வெள்ளத்தில் சேதமடைந்த தமது வீட்டுக்கான அரசாங்க நிவாரணத் தொகை வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டின் பேரில், சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் பணியாற்றும் ஒரு கிராம சேவையாளருக்கு எதிராக 16 வயது மாணவன் ஒருவர் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு சமர்ப்பித்துள்ளார்.
கல்லூண்டாய் புதிய வீடமைப்புத் திட்டத்தில் வசிக்கும் யோகநாதன் ராயித் என்ற குறித்த மாணவன், தந்தையின்றி, தாயின் பராமரிப்பில் வாழ்ந்து வருகிறார். அவர் புனித பத்திரிசியார் கல்லூரியில் படித்து வருகிறார். குடும்பச் சுமை காரணமாக அவரது தாயார் கடந்த மூன்று மாதங்களாக கொழும்பில் வேலை செய்து வருவதால், மாணவன் பாதுகாப்பிற்காக குருநகரில் உள்ள பெரியத்தாயின் வீட்டில் தங்கி வருகிறார்.
அவரது அம்மம்மாவும் அவர்களுடன் வசிப்பதால், இருவரின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் பொறுப்பு தாயாரின் மேல் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கல்லூண்டாய் வீட்டுக்கு அவர் வழக்கமாக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சென்று வருவதாகவும், அங்கு மத ஆராதனையும் நடைபெறும் எனவும் தெரிவித்தார். எனினும், கடந்த இரண்டு வாரங்களாக வெள்ளநீர் காரணமாக அங்கு செல்ல முடியவில்லை; மின் இணைப்புகளும் நீரில் மூழ்கியுள்ளதாக உறவினர் ஒருவர் அறிவித்துள்ளார்.
இந்த சூழ்நிலையில், வெள்ள நிவாரணமாக வழங்கப்படும் ரூ.25,000 அரச கொடுப்பனவை பெற தாயார் கிராம சேவையாளரை அணுகியபோது, அவர் பதிவு செய்ய மறுத்துவிட்டதாக மாணவன் கூறியுள்ளார்.
மேலும், அதே குடியிருப்பில் உண்மையில் வசிக்காத குடும்பத்தாருக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ள நிலையில், தமது குடும்பம் மட்டும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும், இது ஊழல் செயலாக இருப்பதாகவும் அவர் முறைப்பாட்டில் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் தீர்வு கிடைக்காததால், உரிய நீதி கிடைக்க மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலையீட்டை கோருவதாக மாணவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
குறித்த முறைப்பாடு ஏற்றுக்கொள்ளப்பட்டமைக்கான பதிலையும் மனித உரிமைகள் ஆணைக்குழு அனுப்பியுள்ளது.


