எல்ல – வெல்லவாய வீதியில் கோர விபத்து – 15 பேர் உயிரிழப்பு

0
298
Article Top Ad

எல்ல-வெல்லவாய வீதியில் நேற்று மாலை சுமார் 100 அடி பள்ளத்தில் பேருந்து ஒன்று வீழ்ந்து விபத்திற்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்துள்ளதோடு, 18 பேர் படுகாயமடைந்து பதுளை தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

தங்காலை நகரசபையைச் சேர்ந்த ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தாரை சுற்றுலாவிற்காக ஏற்றிச் சென்ற பேருந்தே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது. எல்லயில் இருந்து தங்காலையை நோக்கி அவர்கள் திரும்பிக்கொண்டிருந்த வேளையில் இந்த விபத்து சம்பவத்துள்ளது. விபத்தில் தங்காலை நகர சபையின் செயலாளர் டி.டபிள்யூ.கே. ரூபசேனவும் உயிரிழந்துள்ளார்.

மீட்பு நடவடிக்கைகளுக்காக விமானப்படைக்குச் சொந்தமான MI-17 ரக ஹெலிகொப்டர் தியத்தலாவை விமானப்படை தளத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாக விமானப்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.  அத்துடன் மருத்துவக் குழுவினருடன் கூடிய Bell-412 ஹெலிகொப்டரும் வீரவில விமானப்படை தளத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அத்தோடு, இராணுவத்தின் சுமார் 200 பேர் மீட்பு பணிகளுக்கு ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த பேருந்து எல்ல திசையிலிருந்து வெல்லவாய திசை நோக்கி பயணித்த போது எதிரே வந்த ஜீப் வண்டியில் மோதி பள்ளத்தில் பாய்ந்து கவிழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஜீப் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.