வவுனியா கூமாங்குளத்தில் மக்கள் எதிர்ப்பு – பொலிஸ் துரத்தியதால் மரணம் என தெரிவிப்பு

0
194
Article Top Ad

வவுனியா கூமாங்குளம் பகுதியில் நேற்று (11) இரவு போக்குவரத்து ஒருவர் மரணித்துள்ளதோடு, பொலிஸார் துரத்தியதால் இந்த மரணம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

நேற்றிரவு 10 மணியளவில், மதுபான விற்பனை நிலையம் அருகே மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவரை, பொலிஸார் துரத்திச் சென்றுள்ளனர். அந்த நேரத்தில், அவரது வாகன சக்கரத்தில் மரக்கட்டை ஒன்றையும் போட்டு தடை ஏற்படுத்தியதாக ஊர்மக்கள் கூறுகின்றனர். இதனால் நிலை தடுமாறி விழுந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இறந்தவர் 58 வயதுடைய இராமசாமி அந்தோணிப்பிள்ளை என அடையாளம் காணப்பட்டுள்ளார். சடலத்தின் அருகில் பெயர் பொறிக்கப்பட்ட ஒரு பொலிஸ் சின்னமும்  காணப்பட்டுள்ளது.

சம்பவத்தைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த இளைஞர்களும் பொதுமக்களும், பொலிஸாரின் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஒரு வாகனத்தை சேதப்படுத்தினர். மேலும், ஒரு பொலிஸ் உத்தியோகத்தரை சிறிது நேரம் சிறைப்படுத்தி வைத்துள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலத்தை நீதிபதி வரும்வரை அகற்ற அனுமதிக்கமாட்டோம் என மக்கள் வலியுறுத்தினர். இது காரணமாக பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

பொலிஸ் அதிகாரிகள் மற்றும் விசேட அதிரடிப் படையினர், கலக தடுப்பு பொலிஸார் அப்பகுதிக்கு அழைக்கப்பட்டனர். பின்னர், திடீர் மரண விசாரணை அதிகாரி வருகைதந்து, விசாரணைகளை மேற்கொண்டு, கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் சடலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த சம்பவம் கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டு , தொடர்புடையவர்கள் மீது விசாரணை நடத்தப்படும் என வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்துள்ளார். அதன் பின்னரே சடலத்தை அங்கிருந்து கொண்டுசெல்ல முடிந்தது.