வதைக்கும் கொரோனாவால் மருந்துகளுக்கு அங்கலாய்துத் திரியும் மக்கள் ; மருத்துவர்கள் பரிந்துரைகள் பரிசீலிக்கப்படுகின்றதா?

0
333
Article Top Ad
இலங்கையில் கொரோனாவின் தாக்கம் அண்மை நாட்களில் கடுமையாக அதிகரித்து இறப்புக்களின் எண்ணிக்கையும் சடுதியாக கூடிச் செல்வதால் அடுத்ததாக என்ன செய்வது என்று தெரியாமல் மக்கள் பெரும் கேள்விகளுடனும் தடுமாற்றத்துடனும் அங்கலாய்த்துநிற்கின்றனர்.
கொரோனா தொற்று என இனங்காணப்பட்டவர்களில் தனிமைமைப்படுத்தல் நிலையங்களுக்கு கொண்டுசெல்லப்பட்டவர்கள் தாமாக அன்றேல் உறவினர்களால் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டவர்கள் தவிர தற்போது கொரோனா அறிகுறிகளுடன் வீடுகளிலேயே தங்கியிருந்து சிசிச்சை பெற்றுவருகின்றவர்கள் எண்ணிக்கை அதிகமாகக் காணப்படுகின்றது.
 இந்த வியாதிக்கு இந்த மருந்துகளைத் தான் சிகிச்சைக்காகப் பயன்படுத்தவேண்டும் என முறையான ஆய்வுகளுடாக உறுதிப்படுத்தப்பட்ட தரவுகள் இல்லாத நிலையில் மக்கள் தமக்கு தேவையானதை வைத்தியர்களின் பரிந்துரைச் சீட்டு இல்லாமலேயே மருந்துக்கடைகளில் வாங்கிப்பாவிக்கும் நிலைமை இலங்கை போன்ற  வளர்முக நாடுகளில் அதிகமாக காணப்படுகின்றது.
அதிலும் நம்மோடு உடன்வாழ்ந்த உறவினர்கள் நண்பர்கள் அயலவர்கள்  நம் கண்ணுக்கு முன்பே மரணிக்கும் சம்பவங்கள் சடுதியாக அதிகரிக்கும் நிலையில் அச்சத்தின் உச்சத்தில் வாழும் மக்கள் பதற்றத்தில் மருத்துவர்களின் பரிந்துரை இன்றியே மருந்துகளைப் பாவிக்கும் நிலை அதிகரித்துவருகின்றது.
 கொரோனா அறிகுறிகளுடன் வீடுகளில்  மட்டக்குளிபகுதியில் வாழ்ந்துவந்த சிலரைத் தொடர்புகொண்டபோது ‘  வயிற்றோட்டம் காய்ச்சல் தலையிடி இருமல் சளி ஆகிய அறிகுறிகள் எமக்கு இருந்தன. நாம் வெளியே செல்ல முடியவில்லை. எனவே தெரிந்த மருந்துவரொருவரைத் தொடர்புகொண்டோம் . அவர் அஸித்ரோமைசின் என்ற மருந்தைப் பயன்படுத்துமாறு பரிந்துரைத்தார்.’ என்றனர். அந்த மருந்தை எடுத்தநிலையில் எப்படி இருந்தது என வினவியபோது’ முன்னர் இருந்த பல அறிகுறிகள் இல்லாமல் போய் நிலைமை மேம்பட்டது. ஆனால் கடுமையான வயிற்றெரிவும் உளைச்சலும் ஏற்றட்டது என்று கூறினர்.
இந்த அஸித்ரோமைசின் என்ற மருந்தை தாமும் பயன்படுத்தியதாக கொரோனா அறிகுறிகளுடன் வீடுகளில் சுயமாக சிசிச்சை பெற்றுவந்த பலரும் தெரிவித்தனர்.
 இது தொடர்பாக விசேட சமுதாய மருத்துவ நிபுணர் டொக்டர் முரளி வல்லிபுரநாதனைத் தொடர்புகொண்டுவினவியபோது
‘ மக்கள் என்ன செய்வதென்று அந்தரித்து நிற்கையில் பதற்றத்தோடு பல்வேறு மருந்துகளையும் பயன்படுத்துகின்றனர். அஸித்ரோமைசின் என்ற மருந்தை நேரடியாக மருந்துடைகளில் வாங்கிப்பயன்படுத்துவதைப் பற்றி நானும் கேள்விப்பட்டுள்ளேன். அந்த மருந்து பக்ட்ரீயா தொற்று தொடர்பான நோய்களுக்கு சிசிச்சையளிப்பதற்காகவே காலங்காலமாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. கடும் சளியினால் அவதிப்படுகின்றவர்கள் மூக்கு மற்றும் தொண்டைப்பகுதியில் தொற்றுக்களால் பாதிப்பட்டுள்ளவர்கள் தோல் பகுதியில் தொற்று மற்றும் பாலியல் நடவடிக்கைகளால் ஏற்படும் தொற்று ஆகியவற்றுக்கே பரிந்துரைக்கப்பட்டு வந்துள்ளது. இதனை மூன்று நாட்களே சிசிச்சைக்காக எடுத்துக்கொள்ளவேண்டும் என்று கூறுவார்கள் . ஆனால் தற்போது பலரும் நிறைய நாட்கள் இதனைப் பயன்படுத்துவதாக அறிகின்றேன். இதில் பல பக்கவிளைவுகள் உள்ளன. இதயவருத்தம் ஈரல் சிறுநீரக வியாதிகளைக் கொண்டவர்கள் இதனைப் பயன்படுத்துவதால் கடும் பக்கவிளைவுகள் உருவாக வாய்ப்புண்டு. அடிவயிறு எரிதல் இதனால் ஏற்படும் பொதுவான பக்கவிளைவுகளில் ஒன்றாக உள்ளது’
என்று குறிப்பிட்டார். இந்த மருந்து பக்ட்ரீயாவிற்கு பயன்படும் என்பது அறியப்பட்டாலும் கொரோனா வைரஸ் சிசிச்சைக்கு பயன்படுத்துவது பற்றி போதிய ஆய்வுகள் இல்லை என்று அவர் குறிப்பிட்டார்
அண்மையில் பேஸ்புக்கில் அவர் இட்டபதிவில்
 “ஆயுர்வேத திணைக்களத்தால் அண்மையில் தடைசெய்யப்பட்ட  தம்மிக்க பாணியை தவிர்ந்த பல ஆயுர்வேத பாணிகள் எந்த வித விஞ்ஞான ஆதாரமும் இன்றி விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதைவிட புதிய மோசடியாக கொரோனா நோயில் இருந்து பாதுகாக்கும் ஆவிபிடிப்பான்கள்  என்று பல உபகரணங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. மேலும் சிலர் வைத்தியரின் ஆலோசனை இன்றி பக்கவிளைவுகள் நிறைந்த அஜித்ரோமைசின் போன்ற மருந்துகளை தொடர்ந்து பார்மசியில் வாங்கி உட்கொண்டு வருகின்றனர். இவை எதுவுமே கொரோனாவில் இருந்து எம்மை பாதுகாக்க வல்லவை அல்ல. தடுப்பூசி ஏற்றிக் கொள்ளுதல் , 1 மீட்டர் சமூக இடைவெளி பேணுதல் , முகமூடி அணிதல், தேவையற்ற வெளிப்பயணங்களையும் ஓன்று கூடல்களையும்  தவிர்த்தல் மற்றும் கைகளை அடிக்கடி கழுவிக் கொள்ளுதல் ஆகியவையே நம்மை பாதுகாக்கும். இதைவிட புதிய பழங்கள் மரக்கறிகளை கொண்ட சத்தான உணவு போதுமான அளவு உறக்கம் 30 நிமிடங்களுக்கு குறையாத உடற்பயிற்சி என்பவை எமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். “
 எனச் சுட்டிக்காட்டியிருந்தார்.

கடந்த மே மாத காலத்தில் இந்தியாவில் கொரோனா நிலைமை மோசமடைந்த காலப்பகுதியில் தமிழ்நாட்டில் ரெம்டெசிவிர் என்ற வைரஸ் எதிர்ப்பு மருந்துக்கான தேவை அதிகரித்துக்காணப்பட்டது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் ஆரம்ப நிலை நோயாளிகளுக்கு பலனளிப்பதாகக் கருதப்படும் ரெம்டெசிவிர் மருந்துக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டதையடுத்து அந்த மாநில அரசே மருத்தை விநியோகிக்க ஒழுங்குநடவடிக்கை எடுத்திருந்தது. இந்த மருந்து இலங்கையிலும் பயன்படுத்தப்படுகின்றதா என டொக்டர் முரளி வல்லிபுரநாதனிடம் வினவியபோது ‘ இப்படியான மருத்துகள் அதிக விலை உடையதாக இருப்பதன் காரணமாகவும் பயன்படுத்தப்படுவதில்லை’ . அத்தோடு இந்த மருந்ததுகளை மருத்தவர்களின் பரிந்துரை இன்றி வாங்குவது கடினம். இதுவும் பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடிய அபாயத்தைக் கொண்டுள்ளது எனத் தெரிவித்தார்.

என்னதான் மருத்துவர்கள் அறிவுரைகளை வழங்கிக்கொண்டிருந்தாலும் எப்படியேனும் உயிரைக் காத்துக்கொள்ளவேண்டும் என அங்கலாய்த்துநிற்கும் மக்கள்  மருந்துகளுக்கு முண்டியடித்துக்கொண்டு தேடித்திரிவதால் கறுப்புச்சந்தைகளில் மருந்துகளின் விலைகள் கடுமையாக அதிகரித்துள்ளன.
கொவிட்-19 காரணமாக மோசமான நிலையில் உயிருக்காக போராடுகின்றவர்களுக்கு  சிகிச்சையளிப்பதற்காக பயன்படுத்தப்படும் Tocilizumab என்ற மருந்துக்கு இலங்கையில் தற்போது பற்றாக்குறை நிலவுவதாகவும் இதனால் கறுப்புச்சந்தையில்   550,000 ரூபாய் அளவில் இந்த மருந்து விற்கப்படுவதாகவும் பிரபல ஊடகவியலாளர் முன்ஸா முஸ்டாக் பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பாக இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கத்தைச் சேர்ந்த டொக்டர் தணிகைவாசன் ரட்ணசிங்கம் அவர்ககளிடம் வினவியபோது ‘ கொரோனாவிற்கு சிசிச்சையளிப்பதற்காக இந்த மருந்தைத் தான் பாவிக்கவேண்டும் என்ற எவ்விதமான ஒழுங்கமைக்கப்பட்ட பரிந்துரைகளோ விதிமுறைகளோ இலங்கையில் இதுவரை கிடையாது. மக்கள் பதற்றத்தில் செய்வதறியாது நிற்கும் நிலையை பல்வேறு தரப்பினரும் தமக்குச்சாதகமாக பயன்படுத்திக்கொள்கின்றனர். இது மிகவும் கவலைக்குரியது ‘ எனக்குறிப்பிட்டார். தனியார் வைத்தியசாலைகளில் கொரோனா சிசிக்சைக்காக போகின்றவர்கள் அவர்கள்  தேர்ந்தெடுக்கும் வைத்தியசாலை அங்குள்ள அறைகளின் வசதித்தரம்  என்பவற்றிற்கு அமைவாக பல லட்சங்களைச் செலவுசெய்யும் நிலை ஏற்படுகின்றதென அவர் விளங்கினார். சிலமாதங்களுக்கு முன்னர் கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்ட அம்பலாங்கொடையைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் தனது சிசிச்சைக்காக 22 லட்ச ரூபாவை கொழும்பு தனியார் வைத்தியசாலைக்கு செலவிட்டுள்ளதாக சமூக வலைத்தளத்தில் பார்வையிட்டதை எடுத்துக்கூறியபோது ஒவ்வொரு வைத்தியசாலை மற்றும் தேர்ந்தெடுக்கு;  மருத்துவர்கள் பணிக்குழுவிற்கு அமைய அது வேறுபடும் எனச் சுட்டிக்காட்டினார் .
சாதாரண கொரோனா அறிகுறிகளுடன் வீடுகளில் இருந்து சிசிச்சை பெறுகின்றவர்களுக்கு பரசிட்டமோல் மற்றும் விட்டமின் சீ ஆகியவற்றையே பொதுவாக பரிந்துரைக்கின்றபோதும் நிலைமை மோசமாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்படின் செலவு என்பது எமது கட்டுக்குள் இல்லை என்பதை வைத்தியர்களது கருத்துக்கள் புலப்படுத்துகின்றன.
 டெல்டா வைரஸின் தாக்கமே தற்போது இலங்கையை உலுப்பிக்கொண்டிருக்கும் நிலையில் டெல்டாவின் மேலும் பல திரிபுகள் நாட்டில் இனங்காணப்பட்டுள்ளதான தகவல்கள் அச்சத்தை மேலும் ஆழப்படுத்துகின்றன .
இப்படி அபாய நிலைமைகளுக்கு மத்தியிலும் இன்னமும் தடுப்பூசியை ஏற்றாமல்  பல்லாயிரக்கணக்கான மக்கள் இருப்பது கவலையளிக்கின்றது. தமது உயிருக்கு மாத்திரமன்றி தம்மை நம்பியிருக்கும் ஆயிரக்கணக்கான உயிர்களுக்கும் அவர்கள் அபாயத்தை விளைவிக்கக்கூடிய ஏதுநிலையைக் கொண்டிருக்கின்றனர்.

இப்படி அபாய நிலைமைகளுக்கு மத்தியிலும் இன்னமும் தடுப்பூசியை ஏற்றாமல்  பல்லாயிரக்கணக்கான மக்கள் இருப்பது கவலையளிக்கின்றது. தமது உயிருக்கு மாத்திரமன்றி தம்மை நம்பியிருக்கும் ஆயிரக்கணக்கான உயிர்களுக்கும் அவர்கள் அபாயத்தை விளைவிக்கக்கூடிய ஏதுநிலையைக் கொண்டிருக்கின்றனர்.

சிறந்த தடுப்பூசி வரும் என்பதற்காக தடுப்பூசியை ஏற்றாமல் இருப்பவர்களுக்கும்  அடுத்தவருடம் வெளிநாடுசெல்ல இருப்பதால் தடுப்பூசியை ஏற்றாமல் இருப்பவர்களுக்கும் ஸ்ரீஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மூலக்கூறு மருத்துவத்துறையின் பேராசிரியர் நீலிக்கா மாளவிகே கூறும் அறிவுரையாதென்றால் உங்களுக்கு கிடைக்கும் முதலாவது தடுப்பூசியே சிறந்த தடுப்பூசி என்பதாகும். உங்கள் வெளிநாட்டுப்பயணத்தை அடுத்துவருடம் முன்னெடுக்கலாம் . கிடைக்கின்ற தடுப்பூசியை ஏற்றிக்கொள்ளுங்கள் என்பதாக அவரது அறிவுரை அமைந்திருக்கின்றது.

 ஏற்கனவே தடுப்பூசியை ஏற்றியவர்களுக்கும் கொரோனாவின் டெல்டா திரிவு தொற்றியபோதும்  கூட அத்தகையவர்கள் மத்தியில் மரணங்களில் எண்ணிக்கை பெரிதும் குறைவாக இருப்பது ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. எந்தவொரு தடுப்பூசியையும் ஏற்றியவர்களைவிடவும் ஏற்றாதவர்களுக்கே கொரோனா தொற்று ஏற்படும் போது தாக்கம் கடுமையாக இருந்து மரணத்திற்கு கொண்டுசெல்லும் ஏதுநிலை அதிகமாக உள்ளது என்பதை உணர்ந்து உடனே தடுப்பூசியை ஏற்றிக்கொள்ளுங்கள்
ஆக்கம் : அருண் ஆரோக்கிநாதர்