வெகுவிரைவில் அமைச்சரவை மாற்றம்?பீரிஸுக்கு வெளிவிவகாரம் டினேஸுக்கு உயர்கல்வி ரமேஸுக்கு சுகாதாரம் !

0
254
Article Top Ad

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ வெகுவிரைவில் அமைச்சரவை மாற்றத்தை மேற்கொள்ள உத்தேசித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெளிவிவகாரம், சுகாதாரம் மற்றும் உயர் கல்வி உட்பட முக்கிய அமைச்சுக்களில் வெகுவிரைவில்  மாற்றம் இடம்பெறுமென எதிர்பார்க்கப்படுவதாக டெய்லி எவ்.டி. பத்திரிகை செய்திவெளியிட்டுள்ளது.

தற்போது உயர்கல்வி அமைச்சராக உள்ள பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் புதிய வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்படவுள்ள அதேவேளை தற்போதைய வெளிவிவகார அமைச்சர் டினேஷ் குணவர்த்தன பீரிஸின் அமைச்சிற்கு மாற்றப்படவுள்ளதாக அந்தப் பத்திரிகை மேலும் தகவல் வெளியிட்டுள்ளது.

இதனைத்தவிர தற்போதைய பெருந்தோட்டத்தொழிற்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரண, புதிய சுகாதாரத்துறை அமைச்சராக நியமிக்கப்படவுள்ள அதேவேளை அவரது அமைச்சரவை இணைப்பேச்சாளர் சகாவாக திகழும் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, புதிய பெருந்தோட்ட தொழிற்துறை அமைச்சராக நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது எரிசக்தி துறை அமைச்சராக விளங்கும் டலஸ் அழகப்பெருமவிற்கு ஊடகத்துறை அமைச்சுப்பதவி வழங்கப்படவுள்ளதாகவும் மேலும் தகவல் வெளியாகியுள்ளது.

தற்போதைய சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி எரிசக்தி துறையின் புதிய அமைச்சராக நியமிக்கப்படவுள்ளதாகவும் தற்போதைய சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க புதிய கல்வி அமைச்சராக நியமிக்கப்படவுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது. நேற்றைய தினம் அமைச்சரவை மாற்றம் இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்டதாகவும் அது கைகூடாத நிலையில் இன்றோ அடுத்துவரும் சில தினங்களிலோ மாற்றம் இடம்பெறலாம் என டெய்லி எவ்.டி மேலும் தகவல் வெளியிட்டுள்ளது.