நிருபமா மோசடி விவகாரம்: ஒட்டுமொத்த இலங்கையருக்கும் அவமானம்! – எதிரணி குற்றச்சாட்டு

0
300
Article Top Ad

“நிருபமா ராஜபக்ச வெளிநாட்டில் திருட்டுத்தனமாகச் சேமித்து வைத்துள்ள 3 ஆயிரத்து 500 கோடி ரூபா விவகாரம் ஒட்டுமொத்த இலங்கையர்களுக்கும் அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது.

– இவ்வாறு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி. துஷார இந்துனில் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற பெறுமதிசேர் வரி திருத்தச் சட்டமூல விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

“ஒரு புறம் யொகானி என்ற பாடகி சர்வதேச அளவில் புகழ் பெற்றதையிட்டு நாம் மகிழ்ச்சியடைந்து கொண்டிருக்க இன்னொரு  புறம் நிருபமா ராஜபக்ச என்ற பெண்ணும் சர்வதேச அளவில் புகழ்பெற்றதையிட்டு  இலங்கையராக நாம் வெட்கப்படுகின்றோம்.

இந்த ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த நிருபமா ராஜபக்ச என்பவர் வெளிநாட்டில் திருட்டுத்தனமாக 3 ஆயிரத்து 500 கோடி ரூபாவை சேமித்து வைத்த நிலையிலேயே புகழ் பெற்றுள்ளார்.

இந்த 3 ஆயிரத்து 500 கோடி ரூபாவில் ஒரு மாதத்துக்கு ஒரு கோடி ரூபா என்ற அடிப்படையில் செலவழித்தால் 250 வருடங்களுக்கு இவரின் 5 தலைமுறைகள் சொகுசாக வாழமுடியும்.

ஒரு நாளைக்கு ஒரு இலட்சம் ரூபா என்ற வகையில் செலவழித்தாலும் 900 வருடங்களுக்கு இவரின் 18 தலைமுறைகள் இந்தப் பணத்தில் சொகுசாக வாழ முடியும்.

நிருபமா ராஜபக்சவுடன் ராஜபக்சக்களை சேர்த்தால் ஒரு சமன் பாட்டையே உருவாக்க  முடியும்” – என்றார்.