வடக்கு கிழக்கில் நிலைகொண்டிருக்கும் இராணுவத்தால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்க்கவும், முல்லைத்தீவு – முத்தையன்கட்டு பகுதியில் இளைஞன் ஒருவர் உயிரிழந்த சம்பவத்திற்கு நீதி கோரியும் ஓகஸ்ட் 15ஆம் திகதியன்று தமிழரசுக் கட்சி ஏற்பாடு செய்துள்ள ஹர்த்தாலுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் மற்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசனும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ஜீவன் தொண்டமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், முல்லைத்தீவு சம்பவத்தைக் கண்டித்து முன்னெடுக்கப்படும் ஹர்த்தாலுக்கு, இலங்கையராகவும், மலையகத் தமிழராகவும் தனது முழு ஆதரவை வழங்குவதாகக் குறிப்பிட்டுள்ளார். நீதிக்கான கோரிக்கையிலும், இராணுவத்தின் அநீதியான நடவடிக்கைகளுக்கு எதிராகவும் நடைபெறும் இந்த ஹர்த்தாலுக்கு தனது ஒற்றுமையையும் உறுதியான ஆதரவையும் வெளிப்படுத்துவதாகவும், யுத்தம் முடிந்து 16 ஆண்டுகளாகியும் இத்தகைய மனிதாபிமானமற்ற செயல்கள் நடைபெறுவது வருத்தமளிப்பதாகவும், இவற்றை ஏற்க முடியாதெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் மனோ வெளியிட்ட அறிக்கையில், பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இந்தச் சம்பவம் குறித்து உடனடியாக விசாரணை நடத்தி, குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். மேலும், வடக்கு – கிழக்கில் உள்ள மேலதிக இராணுவப் பிரசன்னத்தைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரியுள்ளார்.
இன அடிப்படையிலான போர் செய்த இராணுவ வீரர்களின் மனங்களில் இனவாதம் உள்ளதாகவும், அவர்களை தென்னிலங்கைக்கு அழைத்து வந்து, குளம் வெட்டுதல், வீதி அமைத்தல், வீடு கட்டுதல், விருந்தகங்கள் நடத்துதல், தோட்டம் செய்தல், காய்கறி சந்தை நடத்துதல் போன்ற அபிவிருத்திப் பணிகளில் ஈடுபடுத்த வேண்டுமெனவும் மனோ கூறியுள்ளார்.
முன்னைய அரசாங்கங்கள் செய்தவற்றை மாற்றி, மாற்றத்தை ஏற்படுத்தவே இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததாகவும், தற்போதைய அரசாங்கம் முன்னைய ஆட்சியாளர்களின் செயல்களைத் தொடர்ந்தால் அதனை எதிர்ப்போமெனவும் மனோ கணேசன் தெரிவித்தார்.

