அமெரிக்க பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீன் குறித்து புதிய தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து, முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ கைது செய்யப்பட்டமை இங்கிலாந்து அரசியலில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதுடன், அவரை அரச வாரிசு வரிசையில் இருந்து நீக்குவதற்கான சட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் ஆலோசனைகளை நடத்தி ஆரம்பித்துள்ளது.
ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் மீண்டும் மன்னராக வருவதைத் தடுக்கும் வகையில் இந்த சட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களை வெளியானதைத் தொடர்ந்து, தவறான நடத்தை தொடர்பான சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூக்கு எதிராக இங்கிலாந்து அரசியல்வாதிகள் கடும் கண்டனங்களை வெளியிட்டு வருகின்றனர்.
லிபரல் டெமக்ராட் கட்சியின் தலைவர் எட் டேவி, அரச வாரிசு வரிசையில் முன்னாள் இளவரசரின் அந்தஸ்து பரிசீலிக்கப்பட வேண்டும் என கூறியுள்ளார்.
“இது சரியான நேரத்தில் நாடாளுமன்றம் பரிசீலிக்க வேண்டிய ஒரு பிரச்சினை என்பது தெளிவாகிறது. இயற்கையாகவே அவர் ஒருபோதும் இனி மன்னராக முடியாது என்பதை இந்த சம்பவம் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் எட் டேவி குறிப்பிட்டுள்ளார்.
ஸ்காட்டிஷ் தேசியக் கட்சியின் (SNP) வெஸ்ட்மின்ஸ்டர் தலைவர் ஸ்டீபன் ஃப்ளைன், எப்ஸ்டீனுடன் நட்பு கொண்டதை மறுத்து பொய்களை கூறியவர் இனி நாட்டின் தலைவராக இருக்க முடியாது எனக் கூறியுள்ளார்.
பல கட்சிகளின் தலைவர்கள் ஆண்ட்ரூவுக்கு எதிரான கருத்துகளை வெளியிட்டுவரும் பின்புலத்திலேயே அரசாங்கம் அவர் மீண்டும் மன்னராக முடியாத வகையில் புதிய சட்டமொன்றை கொண்டுவர திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

