நாட்டில் மழை வெள்ளம் அதிகரித்துள்ள நிலையில், களனி கங்கை ஆற்றுப்படுகையின் தாழ்நிலப் பகுதிகளில் அண்மைய வரலாற்றில் ஏற்படாத மட்டத்திலான அதி அபாயகரமான வெள்ள நிலைமை குறித்து நீர்ப்பாசனத் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. களனி கங்கை ஆற்றுப்படுகை பகுதிகளில் உள்ள நீரோட்டப் பிரதேசங்களில் பல இடங்களில் தற்போது அதிக மழைவீழ்ச்சி பதிவாகி வருவதால், மக்களை பாதுகாப்பான இடங்களை நோக்கி முடிந்தவரை விரைவாகச் செல்லுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மலையக பகுதிகளில் எந்தேரமும் மண்சரிவு ஏற்படலாம் என்பதால். அம்மக்களையும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 69 ஆக அதிகரித்துள்ளது. 34 பேர் காணால் போயுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ மத்தி நிலையம் தெரிவித்துள்ளது
மாவட்ட ரீதியிலான தகவல்களும் தற்போது படிப்படியாக வெளியாகின்ற நிலையில் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகின்றது.
61,175 குடும்பங்களைச் சேர்ந்த 219,282 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட 5,890 குடும்பங்களைச் சேர்ந்த 18,443 பேர் 266 தற்காலிகப் பாதுகாப்பு நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பல பகுதிகளில் மக்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ளனர். அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் தகவலின் படி 4 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதாகவும் 666 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மலையக பகுதிகளில் எந்நேரமும் மண்சரிவு ஏற்படலாம் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மலையகப் பிரதேசங்களில் 24 மணித்தியாலங்களில் 150 மி.மீ. இற்கும் அதிகமான மழைவீழ்ச்சி நிலவினால் அந்த இடங்களில் மண்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், ஆனால் கடந்த 24 மணித்தியாலங்களில் 500 மி.மீ. இற்கும் அதிகமான மழைவீழ்ச்சி மலையகப் பிரதேசங்களில் பதிவாகியுள்ளதாகவும், எனவே, மலையகப் பகுதிகளில் எந்த நேரத்திலும் மண்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதால், மண் மேடுகள் உள்ள இடங்களில் இருந்து உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் மண்சரிவு தொடர்பான ஆராய்ச்சிப் பிரிவின் பணிப்பாளர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்தோடு, கொழும்பு வெள்ளக்காடாகியுள்ளதோடு, வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன. பாரிய மரங்கள் வீதிகளில் முறிந்து வீழ்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பல கட்டிடங்களில் கூரைகள் பிய்த்தெறியப்பட்டுள்ளன.
நிலவும் அனர்த்த நிலையை கருத்திற்காண்டு, க.பொ.த உயர் தரப் பரீட்சை உள்ளிட்ட அனைத்துப் பரீட்சைகளும் மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திக லியனகே தெரிவித்துள்ளார்.
உயிர் காப்புப் பணிகளுக்கு உதவி பெறுவதற்காகப் பொலிஸார் தொலைபேசி இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளனர். பணிப்பாளர் / பொலிஸ் கடற்படைப் பிரிவு, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கபில பிரேமதாச : 071-8591868. இதற்கு அழைத்து உதவு பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அனர்த்த நிலைமையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்கும் நடவடிக்கைகளுக்காக ஹெலிகொப்டர்களை வழங்க இந்தியா முன்வந்துள்ளது. நிவாரணங்களை வழங்கவும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

