பாசிசமும் ராஜபக்ச ஆட்சியும்!

0
974
Article Top Ad

 

இத்தலைப்பு குறித்து விபரிப்பதற்கு முன்பு பாசிசம் பற்றிய ஓரு விரிவான புரிதலை நாம் பெறுதல் வேண்டும். தாராண்மைவாதம், சமவுடமைவாதம் , குடியரசுவாதம் , சமூக ஜனநாயகம் , தேசியவாதம் மதச்சார்பின்மைவாதம் , பெண்ணியல்வாதம் மற்றும் பாசிசவாதம் என அரசியல் கருத்தியல்களை அரசியல் கற்கைத்துறை ஆய்வாளர்கள் அரசியல் வரலாற்றின் ஆய்வின் அடிப்படையில் வகைப்படுத்துகிறார்கள்.

ஜேர்மனிய நாசிச வாத ஆட்சியாளரான அடோல்ட் ஹிட்லர் 1925-26 களில் அரசியல் சிறை கைதியாக இருந்த போது வெளியிட்ட எனது போராட்டம் என்ற நூலின் ஊடாகவும் இத்தாலிய பாசிசவாத தலைவர் முசோலினி வெளியிட்ட கருத்துக்களின் ஊடாகவும் பாசிசவாத சிந்தனைகளை உலகம் அடையளாப்படுத்துகிறது.

ஆயினும் நவகாலனித்துவ மற்றும் பலவந்த கோட்பாடுகளை நவீன அரசுகள் அவ்வப்போது தங்கள் ஆட்சியினை பலப்படுத்தவும் நிலைபெறுவதற்கும் தங்கள் ஆட்சி முறைகளில் பிரயோகிக்கிறது.

அடக்குமுறை அணைத்தான்மை வாதம் பலவந்த கோட்பாடு என்ற சொற்பதங்கள் மாறுபட்ட வரைவிலக்கணங்களை அரசியல் விஞ்ஞான ரீதியில் விளங்கமளித்தாலும். இவை சட்டவாட்சி முறைக்குட்பட்டேனும் நவஜனநாயக ஆட்சியில் நீட்சி பெறும் போது அது தன்னை பாசிசமாக பரிணமித்துக்கொள்ளுகின்ற இயல்பை கொண்டது.

ஆட்சியினை நிலைபெற செய்ய இவ்வணுகுமுறையை நவ ஜனநாயக ஆட்சியாளர்கள் துணைக்கழைத்துக் கொண்டாலும் அதுவே அவ்வாட்சியின் வீழ்ச்சிக்கு அடித்தளமாகிறது என்பதை இன்றைய ஆட்சியாளர்கள் மறந்து விடுவது அதிகார போதை தரும் மயக்கமாகும் அதன் பால் கொண்ட பேராசையும் ஆகும்.

இலங்கையின் தற்போதைய அரசியல் நகர்வுகளும் அதன் போக்குகளும் சர்வதேச அரசுகளின் பார்வையை இலங்கை மீது திருப்பி வரும் இச்சந்தர்ப்பத்தில் அரசாங்கத்தின் செயற்பாடுகளை பாசிசவாத பண்புகளோடு ஒப்பீட்டு ரீதியில் இக்ககட்டுரை விமர்சிக்கிறது.

மேலும் இப்போக்கு நீடிக்கின்ற சந்தர்ப்பத்தில் விரைவில் வீழ்ச்சியடைவதற்கு வழிவகுக்கும் என்ற எதிர்வு கூறலையும் இக்கட்டுரை ஆசிரியராக ஆரம்பத்திலேயே பதிவு செய்ய விரும்புகிறேன்.

பாசிஸ்ட் மற்றும் பாசிசம் ஆகிய பதங்கள் சாதாரண வார்த்தைகள் போல தெரிந்தாலும் அது கல்வியாளர்களிடையே ஆழமான கருத்தியல் மோதலை உருவாக்கும் விடயமாக இருந்து வருகிறது. பாசிசம் எனும் கருத்தியல் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் உருவான கருத்தியலாகும்.

தாராண்மை ஜனநாயகம் சமவுடமைவாதம் மற்றும் கம்யூனிசவாதம் ஆகியவற்றுக்கு முற்றும் முழுதாக நேர் எதிர்கருத்தியலாகவும் அரசியல் இயக்கமாகவும் இத்தாலி மற்றும் ஜேர்மனியில் தோற்றம் பெற்றது.

அரசியல் அதிகாரத்திற்காக நடத்தப்படும் சண்டையில் வன்முறை வெடித்தால் அதை அவர்கள் ஏற்பவர்களாக இருந்தார்கள் என்றாலும் அந்த குழுவின் பிற குணங்கள் என்பது அறிவுசார் கருத்து மோதல்களுக்கு உட்பட்டதே.

கொடுமை என்னவெனில் என்னால் இதற்கு சாதாரணமான ஒரு விளக்கத்தை அளிக்க முடியாது. இவ்வாறு கூறுகிறார் பாசிசம் ஒரு மிகச்சிறிய அறிமுகம் ((Fascism: A Very Short Introduction)என்ற நூலை எழுதியுள்ள வரலாற்று துறையை சேர்ந்த கார்டிப் பல்கலைக்கழகத்தை சேர்ந்த கெவின் பாஸ்மோர்.

பாசிசம் மற்றும் நாசிசம் ஆகிய இரண்டும் ஒன்றோடு ஒன்று இணைந்து செல்பவை அல்ல. இனவெறி மற்றும் யூத எதிர்ப்பு ஆகியவை நாசிச சிந்தாந்தத்தின் அடித்தளமாக இருந்தது.

ஆனால் இத்தாலியில் இருந்த பாசிசம் என்பது அங்ஙனம் ஒரு குறிப்பிட்ட விடயத்தில் வரையறைக்குள் இல்லை. ஆகையால் ஒரு குழுவிலோ குறித்த அரசிலோ அமைப்பிலோ அதன் சித்தாந்தத்திலோ இனவெறி இருப்பதால் மட்டும் அவர்களை பாசிஸ்ட்டுகள் என்று வகைப்படுத்திவிட முடியாது என்பது பல ஆய்வாளர்களின் கூற்றாகவுள்ளது.

இத்தாலியில் நிலைகொண்டிருந்த பாசிசத்தில் கார்ப்பரேட்டிசம் இருந்தது. அரசியல் ரீதியாக அது கலந்திருந்தது. கார்ப்பரேட்டிசம் (கூட்டுழைப்புவாதம்) என்பது மக்கள் தங்களுக்குள் இருக்கும் திறமையின் அடிப்படையில் குழுக்களாக இணைந்து செயற்படுவதை வகைப்படுத்துவது.

ஜனநாயகத்தைப் பொறுத்தவரையில் ஒவ்வொரு தனிமனிதனும் ஒரு அரசியல் குழுவாக உள்ளான். ஆனால் காப்ரேட்டிச முறை என்பது போட்டியை முன்னிறுத்தாமல் ஒத்துழைப்பை முன்னிறுத்துகிறது ஆனால் அரசியலில் அதிகாரத்தை தக்கவைக்கும் அல்லது அடையும் போட்டியே முன்னிறுத்தப்படுகிறது.

பாசிஸ்டுகளை குறிக்கும் குறியீடுகளும் இக்கருத்தியலில் முக்கிய பங்கு வகிப்பவை. ஓன்றாக கட்டப்பட்ட மரக்கட்டைகள் பழங்கால ரோமானிய குறியீடான ஒரு கோடாரி மற்றும் இரும்பு குழாய்கள் பாசஸ் என்று குறிப்பிடப்பட்டது. பிறகு நாசிகளின் ஸ்வஸ்த்திக். இந்தக்குறியீடுகள் பலத்தை குறிப்பனவாகும். இந்த அனைத்து குறியீடுகளும் இந்த குழுக்களிடையே சில ஒருமித்த பொதுவான நோக்கங்கள் உள்ளன என்பதை விளக்குகின்றன.

கொள்கை ரீதியில் இத்தாலி பாசிஸ்ட்டுக்களின் அரசியல் கொள்கைகளும் ஜெர்மனிய நாசிக்களின் அரசில் கொள்கைகளும் ஒன்றுக்கொன்று மாறுபட்டவையாகும். இந்த ஒருமிக்காத இரு இயக்கங்களின் சிந்தாந்தங்களின் போக்கே பாசிஸ்ட் என்று ஒருவரை முத்திரையிடுவதில் சவாலை உட்படுத்துகிறது.

எனவே இவ்வார்த்தையானது சர்வாதிகார போக்குகளின் தன்மைகளை கொண்ட ஆனால் தாரண்மைவாதம் ஜனநாயகம் போன்றவற்றுக்கு நேரெதிரான சிந்தாந்தம் கொண்ட குழுக்களையோ அரசாங்கத்தையோ குறித்து கண்டனத்தை பதிவிட பயன்பெறும் வார்த்தையாக பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டுள்ளது என்ற எண்ணம் தோன்றுகிறது. பாசிசம் அடிப்படையில் கொடுமையானது ஒரு அரசியல் இயக்கத்தை பாசிச இயக்கம் போல செயற்படுகிறது என்று சொல்வதற்கு இது முக்கிய கருவியாக உள்ளது என்றார் பாஸ்மோர்.

பாசிஸ்ட்டுகள் என்று வகைப்படுத்தப்ட்ட கட்சி எதுவும் பெரும்பாலும் தங்களை அவ்வாறு குறிப்பிட்டுக்கொள்வதில்லை. பாசிசத்தில் உள்ள பல கருத்துக்களோடு ஒத்துக்போகும் சூழ்நிலையிலும் ஏன் அவர்கள் தங்களை பாசிஸ்ட்டுகள் என தங்களை அழைத்துக்கொள்வதில்லை என்று நீங்கள் கேட்கலாம். ஏனென்றால் பாசிசத்தில் எதிரான இயக்கங்கள் அனைத்தும் பாசிசத்தை நாசிசத்தோடு ஒப்பிட்டே குறிப்பிடுகின்றன.

ஒரு ஆட்சியளாரின் தன்னிலை சார்ந்த முடிவுகளை எடுக்கும் தன்மைகளையும் ஏனையோர் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதில் பாராமுகம் போன்ற செயல்களாலும் அவரை பார்க்கும்போதும் அவர் ஒரு பாசிஸ்ட் என்று அடையாளப்படுத்த முடியும் என சிலர் குறிப்பிடுகிறார்கள்.

அவர்களை பொறுத்தவரையில் எந்த தேசிய வாத அரசியல் இயக்கம் தனது அதிகாரத்தினால் பேச்சுரிமையை நசுக்குகிறதோ ஒரு கட்சி கொள்கை அல்லது சர்வாதிகாராத்தில் துணை நிற்கிறதோ இனவெறி கொண்டவர்களாக அது தெரிகிறதோ அதை வெளிப்படையாக பாசிஸ்ட்கள் என்று முத்திரை குத்துகிறார்கள்.

20ஆம் நூற்றாண்டில் ஆரம்ப காலங்களில் உருவான பாசிச சித்தாந்தமானது இன்று முழுiமாயாக நடைமுறையில் காணக்கூடியதாய் இல்லாhமல் இருப்பினும் பல அரசுகள் அதன் பண்புகளை குடியரசு ஜனநாயகம் என்ற போர்வையில் தன்னகத்தே கொண்டிருக்கிறது. என்பதை உலக அரசியல் நடைமுறைகளின் போக்கை உற்று நோக்கும் போது தென்படுகிறது.

அனைத்து பிரஜைகளும் அரசின் ஆணைகளைக் கேள்வி கேட்காது பின்பற்றுதல் வேண்டும். அரசு அரசனுக்குரியது அல்லது ஆட்சியாளருக்குரியது தனிநபர் சுதந்திரம் என்பது மக்களுக்குரியதல்ல அரசின் நிபந்தனைகளுக்கமைய செயலாற்றுகின்ற குறித்த தரப்பினருக்கு மாத்திரமே உரியது. இறைமையானது அரசுக்கும் அரசாங்கத்துக்கும் மாத்திரமே உரியது.

அரசன் அல்லது ஆட்சியாளன் இறைவனுக்கு மேலானவன் போன்ற ஏகாதிபத்திய சிந்தாந்தங்களின் பின்னணியை கொண்டது. பாசிசம் குறித்த மதம் இனம் மொழியை முன்னிலைப்படுத்திய அல்லது அவர்களின் நலன் மாத்திரமே என்ற குறுகிய நோக்கின் அடிப்படையிலான கொள்கை மற்றும் சட்டவாக்க ஏற்பாடுகள் என இது ஒரு அரசியல் அனைத்தாண்மைவாத கோட்பாட்டின் அடிப்படையில் செயற்படுகின்ற சர்வாதிகார முறையாகும்.

எனினும் இக்கருத்தியலால் குறித்த விவாதம் இன்னுமே தொடர்கிறது. எனினும் பாசிச வாதத்தின் அடிப்படை அறிகுறிகளான பேச்சுரிமை நசுக்கப்படுதல் சர்வதிகார போக்கு ஒரு கட்சிக்கொள்கை நீதித்துறை தலையீடுகள் கருத்து சுதந்திரத்தை கட்டுப்படுத்துகின்ற சட்ட ஏற்பாடுகள் என்பவை இலங்கையின் சமகால அரசியல் நிகழ்வுகளில் காணக்கூடிய வகையில் உள்ளமையால் அவற்றை அடித்தளமாய் கொண்டு இக்கட்டுரை நகர்கிறது.

இலங்ககையின் 1978 ஆம் ஆண்டு அரசியல் அமைப்பின் மீது எஸ் டபில்யூ ஆர் பண்டாரநாயக்கவினால் கொண்டுவரப்பட்ட தனிச்சிங்கள சட்டம் இலங்கை அரசியல் வரலாற்றில் பாசிசத்தின் ஒரு ஆழமான விதையாகும். தேசிய அரசின் இறைமையின் ஊடாக தேசிய இன உணர்வை வலுப்பெற வைக்கும் ஒரு செயலாக அரசின் தேசிய சிந்தனைக் கோட்பாட்டின் அடிப்படையில் இச்சட்டங்கள் நியாயப்படுத்தினாலும்,

பல்லின மக்கள் வாழுகின்ற நாட்டில் தமிழ் மொழி பேசும் தமிழ் மற்றும் முஸ்லிம்கள் ஆகிய உப தேசிய இனக்குழுக்களைகளைக் கொண்ட ஒரு நாட்டில் தனிச்சிங்கள மொழிச் சட்டம் மற்றும் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை போன்ற அம்சங்கள் அரசியல் சாசனத்தில் உட்புகுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டமை உப தேசவாத இனக்குழுக்களின் அதிருப்திக்கும் அரசாங்கத்தின் அவர்கள் மீதான அடக்குமுறையெனும் உணர்வுக்கு அத்திவாரம் இடுகிறது.

1978 ஆம் ஆண்டின் இரண்டாவது குடியரசு நவதாராளவாத கொள்கையை நடைமுறைப்படுத்தும் நோக்கிலே அமுலாக்கப்பட்டாலும் இதன் நிமித்தம் நிறைவேற்று ஜனாதிபதி முறை நடைமுறைக்கு வந்தது.

இந்த நிறைவேற்று ஜனாதிபதி முறை மிக கடுமையான ஏகாதிபத்திய அடிப்படையிலான அடக்கு முறை அம்சங்களை கொண்ட நிர்வாக கட்டமைப்பை வறியோரின் வாழ்வியல் கட்டமைப்பில் செல்வாக்கு செலுத்தி வருகிறது. ஆத்தோடு செல்வந்தர்களுக்கு மாறுபட்ட ஒரு வாழ்வியலை தருகின்ற ஒரு கட்டமைப்பையும் உருவாக்கியுள்ளது. உலகெங்கும் வலது சாரி அரசியல் ஆழமாக வளர்ச்சி அடைந்து வருவது போன்றே இலங்கையிலும் இடதுசாரி அரசியல் நிலைப்பாடுகளின் தாக்கம் பலவீனமடைந்து வருகின்றது.

இதுவரை 20 சீர்த்திருத்தங்களை 1978 ஆம் ஆண்டின் அரசியலமைப்பின் மீது அவ்வப்போது ஆட்சி புரிந்த அரசாங்கங்கள் செய்திருந்தாலும் அவை அனைத்தும் பிரதேச அரசியல் இனவாத அரசியல் சந்தர்ப்ப வாத அரசியல் போன்றவற்றின் பின்னணியில் உருவானவை.

ஏனெனில் தேசிய வாதம் எனும் பேரில் ஏனைய சிறுபான்மை இனக்குழுவினைரை ஓரங்கட்டுகின்ற நோக்கினை அடிப்படையாய் கொண்டதும் அல்லது தேசிய சிந்தனையை வலுப்படுத்துகின்ற நோக்கில் உபதேசிய இனக்குழுக்களுக்கு ஏற்படுகின்ற பாதகமான தாக்கங்கள் பற்றிய கரிசனை கொள்ளாது ஏற்படுத்தப்பட்ட சீர்த்திருத்தங்களே அதிகம்.

இங்கே 13ஆவது மற்றும் 17 – 19 ஆவது சீர்த்திருத்தங்கள் ஒரளவு ஜனநாய அம்சங்களை கொண்டதும் ஜனாதிபதி அதிகராங்களை மட்டுப்படுத்துவதும் ஏனைய சிறுபான்மை உரிமைகளை அவர்கள் பெறுவதை உறுதி செய்கின்ற மற்றும் ஜனாதிபதி அதிகாரங்கள் மட்டுபடுத்துகின்ற ஏற்பாடுகளை காணமுடிகிறது.

ஓற்றையாட்சி முறைமை கொண்ட பல்லின நாடான இலங்கையில் நிறைவேற்ற அதிகார ஜனாதிபதி முறைமையும் அதன் பின் 13 ஆவது திருத்ததின் ஊடாக சீர் செய்யப்பட்ட மாகாண சபை நிர்வாக முறைமையும் இலங்கை அரசியல் வரலாற்றில் ஜனநாயக ஆட்சி முறை குறித்த முக்கிய அம்சங்களாகும்.

எஸ் டபில்யூ ஆர் பண்டாரநாயக்கவினால் தனிச்சிங்கள சட்டம் கொண்டுவரப்பட்ட போதிலும் பிற்காலத்தில் தமிழ் மொழியும் அரசகரும மொழியாக அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தினூடாக உறுதி செய்யப்பட்டமை சிறுபான்மை அல்லது தமிழை தாய்மொழியாக கொண்ட இனக்குழுவினருக்கு ஆறுதலான விடயமாக அமைந்தது.

எனினும் தனிச்சிங்கள சட்டம் மற்றும் பௌத்த சமயத்திற்கு முதலிடம் அளிக்கும் அரசியலமைப்பின் ஏற்பாடுகள் ஜேர்மனிய ஹிட்லரின் பாசிச நடவடிக்கையோடு ஒப்பீட்டு நோக்கில் உற்றுநோக்கும் போது சுதந்திரத்திற்கு பின்னரான இலங்கை அரசியல் வரலாற்றில் ஆரம்ப காலகட்டத்திலேயே பாஸிசத்தின் பரிமாணம் ஆற்றிய திடமான வகிபாகத்தை காணமுடிகிறது.

தனிச்சிங்கள சட்டம் மற்றும் பௌத்த மதத்திற்கு முதன்மையிடம்; போன்ற அரசியலமைப்பின் ஏற்பாடுகள் ஜேர்மனிய இனம் ஆரிய இனம் என்றும் அதுவே உயர்ந்த இனமென்றும் உலகின் தலைவிதியை ஜேர்மனிய தலைவிதியின்படியே தீர்மானிக்கப்படும் எனும் ஏகாதிபத்திய சிந்தனைக்கு ஒப்பானதாக கருத முடிகிறது. ஹிட்லர் ஜேர்மனிய இனத்தினை முன்னிலைப்படுத்தினார் – இலங்கையில் பௌத்த மதத்தையும் சிங்களவர்களையும் முன்னிலைப்படுத்தி வருகின்றனர்.

ஆரிய இனம் உயர்ந்த இனமென்னும் அடிப்படையின் நியாயப்பாட்டினிலே இலட்சக்ககணக்கான யூதர்கள் கொல்லப்பட்டமை போன்று இலங்கையிலும் எண்பதுகளிலே இது பௌத்த நாடு சிங்கள இனமே ஆளுவதற்குரிய உயர்ந்த இனம் என்ற நியாயப்பாட்டிலே தமிழர்களுக்கு எதிரான திட்டமிட்டப்பட்ட ஜே. ஆர். ஜெயவர்தன அரசாங்கத்தினால் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளை குறிப்பிடலாம்.

தமிழர்களுக்கு எதிராக கொலை ,கொள்ளை ,கற்பழிப்பு குறிப்பாக உலகில் தலை சிறந்த அரிதான நூல்களை கொண்டதும் சர்வதேச அரங்களின் முக்கியத்துவம் வாய்ந்த தமிழர்களின் அடையாளமான யாழ் நூலகம் எரிக்கப்பட்டமை போன்ற அரச அணுசரனையோடு அரங்கேறிய இலங்கை அரசின் இனவாத நடவடிக்கையானது தமிழர்களின் மனதில் இலங்கை அரசை பொறுத்தவரையில் தாங்கள் இரண்டாம் தர பிரஜை எனும் திடமான எண்ணக்கரு உருவானது.

ஜேர்மனியில் உருவான வறுமை சூழ்நிலையை பயன்படுத்திக் கொண்டு எனக்கு ஆட்சியை தாருங்கள் நான் மாற்றிக் காட்டுகிறேன் எனக்கூறி ஹிட்லர் ஆட்சியை பிடித்தார். சந்தர்ப்பத்தை சிறப்பாக பயன்படுத்தி அதிகாரத்தை கைப்பற்றும் ஆளுமை பாசிசவாதிகளின் தனிச்சிறப்பு வாய்ந்த பண்பாகும்.

ஜே. ஆர். ஜெயவர்தன பண்டாரநாயக்க தொடர்ந்து இன்றைய ராஜபக்ச வரை நாட்டில் ஏற்படுகின்ற அல்லது திட்டமிட்டு ஏற்படுத்தப்படுகின்ற அசாதாரணமான அல்லது நிலையற்ற சூழ்நிலைகளை பயன்படுத்தி ஆட்சி பீடமேறும் நிகழ்வுகளை இன்றும் காணக்கூடியதாய் உள்ளது.

இங்கே ஹிட்லருக்கு பார்க்கிலும் ஒரு படி மேலே சென்று சூழ்நிலைகளை தமக்கு ஏற்றவாறு உருவாக்கியது கூட்டணி நல்லாட்சி அரசாங்கத்தின் காலப்பகுதியில் ரணில் மைத்திரி இணைப்பரசாங்கம் இருந்த போது பொதுபலசேனா சிங்களே போன்ற பல தேசபக்தி இயக்கம் தேசிய வாத இயக்கம் என பல்வேறுபட்ட அமுக்க குழுக்கள் மூலம் தேசிய பாதுகாப்பு தேசிய இனமான பெரும்பான்மை இனத்தின் எதிர்காலம் போன்றவற்றுக்கு பேராபத்து உருவாகப்போவதாக ஒரு கருத்தியலை மக்கள் மத்தியில் விதைத்தது.

மேலும் நல்லாட்சி அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பின் மீதான 19ஆம் சீர்த்திருத்தம் மூலம் ஜனாதிபதவிக் காலம் ஆறிலிருந்து ஐந்தாக குறைத்தமை – ஒரு ஜனாதிபதி பதவி வகித்தல் மூலயாப்பின் படியே இரு தடவைக்குள் மட்டுப்படுத்தப்பட்டமை – ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்குரிய வயதெல்லை 35 ஆக உயர்த்தியமை அதிகாரங்கள் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் பங்கீடு போன்றவை கொண்டு வரப்பட்டமை இலங்கை அரசியல் வரலாற்றில் ஜனாதிபதி அதிகாரங்கள் பாராளுமன்றம் அமைச்சரவை மற்றும் அடிப்படை உரிமை தொடர்பாக ஏற்படுத்தப்பட்ட குறிப்பிடத்தக்க ஒரு சீர்திருத்தங்களாகும்.

எனினும் ஏற்கனவே தேசிய பாதுகாப்பு பெரும்பான்மை மக்களின் அரசியல் உரிமைகள் போன்றவை பலயீனமடையச் செய்கின்ற ஏற்பாடுகள் இவை என ஏற்கனவே குறிப்பிட்டது போன்று நாடெங்கும் இனவாதிகளையும் தேசபற்று இயக்கங்கள் மூலமும் கடுமையான பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையிலும் – இரட்டை நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கிருந்த பங்கீட்டு அதிகாரங்கள் குறித்த பொதுமக்களின் தெளிவற்ற நிலை காணப்பட்டமையினாலும் அவர்களுக்கிடையில் உருவான உள்ளக மோதல்களினாலும் தேசிய அரசாக நிலைபெற்றிருந்த நல்லாட்சி அரசாங்கம் மக்களிடையே செல்வாக்கை இழந்து வந்தது.

இந்த சூழ்நிலையில் தான் பல அப்பாவி உயிர்களை பலியெடுத்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலும் நல்லாட்சி அரசாங்கத்தின் தேசிய பாதுகாப்பு குறித்து மக்கள் மத்தியில் இருந்த எஞ்ஞிய நம்பிக்கையையும் முற்றாக சிதைத்தது என்பதை விட சிதைக்கப்பட்டது என்றே குறிப்பிட வேண்டும்.

இந்த சந்தர்ப்பத்தில் தான் முன்னாள் பாதுகாப்பு செயலாளரும் மகிந்த ராஜபக்சவின் சகோதரருமான கோட்டாபே ராஜபக்ச தனது அரசில் பிரவேசத்தை நாட்டு மக்களுக்கு அறிவிக்கிறார். இது காலத்திற்கு கொஞ்ச மேனும் ஒவ்வாத செயற்பாடு என அத்தருணத்தில் பலரால் விமர்சிக்கப்பட்டது.

நாடெங்கும் குண்டு வைக்கப்பட்டு தேவாலயத்துக்கு பிரார்த்தனைக்காக கூடியிருந்த அப்பாவி மக்கள் பலர் கொடூராமன முறையில் உடல் சிதறி கொலை செய்யப்பட்;ட வேளையிலே தனது அரசியல் பிரவேசத்துக்குரிய சந்தர்ப்பமாக அதனை பயன்படுத்தும் ஒரு முனைப்பை எந்த ஒரு சராசரி மனிதனும் செய்வதற்கு முனைய மாட்டான்.

எனினும் அதிகாரத்தை அடையதுடிக்கும் பாசிஸ்டுகள் அவ்வகை பண்பிலக்கணங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவர்கள் என்பதற்கு இவருடைய இவ்வறிப்பானது பொருத்தமான எடுத்துக்காட்டாகும்.

இருப்பினும் இதற்கெல்லாம் அப்பாற்பட்டு நாடு பாரியதொரு தேசிய பாதுகாப்பு குறித்த ஆபத்தில் உள்ளதென்றும் தான் நாட்டின் அதிபராவது மூலமே விடுதலை புலிகளுக்கான போரை வெற்றிகரமாக முடித்து வைத்தது போன்றே தேசிய பாதுகாப்பை உறுதி செய்வேன் எனும் வாக்குறுதியோடு தனது அரசியல் அபிலாசயை பகிரங்கமாக வெளிப்படுத்துகிறார் இன்றைய ஜனாதிபதி அதிமேதகு கோட்டாபே ராஜபக்ஸ.

தென்னிலங்கை மக்களின் தேசிய உண்ர்வினை தூண்டுகின்ற இந்த அறிவிப்பும் ஏற்கனவே அதற்குரிய பொருத்தமான ஒரு களத்தை ராஜபக்ச தரப்பினரால் தேசிய வாத சிந்தனையின் பெயரில் பரப்பப்பட்டிருந்த இனத்துவேச பிரசாங்கள் மூலம் ஏற்கனவே உருவாக்கி இருந்தமையும் சிறந்த திட்டமிடல் என்று கூறுவதில் எவ்வித ஐயமுமில்லை.

மனிதாபிமான பண்பு நெறிமுறைகள் பற்றியெல்லாம் சிந்திக்காது அதிகாரத்தை கைப்பற்றுதல் எனும் ஒரே இலக்கை குறிக்கோளாக கொண்ட பாசிச பண்பின் கொடூர முகத்தின் பிரதிபலிப்பாய் இதனை காண முடிகிறது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் இவரது வெற்றிகரமான அரசியல் பிரவேசத்திற்கு மிகச்சாதகமாக அமைந்தது.

பிற்காலத்தில் இந்த கட்டுரை எழுதி முடிக்கும் நேரம் வரை இன்னுமே உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் இருக்கும் பிரதான சூத்திரதாரிகள் கண்டுபிடிக்கப்படவோ தண்டிக்கப்படவோ இல்லை என்ற நிலையிலும்; இதன் விசாரனைகளில் காணப்படும் மந்த நிலையினாலும் – இத்தாக்குதல் சம்பவமானது தற்போதைய ஜனாதிபதியின் வெற்றிக்கு பெரும் சாதக பலனை தந்தது எனும் நோக்கில் மாறுபட்ட விமர்சனங்களை சமகால ராஜபக்ச அரசாங்கத்தின் மீது பல தரப்பினரால் தொடர்ந்தும் முன்வைக்கப்படுகிறது.

மேலும் ”காகம் இருக்க பலாப்பழம் விழுந்த கதையா”? இல்லை பலாப்பழம் காகம் அமர்கின்ற வேளையிலே திட்டமிடப்பட்டு விழ வைக்கப்பட்டதா ? எனும் சர்ச்சைக்குரிய விவாதங்கள் சமூகத்தில் இன்றும் நடைபெற்று வருகிறது.

குறித்த சம்பவத்தோடு தொடர்புடைய ஸாரா எனும் பெண்னை ஏன் இதுவரை கைது செய்யவில்லை ? அவர் இந்தியாவில் இருப்பதாக கூறப்படுவது உண்மையானால் ஏன் சர்வதேச பிடி விராந்தை நீதி மன்றம் மூலம் பெறவில்லை ? போன்ற வினாக்களை 18.08.2021 அன்று பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹமான் எழுப்பினார். அது குறித்து விடையளித்தலின் போது பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெளிவான ஒரு பதிலை குறிப்பிடவில்லை.

மேலும் கொவிட் தொற்றினை கட்டுப்படுத்துவதற்காக நாட்டினை முடக்குவதாக 20.08.2021 அன்று மாலையிலேயே அரசின் அறிவிப்பு வெளியிடப்படுகிறது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரனை 28 மாதங்கள் கடந்த போதும் இதுவரை நிறைவடைய வில்லை பிராதான சூத்திராதாரி கண்டுபிடிக்கப்பட வில்லை போன்ற விடயங்களை முன்னிலைப்படுத்தி 21.08.2021 நடைபெறவிருந்த கவனயீர்ப்பு போரட்டத்தை தடுப்பதற்காகவும் இந்த காலந்தாழ்த்திய நாட்டை முடக்குகின்ற முடிவு அறிவிக்கப்பட்டதாக மக்களின் சமூக ஊடாக பதிவுகள் கூறுகின்றன.

வணக்கத்துக்குரிய எல்லே குணவங்ச தேரர் அவர்களும் நாட்டினை முடக்குவது குறித்த அறிவித்தல் குறுகிய கால எல்லைக்குள் அறிவிக்கப்பட்டமை குறித்து தனது ஆதங்கத்தை பின்வருமாறு பதிவு செய்திருந்தார். ”தயவு செய்து இத்தகைய முடிவுகளை அறிவிக்கும் முன்னம் முறையான திட்டமிடலோடு அறிவியுங்கள் – அறிவித்தல் வெளியான உடனே மக்கள் மசால தூளுக்கும் அரசி வாங்குவதற்கும் ஓட வேண்டி உள்ளது.

எனக்கு மிகவும் கவலை அளிக்கிறது நம் நாட்டில் கற்ற நிபுணத்துவம் வாய்ந்த சிறந்த அனுபவமும் திறமையும் மிக்க தலைவர்கள் கல்விமான்கள் இருக்கையில் பொருத்தமற்ற நபர்களின் வழிகாட்டுதலினால் அரசாங்கம் செயற்படுவதானாலேயே நாடு இத்தகைய ஒரு ஆபத்துக்கு முகம் கொடுத்து வருகிறது” என தனது ஆதந்தங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

20.08.2021 அன்று ஜனாதிபதி கொவிட் காரணமாக நாட்டினை முடக்குவது குறித்து உரை நிகழ்த்தியிருந்தார் – ஏற்கனவே நிகழ்த்திய உரையிலும் சரி 20.08.2021 அன்று நிகழ்த்திய உரையிலும்; பொருளாதாரம் கல்வி சுகாதராம் என மக்கள் வாழ்வதற்கு மிக அவசியமான துறைகள் பாரிய வீழ்ச்சி கண்டுள்ள நிலையில் மக்கள் இலங்கையில் தொடர்ந்து வாழ்வதா இல்லை வேறு நாடுகளுக்கு அகதியாகவேனும் தஞ்சம் அடைவதா என்ற தீர்க்கமான முடிவெடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

அரச ஆதரவு குழுக்களுக்கும் தனவந்தர்களுக்கும் வாழ்வதற்கு ஏதுவான நாடாக இலங்கை பரிணாமம் பெற்று வருகிறது. அரசின் ஒரின சார்புக் கொள்கை பிடிப்பும் தன்னை ஆதரிப்பவர்களை மட்டுமே அணுசரிக்கும் போக்கும் ஏனையோரின் கருத்து சுதந்தரத்தை நசுக்கின்ற செயற்பாடுகளும் பாசிச பண்பிலக்கணங்களாகும்.

21.08.2021 அன்று உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நினைவுபடுத்தி கறுப்பு கொடி ஏற்றி சென்ற வாகனங்களில் அக்கொடியினை சீருடையணியாத பொலிஸாரினால் பகிரங்கமாக நீக்கப்பட்டதும் கருத்து சுதந்திரத்தை முடக்குகின்ற நடவடிக்கையாகும்.
பொருளாதார சுமை மற்றும் வீரியமற்ற சுகாதார திட்டமிடல்களால் சொந்த நாட்டிலே சிதைந்து போன ஒரு சமூக கட்டமைப்பில் வாழுகின்ற விரக்தி நிறைந்த வாழ்கையை எதிர்நோக்கியுள்ள மக்களின் ஆதங்கத்துக்கு ஆறுதலாகவோ அல்லது சௌபாக்கிய வருங்காலம் குறித்த ஒரு நம்பிக்கையை எழுப்ப கூடியதாகவோ ஜனாதிபதி கோட்டாபே அவர்களின் உரை அமையவில்லை என்பது கசப்பான உண்மையாகும்.

.
ஒரு நாடு மக்கள் வாழ்வதற்குரிய அடிப்படை தகுதிகளை வேகமாக இழந்து வருகிறது. இது குறித்த பல தகவல்கள் சிவில் அமைப்புகள் மூலம் ஜனாதிபதிக்கு அறிவிக்கமால் இல்லை எனினும் அத்தகைய விடயங்கள் எவற்றைவும் மனதில் கொள்ளாது நிகழ்த்திய இவ்வுரையானது ஜனாதிபதியின் நிர்வாக இயலாமை மற்றும் ஆளுமை வறட்சியை குறிக்கிறது.

”சுகாதார பிரிவினரின் முடிவுகள் ஒரு கோணத்திலேய முன்வைக்கப்படுகிறது எனினும் ஒரு அரசாங்கமாக நாட்டை முடக்குவது குறித்து பல கோணங்களில் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்.’; என ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ஸ 20.08.2021 ஆற்றிய உரையில் குறிப்பிட்டிருந்தார்.

மேலோட்டமாக பார்க்குமிடத்து அந்தக் கூற்று ஏற்றுக்கொள்ள கூடியதாய் இருந்தாலும். ஒரு அரசாங்கத்திற்கு மக்களை காப்பாற்றுவதை விடவும் வேறு என்ன அவசியம் இருக்கிறது. மக்கள் கொத்து கொத்தாக மடிந்து நாடே சுடுகாடு ஆன பின்னர் எதை கொண்டு ஆட்சி நடத்தப்போகிறது மகிந்த அரசு?

காலம் தாழ்த்திய முடிவுகள் மற்றும் கொவிட் தொற்றின் ஆரம்பத்தில் நிபுணர்களின் பரிந்தரைகளை உதாசீனம் செய்தமை போன்ற பிடிவாத குணத்தால் ஏற்பட்ட விளைவே இன்றைய கொவிட் மரணங்கள் என்பதை இன்றைய அரசாங்கம் மறுக்க முடியாது.

இதனை அடிப்படையாக கொண்டே பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்கள் ”இது திட்டமிடப்பட்ட கொலைக்கு ஒப்பாகும்’; என தனது பாராளுமன்ற உரையில் குறிப்பிட்டிருந்தார். எனவே ஒரு ஜனநாயக பாரளுமன்ற முறைமையுள்ள நாட்டில் இங்ஙனம் துறைசார்நத நிபுணர்களுக்கு முக்கியத்துவம் அளிக்காது தான்தோன்றி தனமாக செயற்படுகின்ற இந்த பண்பு பாசிச இயல்புகளை பிரதிபலிக்கின்றன.

தொற்று நோயியல் விஞ்ஞான பிரிவில் கலாநிதி பட்டம் பெற்ற நிபுணர்கள் அடங்கிய குழுக்கள் சிவில் அமைப்புக்கள் புத்தி ஜீவிகள் ஆளுங்கட்சியின் கூட்டணி கட்சிகள் என பல தரப்பட்ட பிரிவினர்களும் தொற்று நோய் பேராபத்தினை கட்டுப்படுத்துவதற்காக நாட்டினை மூன்று வாரங்களேனும் முடக்குவதற்கு தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்துக்கொண்டிருந்த போதும் அனைத்தையும் நிhரகரித்து வந்த ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ஸ பின்னர் மகா நாயக்க தேரர்களின் வேண்டுகோளுக்கு மட்டும் பச்சை கொடி காட்டியமை பௌத்த மத பீடங்கள் அனைத்தையும் விட மேன்மை பொறுந்தியது எனற தனது நிலைப்பாட்டினை திடமாக பதிவு செய்கிறார். இது நேரடி தீவிர பௌத்த வாத சிந்தனையை முன்னிலைப்படுத்திய நகர்வாகும்.

இதன் மூலம் மீண்டும் பாசிச முகத்தினை மற்றுமொரு முகமான மதச்சார்ப்பின்மைக்கு நேர்எதிரான அரச கொள்கையை ராஜபக்ஸ அரசு பின்பற்றுகிறது என்பது தெளிவாகிறது. நோய்தொற்றினால் மக்கள் கொத்து கொத்தாக நாளாந்தம் மாண்டு போகின்ற நிதர்சன நிலையில் அநேகமான மரணங்கள் வேறு விதமான நீண்ட நாள் இருந்து வரும் நோய் காரணங்களால் நிகழ்ந்தவை – மற்றும் 60 மேற்பட்ட வயது கொண்ட தடுப்பூசி போடாதவர்களே அதிகம் மரணிக்கிறார்கள் என மரணங்களை நியாயப்படுத்துகிறது ஜனாதிபதியின் உரை.

ஒட்டுமொத்த நாடும் தொற்று நோய் அபாயத்தில் பாதிப்படைந்து கொண்டு இருக்கின்ற நிலையில் நிபுணத்துவம் வாய்ந்தவர்களின் ஆலோசனைகள் மற்றும் அறிவுறுத்தல்களுக்கு முக்கியத்துவம் அளித்து முடிவெடுக்காது இந்த சூழலையும் தனது அரசியல் இலாபத்துக்கு பயன்படுத்திக்கொள்ளுவது சௌபாக்கிய தேசமொன்றை கட்டியெழுப்ப முயலும் ஒரு பல்லினத்தை கொண்ட நாட்டின் ஜனாதிபதிக்கு முற்றிலும் ஒவ்வாத செயலாகும்.

இந்த செயற்பாட்டின் மூலம் தென்னிலங்கையின் பௌத்தவாதம் மற்றும் சிங்கள இன வாதம் கலந்த தேசியவாத சிந்தாந்திகளின் மனதில் தன்னுடைய மதிப்பை நிலை நிறுத்திக்கொள்வதும் குறிப்பிட்ட ஒரு மதத்தை பின்பற்றுகின்ற இனக்குழுவினைரை முதன்மைப்படுத்தி அரசியல் முடிவுகளை எடுக்கும் பாசிச அம்சமாக கருத முடியும்.
இவையெல்லாம் ஒரு புறம் இருக்க நல்லாட்சி அரசாங்கத்தின் மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கையை சிறந்த முறையில் சிதைத்து சந்தர்ப்பத்தை சிறப்பாய் பயன்படுத்தி ஆட்சியை கைப்பற்றிய இந்த வினைத்திறன் பண்பானது பாசிச வாதிகளின் பண்பிலக்கணமாகும்.

ஏனைய இனக்குழுக்களுக்கு அரசியல் சாசனம் வழங்கியிருக்கும் சராசரி சுதந்திரங்களையும் உரிமைகளையும் அனுபவிப்பதை தேசியம் எனும் எண்ணக்கருவை மையப்படுத்தி நாட்டின் இறைமைக்கு குந்தகம் விளையும் அபாயம் உள்ளது எனும் கருத்தியலை பரப்பி பெருவாரி சிங்கள மக்களின் அரசியல் நடத்தை மீது பாரிய தாக்கத்தை உண்டுபண்ணியது ராஜபக்ச அரசாங்கம். அதன் விளைவே கோட்டாபே ஜனாதிபதி தேர்தலுக்கான அமோக வெற்றி.

கோட்டாபே அரசாங்கத்தின் மூலோபாயங்கள் பெருவாரி சமூகத்தின் தத்துவார்த்த ரீதியில் தேசியவாதம் கோட்பாடுகளுக்கு நியாயம் கோருகின்ற போது அதற்கு தீணி போடக்கூடிய வகையில் அம் மூலோபாயங்கள வடிவமைப்பது இப்பாசிச வாதிகளின் தனது இனத்திற்கான அக்கறையின் செயற்பாடாகும்.

இந்த தத்துவார்த்த சிந்தனையானது உலகமயமாக்கல் மற்றும் மாறிவரும் அனைத்துலக கொருளாதார தொழில்நுட்பம் மற்றம் பூகோல அரசியல் நலன் சார்ந்த சர்வதேச அரசியல் மாற்றங்களுக்கு முகம் கொடுக்க இயலாது வலுவிலக்க வாய்ப்புள்ளது.

ஆகவே தத்துவார்த்த அரசியல் அணுகுமுறையை தவிர்த்து ஒப்பீட்டு அணுகுமுறையை கையாள வேண்டிய கடப்பாட்டை காலம் பணிக்கிறது என்பதை பேரின வாதிகள் உணர்ந்தாக வேண்டிய கட்டாயம் வெகு தொலைவில் இல்லை.

குறிப்பாக தேசிய வாதம் என்பது இன மொழி அதன் கலாசரம் பாரம்பரியம் அடையாளம் போன்றவற்றின் தனித்துவத்தை மையப்படுத்தி சுயநிர்ணயத்தை உறுதிபடுத்தி ஏனைய அரசுகளின் தலையீடற்ற இறைமையை தன்னகத்தே கொண்டு ஆட்சி செய்யும் முறைக்குரிய கருத்தியலாகும். எனினும் பல்லின சமூகம் வாழுகின்ற தேசத்தில் ஏனைய இனத்தவர்களுக்குரிய அடையாளம் சுயநிர்ணயம் கலை கலாசாரம் போன்றவற்றை பேணுவதற்கும் அனுபவி;பதற்கும் இருக்கின்ற தடையற்ற சூழலை உறுதிப்படுத்துவதன் மூலம் தேசத்தின் நலன் கருதி அரசியல் செய்வது குறித்த பெரும்பான்மை சமூகத்தால் கட்டமைக்கப்பட்ட தேசிய அரசாங்கத்தின் நிலைபேறுக்கு வலுவூட்டும்.

எனினும் ராஜபக்ச அரசாங்கம் பௌத்த மற்றும் சிங்கள சித்தாந்தங்கள் கொண்டவர் அனைவரும் தேசிய வாதிகள் அதுவே தேசியவாதம் எனும் புதிய வரைவிலக்கணத்தை இலங்கை அரசியல் வரலாற்றில் உருவாக்கி வருகிறார்.
இதன் வெளிப்பாடகவே எத்தனை தான் ஊழல் மோசடிகள் செய்தினும் மீண்டும் மீண்டும் தேசியவாதம் பேசும் கட்சியினருக்கு தனது வாக்குகளை மீண்டும் மீண்டும் பெரும்பன்மை சமூகம்; வாரி வழங்கி வருகிறது.

ஒரு ஜனநாயக குடியரசில் மூன்று பிரதான தூண்களாக சட்டம் நீதி நிர்வாகம் ஆகிவற்றை குறிப்பிட்டு நான்காவதது தூணாக ஊடகத்தை குறிப்பிடுவர் ஊடாக சுதந்திரம் என்பது நவ ஜனநாயக ஆட்சி முறையில் பேச்சு சுதந்திரம் தகவல் அறியும் உரிமை மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது தவிர்க்க முடியாததும் வீரியம் மிக்கதுமாகும்.

எனினும் மகிந்த ஆட்சியிலேயே பல ஊடகவியலாளர்கள் மீதான அடக்கு முறைகள் இடம்பெற்றுள்ளன.

பத்திரிகையாளர் சிவராம் தலைமறைவு, எக்நலிகொட, லசந்த இன்னும் பலரின் கொலை தாக்குதல் காணமல் போதல் போன்றவற்றுக்கு பொறுப்பு கூற வேண்டிய கட்டாயம் காலத்தால் மழுங்கடிப்பட்டு வருகிறது. இக்கட்டுரையில் நடுப்படுதியில் குறிப்பிட்டது போல கருத்துச் சுதந்திரம் என்பது அரசாங்கத்தை அணுசரித்து நடப்பவர்களுக்கு மாத்திரமே எனும் பாசிஸ கோட்பாட்டு சிந்தனையாகும்.

அண்மைக்காலமாக சிரஸ ஊடகத்தை கட்டுப்படுத்தும் மறைமுக முயற்சி இடம்பெறுவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அண்மையில் பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்தும் போது சுட்டிக்காட்டினார். அதனை ஆக்கபூர்வாமாக மறுதலித்து எவ்வித அறிக்கையும் இதுவரை வெளியிடவல்லை என்பதும் அரசாங்கம் மீதான அவ்விடயம் குறித்த ஐயப்பாடு வலுப்பெறுகிறது. ஏகபோக ஆட்சியில் தமக்கு எதிராக செயற்படுபவர்களை ஒடுக்குவதும் நசுக்குவதும் இல்லாமல் ஆக்குவதும் பாசிச பண்புகள் ஆகும். மகிந்த அரசாங்கத்தின் இந்த மறைமுக நிகழ்;சி நிரல் அதனையே பறைசாற்றுகிறது.

சட்டக்கல்லுரி அனுமதி பரீட்சைக்கு குளிரூடப்பட்ட தனி அறையில் பரீட்சை எழுதியமை சம்பவம் குறித்து நாமல் ராஜபக்சவுக்கு எதிராக மூன்று மாணவர்களால் அடிப்படை மனித உரிமை வழக்கு தொடுக்கப்ட்டடை அவை விசாரணைக்கு வரும் முன்னே அம்மாணவர்கள் காணாமல் போயினர். ஒருவர் தாக்கபட்டதாகவும் இன்னுமொருவர் சுவிஸ் நாட்டில் அடைக்களம் பெற்றதாகவும் உத்தியோகபற்றற்ற செய்திகள் மூலம் அறியகிட்டியது. இவ்வாறு தனது அதிகாரமிக்க ஏகபோக செயற்பாடுகளுக்கு எதிராக செயற்படுபவர்களை ஒடுக்குதலும் இல்லாமல் செய்தலும் பலயீனப்படுத்தலும் பாசிச செயற்பாடுகளின் உச்சமாகும்.

இனி ஒரு ஆயுத போராட்டம் ஏற்பட வாய்ப்பில்லாத சூழ்நிலையிலும் விடுதலை புலிகளின் அமைப்பின் மறு உருவாக்கமே அதை நோக்கிய செயற்பாடுகளோ இல்லாத நிலையிலும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் நீட்சியானது அரசாங்கத்தின் பாசிச சித்தாந்தத்தின் மூலோபாயமே. ஆரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு குந்தகம் விளைவிக்ககுமம் தரப்பினரை இந்த சட்டத்தின் கீழ் கைசெய்து நீண்ட காலம் தடுத்து வைப்பதன் மூலம் குறித்த தரப்பினரால் எழுச்சி பெறும் கருத்துருவாக்கத்தையும் எதிர்ப்பையும் மௌனிக்க செய்வதற்கே இச்சட்டம் பயன்பட்டு வருகிறது.

அதிகார பரவலாக்கல் 1310 போன்ற அரசியலைப்பின் மீதான சீர்த்திருத்தங்கள் உப தேசிய இனங்களின் இருப்பபை வலுப்படுத்தும் சிறந்த சீர்திருத்தமாக இருக்கின்ற நிலையில் குறித்த சீர்த்திருத்தமானது பெடரல் முறைமை அது அதிகாராங்களை மாகாணங்களுக்கு தாரைவார்த்து தேசத்தை கூறுபோடக் கூடிய அபாயம் இருப்பது போன்ற ஒரு கருப்பொருளை சந்தைப்படு;த்தி பெரும்பான்மை சமூகத்தின் தேசியவாத நம்பிக்கைககளை போஷித்து வருகிறது ராஜபக்ச அரசாங்கம்.

வேற்று மத மொழி கலை கலாசாரங்களை கொண்ட மக்களின் வாழ்வாதரார சுயநிர்ணய உரிமை போன்ற ஜனநாயக ஆட்சியின் பேறுகளை தடையின்றி அனுபவிக்கும் சூழலை உறுதி செய்வதன் மூலம் நாட்டின் தேசிய அபிவிருத்தியின் முன்னெடுப்புகளுக்கு ஏனைய தேசிய இனக்குழுவினரின் காத்திரமான பங்குபற்றுதலை மிகக்கவனமாக தவிர்த்து வருகின்றமை நிசர்சன உண்மையாகும்.

வடக்கு கிழக்கில் காணிகள் விடுப்பில் முன்னாள் போராளிகள் விடுதலை போன்ற விடயங்கள் அரசின் அரசியல் நலன் சார்ந்த கணிப்பின் அடிப்படையில் கையாளப்பட்டு வருகின்றமையும் அரசின் பாசிச அணுகுமுறைக்கு சான்று பகறும் செயல்முறையாகும்.

அண்மைக்காலத்தில் ஜனாதிபதி பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்ட துமிந்த சில்வாவின் விடுதலைக்கு ஜனாதிபதி தரப்பில் இருந்து எவ்வித நியாயமும் இதுவரை முன்வைக்கப்பட வில்லை. விசாரணை ஏதுமின்றி தங்கள் வாழ்நாளில் பாதியை சிறையில் கழித்து வரும் பல முன்னாள் போரளிகள் எனும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்ட்டவர்கள் பலர் இருக்க ஏற்கனவே தண்டனைக்காலம் முடிவடையும் தருவாயில் இருக்கின்ற 16 பேரை மாத்திரம் விடுதலை செய்ததும் நாடறிந்த போதை பொருள் மற்றும் மனிதப்படுகொலையோடு சம்பந்தப்பட்ட துமிந்த சில்வாவை விடுதலை செய்தது கீர்த்திமிக்க ஒழுக்க நெறிமுறை கொண்ட இராணுவம் என கூறிக்கொள்ளும் இலங்கை இராணுவத்தில் சேவையாற்றிய பின்புலம் மிக்க ஒரு ஜனாதிபதிக்கு ஒவ்வாத செயலாகும் என பல தரப்பட்ட சிவில் மற்றும் சமூக நல அபை;புகள் ஆதங்கத்தை வெளியிட்டன.

மேலும் இது குறித்த வெளிப்படையான எவ்வித அறிக்கையோ கருத்துக்களோ இதுவரை வெளிப்படுத்தப்படாததது தனது முடிவுகள் குறித்த நியாயப்பாடுகளை எவருக்கும் கூற வேண்டிய அவசியம் இல்லை எனும் நிறைவேற்று அதிகாரத்தின் செறுக்கின் வெளிப்பாடகவே கருத முடியும்.

கோவிட் குறித்து நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையிலும் சரி ஜனாதிபதி பொது மன்னிப்பு குறித்த விடயமும் சரி ஜனாதிபதியின் அளுமை வறட்சி தீர்க்கதரிசனமி;ன்மை ஏகாதிபத்திய முடிவுகள் என பல்வேறுபட்ட வகையில் அரசியல்துறை வல்லுநர்களாலும் ஊடகங்களாலும் விமர்சிக்கப்பட்ட போதும் அவை எது பற்றியும் கவலையின்றி தனது ஆட்சியை பலப்படுத்தும் நோக்கிலேயே தொடர்ந்தும் செலாற்றி வருகிறது மகிந்த அரசாங்கம்.

எனவே தகவல் அறிதல் எனும் கருத்து சுதந்திரம் அரசை அண்டி நடப்பவருக்கே எனும் பாசிச பண்பு இங்கே வெளிப்படுகிறது. மக்கள் செல்வாக்கை பெற்ற ரஞ்சன் ராமநாயக்க கைது செய்யப்பட்;டு இருப்பது இதுவரை பிணை வழங்கப்படாமையும் கூட ரஞ்சன் நீண்ட காலமாய் செய்து வந்த வெளிப்படையான அரசாங்கத்திற்கெதிரான நிதர்சன விமர்சனங்களாகும்.

அரசை விமர்சிப்பவன் அடக்கப்படுவான் எனும் பாசிச பண்பு இங்கே எழுதப்படாத சட்டமாய் பாய்கிறது.

ரஞ்சன் ராமநாயக்கவின் பேட்டிகளின் தார்ப்பரியத்தை மக்கள் உணர ஆரம்பித்ததும் சமூக ஊடகங்ளில் பெரிதும் பேசப்படும் விடயமாக மாறியமையும் அரசின் நிலைப்புக்கும் அதன் கீர்த்திக்கு உள்நாட்டு மற்றும் சர்வதேச ரீதியில் ஏற்பட்டுவரும் பாதகமான தாக்கத்தையும் நிறுத்ததுவதற்கே முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருi;டய கைதும் சிறைவாசமும் அமைந்தது.

இச்செயலானது பேச்சுரிமை என்பது அரசினை புகழவும் அவர்தம் செயற்பாடுகளை நியாயப்படுத்துவதற்கும் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற பாசிச எண்ணக்கருவின் மற்றுமொரு முகமாகும்.

ராஜபக்ச அரசாங்கம் ஆட்சி பீடம் ஏற பெரும்பங்காற்றி தேசிய இயக்கங்கள் இனவாத குழுக்கள் பௌத்த தேரர்களாலும் பாரிய அழுத்தத்துக்கு ஆளாகி வரும் நிலையிலும் தொழில் சங்கங்கள் மாணவர் அமைப்புகள் ஆசிரியர் அதிபர் சங்கங்கள் போராட்டம் நடத்திவரும் வேளையிலே ராஜபக்ச கூட்டணி தமது மற்றுமொரு சகோதரரான பசில் ராஜபக்சவை நிதி அமைச்சராக நியமித்தது.

பசிலின் இந்த நியமனம் குறித்து அரச தரப்பிலே கடும் ஆட்சேபனைகளும் உட்பூசல்களும் உக்கிரமடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. சிங்கள தேசியவாத பிரச்சாரங்கள் மூலம் ராஜபக்ச அரசுக்கு பேராதரவு திரட்டிக்கொடுத்த விமல் வீரவன்ச கம்மன்பில போன்றோர் விரக்தியின் உச்சத்திற்கு சென்றுள்ளமை அவர்களுடைய நீண்ட மௌனித்த போக்கு பறை சாற்றுகிறது.

அரசின் கூட்டணி கட்டசியான ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளரான தயாசிரி ஜயசேகரவின் சமீபத்தியய ஊடகத்திற்கான உரைகள் விரக்தியின் மன உளைச்சலின் அறிகுறிகள் தென்பட்டன. ஆட்சிமுறையில் கணிசமான பாசிச பங்கை வெளிப்படுத்திய ராஜபக்ச அரசு கூட்டணி தற்போது தனது கட்சிக்குள்ளும் அதன் பாசிச பண்புகளை காண்பிக்க வேண்டிய துரதிஸ்ட சூழ்நலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இங்கே நான் துரதிஸ்;டம் எனக்குறிப்பிடுவதற்கு காரணம் ராஜபக்ச அரசின் பார்வையில் பாசிச பண்புகளின் தீவிரம் உட்கட்சிக்குள் வெடித்தல் என்பது மகிந்தவின் ஆட்சியின் வீழ்ச்சிக்கு அது பெரும் தாக்கத்தை உருவாக்கும்.

தற்போதும் ஜனாதிபதி கோட்டாபே ஆதரவு தரப்பு பிரதமர் மகிந்த ஆதரவு தரப்பென இரு தரப்பினர் கூட்டணி கட்சிகளுக்குள் இருக்கின்றனர்.

ஒரு மிதமிஞ்சிய தேசியவாதம் நவஜனநாயகத்தின் அடையாளங்களை அழித்து சர்வதேசங்களின் பார்வையில் இலங்கையின் பெரும்பன்மை சமூகம் பல்லின சமூகத்தோடு வாழுகின்ற மனநிலையற்றவர்கள் எனும் கருத்தியலை வலுப்பெற செய்கிறது. இலங்கை அரசாங்கம் நல்லிணக்கம் மற்றும் சிறுபான்மை சமூகங்களின் தேசிய உரிமைகளை போன்றறவற்றுக்கு போதிய முக்கியத்துவம் அளிப்பதில்லை போன்ற கருத்தியல்களும் சர்வதேசங்களின் இலங்கை மீதான அபிப்பிராய உருவாக்கத்தில் பாரிய தாக்கத்தை உருவாக்கி வருகிறது.

அது போன்றே அதிகாரத்தை தக்க வைக்கவேண்டும் எனும் முனைப்பிலே எல்லையற்று பிரயோகிக்கும் அனைத்தாண்மை வாதச் செயல்கள் தங்கள் கூட்டணி கட்சிகளோடும் பிரயோகிக்கும் போது அது பாசிச செயற்பாடுகளுக்கு ஒப்பானதாய் மாறுகிறது.

குறிப்பாக கொவிட் தொற்று நோய் காரணமாக இன்று வரலாறு காணாத அழுத்தத்திற்கும் விமர்சனத்திற்கும் உட்பட்டு வருகின்ற அமைச்சாக சுகாதார அமைச்சை குறிப்பிட முடியும். ஏனை அதிபர் ஆசிரியர்களின் ஓயாத போரட்டங்கள் மூலம் கல்வி அமைச்சும் பெரும் சவாலை எதிர்நோக்கி வருகின்ற நிலையில் ராஜபக்ச அரசாங்கம் ஓகஸ்ட் 16 ஆம் திகதி திடீர் அமைச்சரவை மாற்றங்களை செய்தது.
7 புதிய அமைச்சர்களும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர். சுகாதார அமைச்சர் பதவி பவித்ரா வன்னியாரச்சியிடம் இருந்து கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு மாற்றப்பட்டது.

இலங்கையில் வரலாறு காணாத கடுமையான சவால்களுக்கும் விமர்சனங்களுக்கும் முகம் கொடுத்து வருகின்ற இவ்வமைச்சினை தன்னிடம் இருந்து விலக்கி மற்றுமொரு அமைச்சருக்கு அளிக்கவிருப்பது குறித்தோ தான் போக்குவரத்து துறை அமைச்சாராக நியமனம் பெறவருப்பது குறித்தோ முன் அறிவித்தல் எதுவும் தனக்க கிட்டவில்லை என்றும் தனக்கும் இது ஆச்சரியத்தை தந்தது என்றும் முன்னாள் சுகதார அமைச்சர் திருமதி பவித்ரா வன்னியாரச்சி அவரது அமைச்சிலே நிகழ்த்திய பிரியாவிடை உரையிலே குறிப்பிட்டிருந்தார்.

அரசியலமைப்பின் சட்டவாக்க அதிகாரம் ஜனாதிபதிக்கு இத்தகைய அமைச்சு மாற்றங்களை செய்வதற்கு ஏதுவாக இருந்த போதிலும் இதுவரைக் காலமும் அரசாங்கத்தில் அங்கம் வகித்தும் கொவிட் தொற்று நோய் தாக்கங்களினால் அரசாங்கத்தை நோக்கி எழுப்பப்பட்டு வரும் பெரும் எதிர்ப்பார்ப்புகளையும் சவால்களையும் ராஜபக்ச அரசாங்கத்துக்கு விசுவாசமான அமைச்சராய் பணிபுரிந்து அழுத்தங்களை சமாளித்து வந்த அமைச்சர் ஒருவருக்கு எவ்வித முன்னறிவித்தலும் இது குறித்து வழங்கப்படாமை இராணுவ பின்புலத்தைக் கொண்ட கோட்டாபே ராஜபக்ச ஜனாதிபதியின் ஏகாதிபத்திய செயற்பாட்டாகும்.

கோவிட்டை கட்டுபடுத்துகின்ற குழுவில் பணியாற்றி வைத்தியர் அனில் தயசிங்க மருத்துவ ரீதியில் எதிர் கொள்ள கூடிய சவால்களை தொடர்ந்தும் முன்வைத்து வந்ததன் காரணமாகவே முற்றாக வேறு துறைக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டார் என எதிர் கட்சி குற்றம் சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

ஜோன் கொத்தலாவல தேசிய பல்கலைக்கழகம் தொடர்பான சட்ட மூலத்தை அமுலாக்கும் முயற்சியில் அரசாங்கத்தின் முனைப்புக்கு பல சிவில் மற்றும் மாவர் அமைப்புகள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். கோவிட் காலத்தில் ஒன்று கூடுதல் தடையை மீறியமைக்கு கைது செய்து நீதி மன்றில் பிணையில் விடுவி;க்கப்பட்ட பின்னர் தான்தோன்றித்தனமாக அவர்களை பீ சீ ஆர் பரிசோதனைக்கு பலவந்தடாக இழுத்து செல்லுகின்ற செயற்பாடுகள் பாசிச செயற்பாடாகும்.

நீதி மன்றில் சமர்ப்பிக்கப்பட்ட குற்றப்பத்திரிகையில் இங்ஙனம் பிணையளித்தலின் போது பீ சீ ஆர் பரிசோதனைக்கு உட்பட வேண்டும் என்ற நிபந்தனையை பொலிஸார் முன்வைக்காத பட்சத்தில் நீதி மன்றமும் அத்தகைய நிபந்தனையினை அறிவுறுத்தாத சந்தர்ப்பத்தில் பொலிஸாரின் இச்செயல் ஒரு காட்டுமிராண்டித்தனமான செயற்பாடாக பல ஊடகங்கள் விமர்சித்து இருந்தது. எனவே நீதித்துறையையும் ஆதிக்கம் செலுத்துகின்ற வகையில் இவ்வரசின் பாசிச செயற்பாடுகள் வியாபித்து செல்கிறது.

மற்றுமொரு புறம் மகிந்த அரசாங்கம் ஆட்சி பீடம் ஏற முன்னின்று செயல்பட்ட பல பௌத்த தேரர்கள் மற்றும் பௌத்த விகாரை தலைமை பிக்குமார் சீனாவின் கடன் பொறிக்குளிருந்து தப்பிப்பதற்காக நாட்டின் சொத்துக்கள் விற்கப்படுவது தொடர்பில் தங்கள் கோபத்தையும் ஆதங்கத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர். பாசிச ஆட்சி என்பது தோல்வி அடைந்த ஒரு சிந்தாந்தம் என்பது உலக அரசியல் வரலாறுகள் சான்று பகர்கிறது. இருப்பினும் தன்னாதி;க்க உந்துதலில் அதிகார பேராசையில் முன்னெடுத்த பல நடவடிக்கைகளில் பாசிச முறையைமகளை கையாள வேண்டிய சூழ்நிலைக்கு மகிந்த அரசாங்கம் தள்ளப்பட்டது என்ற கோணத்திலும் நாம் நோக்க வேண்டிய ஒரு கட்டாயம் உண்டு.

ஏனெனில் நல்லாட்சி அரசாங்கத்திற்கு முந்திய ஆட்சி காலத்தில் பெரும் ஊழல் மோசடிகள் காரணமாகவே மகிந்த அரசாங்கம் மக்களால் தோற்கடிக்கப்பட்டனர். எனினும் மீண்டும் ஆட்சியை பிடிக்க மகிந்த தரப்பு கையிலெடுத்த ஒரே ஆயுதம் தேசிய பாதுகாப்பு மற்றும் தேசிய வாத சாயம் பூசப்பட்ட இனவாதம்.

தேசிய பாதுகாப்பு தேச பக்தி தேசிய அடையாளம் போன்றவற்றை மையப்படுத்தி தனது பிரசாரங்களை முன்னெடுத்த மகிந்த தரப்பு ஆட்சிக்கு வந்த முதற்கட்டமாக நல்லாட்சி அரசாங்கத்தின் காலப்பகுதியில் நடைமுறையில் இருந்த அரச விழாக்களில் தமிழிலும் தேசிய கீதம் பாடப்படும் முறையையை இல்லாமல் செய்து சிங்களத்தில் மட்டும் பாட வேண்டும். என்ற நிலைப்பாட்டை முன்னிறுத்தியது.

இதன் மூலம் பெருவாரி சமூகமான சிங்கள சமூகத்துக்கு திருப்தி அளித்து அதன் மூலம் தேசிய உணர்வுக்கும் மதிப்பளிக்கும் ஒரு அரசு எனும் அடையாளத்தை ஆரம்பத்திலேயே திடமாக பதிவு செய்து கொண்டது.

ஆயினும் தற்போது உள்ளக கட்சி நிர்வாக முறையில் – நலன் பேண் குழுக்கள் உடனான உறவுகளை தக்கவைத்துக் கொள்வதிலும் சிவில் அமைப்புகளுடனான உறவுகளில் அனைத்திலும் ராஜபக்ச தரப்பினர் ஆரோக்கியமான நிலையில் இல்லை என்பது உத்தியோகபற்றற்ற செய்தித் தரவுகள் குறிப்பிடுகின்றன.

பாராளுமன்றில் ஆதரவு போதிய அளவு உள்ள ராஜபக்ச அரசாங்கத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் அரசியலமைப்பின் மீதான 20 ஆவது சீர்த்திருத்தத்தையும் வெற்றிகரமாக நிறைவேற்றிக்கொண்டது. இந்த 20 ஆவது சீர்திருத்தமானது பல புத்தி ஜீவிகளாலும் சிவில் அமைப்புகளாலும் நாட்டிற்கு கேடு விளைவிக்கக் கூடியது என எதிர்வு கூறப்பட்டது. சிறுபான்மை இனக்குழுக்களான தமிழ் மற்றும் முஸ்லிம் இனக்குக்கள் சிங்க தேசியவாத உருவாக்கத்திற்கு பாரிய தடையாக இருப்பதாகவும் அதனை முறியடிக்கவே 20 ஆவது சீர் திருத்தம் அவசியம் எனவும் ராஜபக்ஸ தரப்பு வாதிடடு அதனை வெற்றிகரமாய் நிறைவேற்றிக் கொண்டது.

நாட்டின் ஜனாதிபதிக்கு எல்லையற்ற கூடுதல் அதிகாரம் வழங்குகின்ற இந்த சீர்திருத்தமனது இராணுவ பின்புலம் கொண்ட ஒரு நகர சபை உறுப்பினராக கூட கடமையாற்றிய அனுபமற்ற ஒருவரிடம் குவிவது பாசிசத்தின் கோர தாண்டவத்தை வெளிப்படுத்த சாதகமான சூழலை உருவாக்கியுள்ளது.

• ஒரு வருடத்திற்கு பின்னர் நாடாளுமன்றத்தை அதிபரின் சுயவிருப்பின் அடிப்படையில் கலைத்தல்
• நீதிச் சேவை ஆணைக்குழு உறுப்பினர்களை நீக்கும் அதிகாரம்
• பொலிஸ் ஆணைக்குழுவின் அதிகாரங்கம் குறைப்பு
• இரட்டை குடியுரிமை கொண்டவர் தேர்தலில் போட்டியிடலாம்.
• ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்குரிய வயதெல்லை 35 இல் 30 ஆக குறைப்பு
• ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுபவர் பாராளுமன்ற உறுப்பினராக இருக்க தேவையில்லை
• 40 ஆக குறைக்கப்பட்டிருந்த கெபினட் அமைச்சர்களின் எண்ணிக்கை நீக்கம்
• ஜனாதிபதி எவருடைய அடிப்படை உரிமையை மீறினாலும் அது சிவில் அல்லது குற்றவியல் சட்டங்களுக்குள் உட்படாது (வழக்கு தொடர முடியாது)
• சுதந்திர ஆணைக்குழுக்களுக்குரிய தலைவர்களை நியமித்தல்
• மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதி பொலிஸ்மா அதிபர் சட்டமா அதிபர் போன்ற உயர்பதவிகளுக்கு நியமனம் வழங்கல்.

ஜனநாயக நாட்டில் பௌத்த சிங்கள தேசியவாத அலைகளின் உதவியோடு அதிகாரம் எனும் மிகப்பெரிய கப்பலை பாசிச துடுப்புக்களை கொண்டு ராஜபக்சேக்கள் ராஜாங்கம் நடத்தி வருகிறார்கள்.

இந்த இராஜாங்க பயணம் ஈற்றில் ஒரு தனிச்சிங்கள இராச்சியத்தை அமைக்குமா ? இல்லை ராஜபக்ச நவ மன்னராட்சி முறை தோன்றுமா ? இல்லை மக்கள் எனும் பேரலையால் அடித்து செல்லப்படுமா ? என்பதை காத்திருந்து பார்க்க வேண்டிய கட்டாயத்திலே மக்கள் உள்ளனர்.

எனினும் இங்கே மக்கள் என நான் குறிப்பிட்டது பிழைப்பரசியல் நடத்துகின்ற ராஜபக்ச ஆதாரவாளர்கள் செல்வந்தர்கள் இரட்டை பிரஜா உரிமை கொண்டவர்கள் அல்லாத சராசரி மக்களை ஆகும். இவர்களே இவ்வாறு காலத்தின் தீர்மானம் வரும் வரை பலவற்றை தியாகம் செய்து காத்திருக்க வேண்டும் என்ற கசப்பான உண்மையை வருத்தத்தோடு பதிவு செய்கிறேன்.

அனைவருக்கும் கருத்துக்களை சுதந்திரமாக வெளியிடுவதற்கு உரித்தான உரிமைக்கு மதிப்பளித்து சுதந்திர ஊடகவியலாளர் இருளப்பன் ஜெகநாதன் எழுதிய இந்தக்கட்டுரையை குளோப் தமிழ் இணையத்தளத்தில் பிரசுரிக்கின்றோம்.