தம்பிலுவில் மயானத்தை அண்டிய பகுதியில் அகழ்வு

0
88
Article Top Ad

அம்பாறை மாவட்டம், திருக்கோவில் தம்பிலுவில் மயானத்தை அண்டிய பகுதிகளில் இரண்டாவது கட்ட அகழ்வுப் பணிகள் நேற்று ஆரம்பமாகியுள்ளன. கருணா-பிள்ளையான் குழுவின் முன்னாள் முக்கியஸ்தரான ‘இனிய பாரதி’யின் மற்றொரு சகாவின் வாக்குமூலத்தின் அடிப்படையில், இந்தப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்ற மேலதிக நீதிவான் தெசீபா ரஜீபன் முன்னிலையில் இந்த அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

2005ஆம் ஆண்டு காலப்பகுதியில் இனிய பாரதியின் உதவியாளராகச் செயற்பட்ட, காரைதீவுப் பகுதியைச் சேர்ந்த ஒரு சந்தேக நபர் ஒருவர் திருக்கோவில் பகுதியில் தனியார் தொலைத்தொடர்பு சிம் விற்பனை முகவராக இருந்த அருளானந்தன் சீலன் என்பவரைக் கடத்தி, கொலை செய்து, உடலை அந்தப் பகுதியில் புதைத்ததாக அரச சாட்சியாக மாறி, குற்றப்புலனாய்வு பிரிவிடம் வாக்குமூலம் அளித்திருந்தார். அதன் பிரகாரம் இந்த அகழ்வுப்பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி, பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு, குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள், பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் தடயவியல் பொலிஸார் ஆகியோர் சம்பவ இடத்தில் இருந்தனர்.

முன்னதாக, கடந்த ஜூலை 31ஆம் திகதி, மற்றொரு அரச சாட்சியான அனோசியஸ் சுரேஸ்கண்ணா (யூட்) என்பவரின் வாக்குமூலத்தின் அடிப்படையில், திருக்கோவில் பொது மயானத்தில் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அப்போது எவ்வித தடயங்களும் கிடைக்காததால் அந்தத் தேடுதல் கைவிடப்பட்டது. தற்போது, புதிய வாக்குமூலத்தின் அடிப்படையில், இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.