனாக புதிய உச்சங்களைத் தொடும் ஒருவராக வருவார் என அடையாளம் கண்டுகொண்டார் ஜெய்பேர்.

நல்ல பயிற்சியோடு மிகச் சரியான காலகட்டத்தில் பல்வேறு போட்டிகளில் பதக்கம் வென்றார் ஒஸ்கர். 2004ஆம் ஆண்டு ஏதென்ஸில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் 56 கிலோ உடல் எடை பிரிவில் கொலம்பியா சார்பாக பங்கேற்று ஐந்தாவது இடம் பிடித்தார். அப்போது அவருக்கு வயது 21.

சரி அடுத்த ஒலிம்பிக்கில் பதக்கம் உறுதி என நம்பிக்கையோடு பயிற்சியைத் தொடர்ந்தார்.

2008 பெய்ஜிங்கில் 62 கிலோ உடல் எடைப் பிரிவில் தங்கம் எனக்கு தான் என தன்னை மேம்படுத்திக் கொண்டு களமிறங்க தயாராகிக் கொண்டிருந்தவருக்கு முதுகு மெல்ல வலிக்கத் தொடங்கியது.

சரியாக பீய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகளுக்கு சில வாரம் முன்பு ஒஸ்கரின் கழுத்துப் பகுதியில் வலி வலி அதிகரிக்கிறது.

ஒஸ்கரால் முன்பைப் போல பளுதூக்கும் ராடை இறுகப் பற்றிப் பிடிக்க முடியவில்லை. அவர் கையில் இருந்து ராட் நழுவத் தொடங்கியதுஇ அதனோடு அவரது கனவும் நழுவத் தொடங்கியது.

அப்போது எந்த மருத்துவராலும் பிசியோதெரபிஸ்ட்களாலும் அவருக்கு என்ன பிரச்னை என கண்டு பிடிக்க முடியவில்லை. ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கிவிட்டன. ஒஸ்கர் கொலம்பியாவின் பதக்க நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவராகத் திகழ்ந்தார்.

போட்டி நெருங்க நெருங்க ஒஸ்கரின் வலி அதிகரித்தது என்கிறார் மருத்துவர் கார்லோஸ் பொசாடா.

ஒரு உலக தரமான பேட்ஸ்மேன் போல்டாவது எத்தனைஅவமானகரமான விஷயமாக கருதப்படுகிறதோ அப்படி பளுதூக்குதலில் ஒரு முயற்சி கூட வெற்றி பெறாமல் போட்டியில் இருந்து விலகுவது அதற்கு நிகரானது.

ஆம் பதக்கம் வெல்லும் திறன் கொண்ட ஒஸ்கரின் வலது கையால் பளுதூக்கும் ராடை இறுகப் பற்ற முடியவில்லை. அவர் மனதளவிலேயே தளர்ந்திருந்தார் என்கிறார் அவரது ஆரம்ப கால பயிற்றுநர் டமரிஸ்.

ஸ்னாச் முறையில் மூன்று முயற்சிகளும் ஒரே போல அவரது வலது கை பிரச்னையால் தோல்வியடைந்து வெளியேறினார். கண்ணீரும் மருத்துவர் கார்லோஸ் மட்டுமே உடன் இருந்தனர்.

‘என் பயிற்றுநர் என் வலியைக் குறித்தோ என்னைக் குறித்தோ எதையும் தெரிந்து கொள்ள விரும்பவில்லை. போட்டியின் பாதியிலேயே என்னை விட்டுச் சென்றுவிட்டார். அவர் பார்வையில் நான் எதற்கும் பயன்படாத ஒருவனாக இருந்தேன்’ என ஒலிம்பிக்ஸ் சேனலிடம் கூறியுள்ளார் ஒஸ்கர்.

ஒலிம்பிக் போன்ற அழுத்தம் நிறைந்த போட்டியில் ஒரு விளையாட்டு வீரர் பயிற்றுநர் இல்லாமல் பங்கேற்பது சாத்தியமற்ற ஒன்று.

ஒஸ்கருக்கு எதிராக பல கடினமான விமர்சனங்களை முன் வவைத்தனர். ஒஸ்கருக்கு காயம் எதுவும் இல்லை என்றனர். ஒலிம்பிக்கில் விளையாட ஒஸ்கர் விரும்பவில்லை என அவரின் அடிப்படை நோக்கத்தையே கேள்விக்குறியாக்கினர். ஒட்டுமொத்த விளையாட்டு சமூகமும் அவருக்கு எதிராக இருந்தது.

அவருக்கு காயம் ஏற்பட்டதா இல்லையா என விளையாட்டு பத்திரிகைகளில் தலையங்கங்கள் தீட்டப்பட்டன. போட்டியின் போதே கியூபாவைச் சேர்ந்த ஒருவர்இ உங்களுக்கு இருக்கும் பிரச்னை  C6 – C7 Cervical Hernia -வாக இருக்கலாம் என்றார்.

எம்.ஆர்.ஐ பரிசோதனையில் அது உறுதி செய்யப்பட்டது. இந்த நோயால் கை கால்கள் விளங்காமல் போகலாம் என மருத்துவர்கள் கூறினர். அவரது மொத்த உலகமும் இருண்டது.

அதுவரை தான் வாழ்கையில் விடாத கண்ணீரை அந்த இருட்டில் வடித்ததாக ஒஸ்கரே ஒலிம்பிக்ஸ் சேனலிடம் கூறியுள்ளார்.

ஓய்வு பெற்றுவிடலாமா இப்படித் தான் என் விளையாட்டு வாழ்கை முடிவுக்கு வர வேண்டுமா? என குழப்பத்தில் துடித்துக் கொண்டிருந்தார்.

ஏதோ ஒரு சிறிய வெளிச்சம் இதிலிருந்து மீண்டால் என்ன? என அவரை யோசிக்க வைத்தது. முதுகுத் தண்டில் அறுவை சிகிச்சை செய்வது மட்டுமே தீர்வு என்றனர்.

நான் மீண்டும் விளையாட முடியுமா என்பது மட்டுமே ஒஸ்கரின் ஒற்றை கேள்வி.

முடியும் என்றனர்.

சிக்கலான அறுவை சிகிச்சை முடிந்தது.

முழு நம்பிக்கையோடு மீண்டும் பயிற்சிகளைத் தொடங்கினார். மீண்டும் 2012 லண்டன் ஒலிம்பிக்கில் கொலம்பியா சார்பாக கலந்து கொள்ள தகுதிபெற்றார். இருப்பினும் ஒஸ்கர் தன் தங்கப் பதக்கத்தைத் தவற விட்டார்.

2012 லண்டன் ஒலிம்பிக் போட்டியில் ஒஸ்கர் ஃபிகாரோ  வெள்ளிப் பதக்கம் வென்ற பிறகு தனக்கு நெருக்கமான ஒருவரிடம் ‘எனக்கு தங்கம் வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.

இத்தனை நாள் ஒஸ்கரின் விளையாட்டை விமர்சித்துக் கொண்டிருந்தவர்கள் இப்போது அவர் எண்ணத்தை விமசிக்கத் தொடங்கினர்.

பளுதூக்குதல் போன்ற விளையாட்டுகளில் 30 வயதைக் கடந்து முழு செயல்திறனோடு இருப்பது அதே 62 கிலோ உடல் எடையை ஆண்டுக் கணக்கில் கட்டுப்பாடோடு வைத்திருப்பது ஃபிட்னஸ் என இந்த இலக்கு அதிக சவாலானது.

அதை எல்லாம் ஒஸ்கர் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. 2016 ஒலிம்பிக்கில் தங்கம் எனக்கு வேண்டும் என்கிற இலக்கில் குறியாக இருந்தார்.

முதுகு வலி அவரை விடுவதாக தெரியவில்லை. மீண்டும் ஜனவரி 2016-ல் ஒரு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதுவும் ஒலிம்பிக் போட்டிகளுக்கு சுமார் 7 மாதத்துக்கு முன்.

அறுவை சிகிச்சைக்குப் பின் மீண்டும் ஏ பி சி… என பயிற்சியைத் தொடங்கினார். கொலம்பியா அணி ரியோவைச் சென்றடைந்தது. 62 கிலோ உடல் எடைப் பிரிவில் பிரபலமாக இருந்த ஒஸ்கரின் வருகையை பலர் பாராட்டினாலும் அவரது உடல் முன்பைப் போல இல்லை என வருத்தப்பட்டனர்.

ஸ்னாச் பிரிவில் 142 கிலோ எடையையும் க்ளீன் அண்ட் ஜெர்க்கில் 176 கிலோ எடையையும் தூக்கி 318 கிலோ உடன் தன் பல்லாண்டு கனவை நிறைவு செய்தார்.

176 கிலோ க்ளீன் அண்ட் ஜெர்க்கை வெற்றிகரமாக நிறைவு செய்து தங்கத்தை உறுதி செய்த போது மனம் உடைந்து அழத் தொடங்கினார். அரங்கில் உள்ள அத்தனை பேருக்கும் நன்றி கூறினார்.

பளுதூக்கும் வீரர்கள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறும் போது தங்களுக்கென பிரத்யேகமாக தயரிக்கப்பட்ட பளுதூக்கும் காலணிகளை மேடையில் விட்டுச் செல்வது வழக்கம். பளுதூக்கும் ராடை முத்தமிட்டு காலணிகளை விட்டுச் சென்றார்.

குரல் தழுதழுக்க ஆனந்தக் கண்ணீரோடு கொலம்பிய தேசிய கீதம் பாடி தங்கமகனாய் விடைபெற்றார் ஒஸ்கர் ஃபிகாரோ.

இரு முறை முதுகுத் தண்டில் அறுவை சிகிச்சை டன் கணக்கிலான விமர்சனங்கள் அதிகரிக்கும் வயது என எந்த ஆயுதத்தாலும் ஒஸ்கரின் தன்னப்பிக்கையையும் இலக்கையும் சிதைக்க முடியவில்லை.

விடாமுயற்சியின் விஸ்வரூபனாக இப்போதும் ஒலிம்பிக் உலகில் மதிக்கப்பட்டு வருகிறார் நான்கு ஒலிம்பிக் களம் கண்ட நாயகன் ஒஸ்கர் ஃபிகாரோ.

நன்றி பிபிசி