யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தி பகுதியில் காணப்படும் மனித புதைகுழி தொடர்பில், இலங்கை அரசாங்கத்திடம் நேரடியாக கேள்வியெழுப்பியதாக பிரிட்டன் வெளியுறவுச் செயலாளர் டேவிட் லாமி தெரிவித்துள்ளார். இந்தப் புதைகுழி தொடர்பாக தாம் ஆழ்ந்த கவலையடைவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பிரிட்டன் பாராளுமன்ற வெளியுறவுக் குழு கலந்துரையாடலின் போது, பாராளுமன்ற உறுப்பினர் உமா குமரன் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் லாமி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த உமா குமரன், மூன்று குழந்தைகள் உட்பட பலரது என்புத்தொகுதிகள் கண்டெடுக்கப்பட்ட இந்த புதைகுழி, தமிழர்களின் நீண்ட கால போராட்டத்தின் இன்னொரு வேதனையான நினைவாகும் என்று குறிப்பிட்டார். கடுமையான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட இலங்கை இராணுவ அதிகாரிகள் மீது தடைகளை விதிக்க பிரிட்டன் அரசாங்கம் சமீபத்தில் எடுத்த முடிவையும் அவர் பாராட்டினார்.
இந்த அகழ்வில் சர்வதேச தரநிலைகளுக்கு ஏற்ப புதைகுழிகளை தோண்டி எடுப்பதற்கான வளங்கள் இலங்கையில் இல்லை என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் அலுவலகம் எச்சரித்ததையும், இது சர்வதேச கண்காணிப்புடன் நடைபெற வேண்டியது அவசியம் என்றும் உமா குமரன் வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்த லாமி, இவ்விடயம் தொடர்பாக கடந்த மாதம் இலங்கை அரசாங்கத்திடம் பேசியதாகக் கூறினார். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுடனும், சமூக அமைப்புகளுடனும் பிரிட்டன் நெருக்கமாக செயற்படுகின்றது என்றும் கூறினார்.
மேலும், இந்த அகழ்வில் தேவைப்படும் தொழில்நுட்ப நிபுணத்துவ உதவியை வழங்கும் வாய்ப்புகளை ஆராய்வதாகவும் லாமி குறிப்பிட்டார்.
செம்மணி சித்துப்பாத்தி மைதானத்தில் முன்னெடுக்கப்பட்ட முதலாம் மற்றும் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணியில் மொத்தம் 65 என்புத்தொகுதிகள் கண்டெடுக்கப்பட்டன. அகழ்வுப் பணிகள் தற்போது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதோடு, எதிர்வரும் 21ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படவுள்ளது.

