கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பதில் பிரதிப் பணிப்பாளர் பணிநீக்கம் – சஜித் கண்டனம்

0
82
Article Top Ad

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பதில் பிரதிப் பணிப்பாளராகக் கடமையாற்றிய வைத்தியர் ருக்ஷான் பெல்லனவின் பணியை இடைநீக்கம் செய்ய சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பான உத்தியோகபூர்வ கடிதம், சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் கடிதத் தலைப்பின் கீழ் வெளியிடப்பட்டுள்ளது.

தரமற்ற மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டமை காரணமாக உயிரிழந்த இரு யுவதிகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்த பின்னியிலேயே வைத்தியர் ருக்ஷான் பெல்லன பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சுகாதார அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில், பொறுப்பு வாய்ந்த பதவியை வகிக்கும் அரச வைத்திய அதிகாரி என்ற ரீதியில், அனுமதியின்றி பல்வேறு ஊடகங்கள் வாயிலாக கருத்து வெளியிட்டு நாட்டில் சர்ச்சையும் பொதுமக்களிடையே அமைதியின்மையும் ஏற்படுத்தியதாகக் குறிப்பிடப்பட்டு, இந்த பணி இடைநீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் எதிர்காலத்தில் முறையான ஒழுக்காற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் இதற்கு கண்டனம் வெளியிட்டார். தரமற்ற மருந்துப் பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்தவர்கள் இன்னமும் பணியைத் தொடர்வதாக அவர் குறிப்பிட்டார்.

ஹபரகட மற்றும் மத்துகம பிரதேசங்களில் தரமற்ற தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டமையால் இரு யுவதிகள் உயிரிழந்துள்ள நிலையில், இது தொடர்பில் உண்மைகளை வெளிப்படுத்திய வைத்தியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை நியாயமற்றது எனத் தெரிவித்தார். சுகாதாரத் துறையில் நிலவிவரும் ஊழல் மற்றும் தரமற்ற மருந்துகள் தொடர்பான விடயங்களைப் பேசுவதற்கு அவருக்கு உரிமை உண்டு என்றும், வாழும் உரிமையும் சுகாதார உரிமையும் அடிப்படை உரிமைகள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், நாட்டில் தற்போது சட்டவிரோத மருந்துப் பொருள் மாபியா செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட எதிர்க்கட்சி தலைவர், அரசியலமைப்புச் சட்டத்தின் ஊடாக சுகாதாரத்தை அடிப்படை உரிமையாக அங்கீகரிக்கும்போது, வாழ்வதற்கான உரிமையும் வலுப்பெறும் எனத் தெரிவித்தார்.