அடுத்தடுத்த கைதுகளும் விளக்கமறியலும்

0
87
Article Top Ad

நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த அதுரலியே ரதன தேரர், நுகேகொடை நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2020ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில், ‘அபே ஜன பல’ கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற ஆசனத்தைப் பெறுவதற்காக, கட்சியின் பொதுச் செயலாளரான வண. வேதினிகம விமலதிஸ்ஸ தேரர் கடத்தப்பட்டு, அச்சுறுத்தப்பட்டு, அவரது கையொப்பம் பலவந்தமாகப் பெறப்பட்டதாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம், ரதன தேரருக்கு ஆசனம் பெறுவதற்கு வழிவகுத்ததாக சந்தேகிக்கப்படுகிறது.

இதன் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கு அமைவாக, 2025 ஓகஸ்ட் 18 ஆம் திகதி கொழும்பு நீதவான் நீதிமன்றம் ரதன தேரர் மீது பிடியாணை பிறப்பித்திருந்தமை. இதுவரை தலைமறைவாக இருந்த தேர்ர், இன்று நீதிமன்றில் ஆஜராகியதைத் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

அதேபோன்று, 2006 ஆம் ஆண்டு நடந்த போராட்டம் ஒன்றின் போது சட்டவிரோதமாக ஒன்றுகூடியதாகவும், சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) கம்பஹா மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சாவும் கைது செய்யப்பட்டுள்ளார்.  கொச்சிக்கடை பொலிஸில் இன்று (29) அவர் சரணடைந்த நிலையில் கைதுசெய்யப்பட்டார். அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ மீதான ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக கொழும்பு நீதவான் நீதிமன்றம், அவரது பிணை மனுவை நிராகரித்து, எதிர்வரும் செப்டம்பர் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.

இன்று காலை முன்னாள் அமைச்சர் ராஜிதவுக்கும் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. முன்னாள் அரசியல் பிரபலங்கள் தொடர்ச்சியாக கைதாகி வருகின்றமையானது, எதிரணியினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் அவதானிகள் குறிப்பிடுகின்றனர்.