அமெரிக்காவில் நடைபெற்ற சின்சினாட்டி பகிரங்க டென்னிஸ் தொடர், இனிதே நிறைவுப் பெற்றுள்ளது.
விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வந்த இத்தொடரில், நடைபெற்று முடிந்த ஆண்கள் மற்றும் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டிகளின் முடிவுகளை பார்க்கலாம்.
முதலாவதாக பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியின் முடிவினை பார்க்கலாம்.
பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், அவுஸ்ரேலியாவின் ஆஷ்லே பார்டியும் சுவிஸ்லாந்தின் ஜில் டீச்மேனும் பலப்பரீட்சை நடத்தினர்.
பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், முதல் செட்டை 6-3 என ஆஷ்லே பார்டி கைப்பற்றி அசத்தினார்.
இதனைத்தொடர்ந்து இரண்டாவது செட்டில், முந்தைய சுற்றுகளில் பல முன்னணி வீராங்கனைகளை தோற்கடித்த ஜில் டீச்மேன், ஆஷ்லே பார்டிக்கு கடும் நெருக்கடி கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், இந்த எதிர்பார்ப்புக்களை தவிடு பொடியாக்கிய ஆஷ்லே பார்டி, செட்டை 6-1 என எளிதாக கைப்பற்றி சம்பியன் பட்டத்தை வென்றார்.
ஒரு மணிநேர 12 நிமிடங்கள் நடந்த இந்த போராட்டத்தில், வெற்றிபெற்ற உலகின் முதல்நிலை வீராங்கனையான ஆஷ்லே பார்டி, தனது தொழில் முறை வாழ்க்கையில் பெற்ற 13ஆவது சம்பியன் பட்டம் இதுவாகும்.
இதேபோல சின்சினாட்டி வரலாற்றில் கடந்த 13 வருடங்களில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய மிகக்குறைவான அதாவது தரவரிசையில் 76ஆவது இடத்தில் வீராங்கனையொருவர் முன்னேறியது இதுவே முதல்முறையாகும்.