அகமதாபாத் விமான விபத்து: எரிபொருள் விநியோக தடையே முதன்மையான காரணம் என அறிக்கை

0
195
Article Top Ad

அகமதாபாத்திலிருந்து லண்டன் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், புறப்பட்டு சில விநாடிகளிலேயே மருத்துவக் கல்லூரி விடுதி மீது விழுந்து நொறுங்கியதில் ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பாக, விமான விபத்து புலனாய்வுப் பணியகம் (AAIB) தாக்கல் செய்த முதற்கட்ட விசாரணை அறிக்கை முக்கிய தகவல்களை வெளிப்படுத்தியுள்ளது.

AAIB குழு தயாரித்த 15 பக்க அறிக்கையில், விபத்திற்கான முதன்மை காரணமாக விமானத்தின் இரண்டு இயந்திரங்களுக்கும் எரிபொருள் விநியோகம் தடைபட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானம் புறப்பட்டு சில நொடிகளுக்குள் இந்த தடை ஏற்பட்டதால், இரண்டு என்ஜின்களும் முற்றிலுமாக செயலிழந்துள்ளன.

அதற்குப் பிறகு, விமானியை அவசரநிலையில் பயணிக்கச் செய்யும் RAT (Ram Air Turbine) அமைப்பை இயக்க முயற்சி செய்யப்பட்டு, ஒரு இயந்திரம் மட்டும் மீண்டும் செயற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், குறைந்த சக்தியுடன் இயங்கியதால், விமானம் மேலே செல்ல முடியாமல், கீழே விழுந்து கட்டடங்களுடன் மோதி தீப்பிடித்து முற்றிலும் சேதமடைந்துள்ளது.

அறிக்கையில், இரண்டு விமானிகளிடையே நடந்த உரையாடலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில், ஒருவர், “எரிபொருள் செல்லும் வழியை ஏன் அடைத்தீர்கள்?” என கேட்க, மற்றவர் “நான் அடைக்கவில்லை” என பதிலளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, தொழில்நுட்பச் சிக்கலா அல்லது மனிதப் பிழையா என்பதில் இன்னும் தெளிவு இல்லை.

தற்போது வெளியானது முதற்கட்ட அறிக்கையாகும். முழுமையான விசாரணை அறிக்கை வெளியாக இன்னும் ஆறு மாதங்கள் தேவைப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஜூன் 12ஆம் திகதி இடம்பெற்ற இந்த பாரிய விபத்தில், விமானத்தில் பயணித்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்தனர். மேலும், விடுதி மற்றும் அதன் அருகிலிருந்தவர்கள் 19 பேர் மரணமடைந்த நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 260 ஆகும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.