“அறிவை மேலும் மேலும் கூர்மை ஆக்கிக்கொள்ள பயன்படும் கருவி தான் கல்வி” கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் பாடசாலைக் கல்வி என்பது பல நாடுகளிலும் குறிப்பாக இலங்கை போன்ற வளர்முக நாடுகளில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது .
இலங்கையில் கடந்தாண்டு மார்ச் மாதம் ஏற்பட்ட கொரோனா முதலாம் அலைகாரணமாக மூடப்பட்ட பாடசாலைகள் இடையில் ஒருமாத காலப்பகுதியைத் தவிர கடந்த 17 மாதங்களாக மூடப்பட்டே கிடக்கின்றன. இலங்கையில் உட்கிராமங்கள் உட்பட பத்தாயிரத்திற்கு மேற்பட்ட பாடசாலைகள் இருக்கின்ற நிலையில் கொரோனாவிற்கு முற்பட்ட காலத்தில் காலத்தில் ஏதோ வகையி;ல் குறைபாடுகளுடனேனும் கல்வி நடவடிக்கைகள் இடம்;பெற்றன. ஆனால் கொரோனா இலங்கையின் கல்விக் கட்டமைப்பை தயவு தாட்சண்யமின்றி சோதனைக்குட்படுத்தியுள்ளது
நாடுதழுவிய ரீதியாக அரசாங்க சேவையிலுள்ள 247,000 ஆசிரியர்களும் 16,000 அதிபர்களும் கடந்த மூன்றுமாதங்களாக முன்னெடுத்துவருகின்ற போராட்டம் காரணமாக ஏற்கனவே கொரோனாவால் சீர்குலைந்திருந்த மாணவர்களின் கல்வி பெரும் கேள்விக்குறியாக மாறிநிற்கின்றது.
அரசாங்கப்பாடசாலைகளில் மாத்திரம் 43லட்சத்திற்கு அதிகமான மாணவர்கள் கல்விகற்கும் நிலையில் அவர்களின் எதிர்காலம் பல்வேறு தரப்பினர் மத்தியிலும் கரிசனைகளை ஏற்படுத்தியுள்ளது.
வழமையாக ஆசிரியர் தினம் இலங்கை உட்பட உலக நாடுகளில் கொண்டாடப்படுவதுண்டு . இருப்பினும் கடந்த ஆறாம் திகதி ஆசிரியர் இலங்கையிலுள்ள ஆசிரியர்களைப் பொறுத்தவரை கவலைமிக்கதாகவே மாறியிருந்தது. நாடுதழுவிய ரீதியில் 300ற்கு அதிகமான போராட்டங்களை ஆசிரியர்கள் முன்னெடுத்திருந்தனர். பல்வேறு வாசகங்கள் ஏற்பட்ட பதாதைகளைத் தாங்கியும் கோஷங்களை எழுப்பியும் ஆசிரியர்கள் தமது போராட்டத்தை முன்னெடுத்தனர்.அதில் இவ்வாறு ஒரு வாசகம் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது.
‘Happy Teachers’ Day Nut Teachers are unhappy ‘மகிழ்ச்சி மிக்க ஆசிரியர் தினம். ஆனால் ஆசிரியர்கள் மகிழ்ச்சியாக இல்லை’ என்பதே அதன் அர்த்தம். ஆசிரியர்கள் தமது நீண்டகால கோரிக்கைகள் நிறைவேறாத நிலையில் முன்னெடுத்துவரும் போராட்டம் காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பர்கள் மாணவர்களாவர். இது தொடர்பாக ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலினிடம் வினவியபோது மாணவர்களின் நிலைக்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என்று தெரிவித்தார்.
தமது வேலைநிறுத்தப்போராட்டத்தால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுவதை எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ளமுடியாது என அவர் தெரிவித்தார்.
அரசாங்க ஆசிரியர்கள் ஒன்லைன் கற்பித்தல் நடவடிக்கைகளை இடைநிறுத்திக்கொள்வதற்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு எடுத்த தீர்மானத்திற்கு முன்பாகவே மாணவர்களின் நிலை மிகவும் பரிதாபகரமாக இருந்ததாக அவர் சுட்டிக்காட்டுகின்றார். இலங்கையிலுள்ள அரசாங்க பாடசாலைகளிலுள்ள மாணவர்களில் 40 சதவீதமானவர்கள் மட்டுமே ஒன்லைன் கல்வியை பெறுவதற்கான வசதியைக் கொண்டிருந்தனர். 60 சதவீதமான மாணவர்களுக்கு எவ்வித கற்பித்தலும் இடம்பெறவில்லை. 40 சதவீதமானவர்களுக்கு ஆசிரியர்களே தமது சொந்தப்பணத்தை செலவழித்து இணைய வசதியைப் பெற்று கற்பித்தனர். இப்போது வேலைநிறுத்தம் காரணமாக அந்த நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
தீர்வு எவ்வளவு விரைவாகக் கிடைக்கின்றதோ அந்தளவு விரைவாக மீண்டும் ஒன்லைன் நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார். பாடசாலைகள் மூடப்பட்டமைக்கும் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டமைக்கும் பிரதான காரணம் கொரோனாவே தவிர ஆசிரியர்கள் அல்ல என அவர் சுட்டிக்காட்டினார்.
ஆசிரியர்கள் போராட்டம் காரணமாக ஏற்கனவே பின்தங்கிய பகுதிகளில் வாழும் மாணவர்களின் நிலைமை மிகமோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மலையகப்பகுதிகளில் உள்ள மாணவர்களின் நிலைமையே பரிதாபகரமானது. ஓன்லைன் கற்பித்தல் நடவடிக்கைகளை ஆசிரியர்கள் முன்னெடுத்தவேளையில் மலையகப்பகுதியில் இணையத்தைப் பெறுவதற்கான உரிய சிக்னல் இன்றி மாணவர்கள் மரத்திற்கு மேலிருந்தும் பாறைகளின் மேலிருந்தும் கடும் வெய்யில் மற்றும் மழைக்கு மத்தியில் கற்கும் அவலநிலை காணப்பட்டது.
இரத்தினபுரிக்கு சென்றிருந்தபோது அங்குள்ள நாவலர் வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவர்கள் சிக்னல் கிடைக்காத காரணத்தால் தாம் வாழும் தோட்டப்பகுதிளில் இருந்து பாம்புகள் காட்டு விலங்குகள் வாழும் பகுதிகளுடாக பல கிலோமீற்றர் கால்நடையாக சென்று உயர்ந்த பகுதிகளில் உள்ள மரங்கள் மற்றும் பாறைகளில் ஏறிக் கற்கும் அவலம் காணப்பட்டது. கஷ்டப்பட்டாலும் ஒன்லைன் கல்வியைக் கற்ற மாணவர்களின் நிலை மரத்தில் இருந்து வீழ்ந்தவனை மாடு மிதித்த கதையாக ஆசிரியர் போராட்டம் காரணமாக மூன்றுமாதமாக ஒன்லைன் கல்வி இடைநிறுத்தப்பட்டுள்ளதால் பெரும் பாதிப்பாக மாறிவிட்டுள்ளது.
தற்போதுநாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் ஆசிரியர்கள் பிழையான நேரத்தில் தமது போராட்டத்தை முன்னெடுத்துவருவதாகவும் அவர்களது கோரிக்கைகளுக்கு அமைவாக சம்பளத்தை அதிகரிப்பதற்கு போதிய பணம் கிடையாது எனவும் அரசாங்க அமைச்சர்கள் ஒன்றுக்குப் பலதடவை கூறியுள்ளனர்.
தற்போதைய அரசாங்கத்தின் நிர்வாகத்தில் பல்வேறு ஊழல் மோசடிகளாலும் வீண் விரயத்தாலும் பெருந்தொகைப்பணம் அபகரிக்கப்படும் நிலையில் தமது கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு தேவைப்படும்பணத்தை திரட்டுவது பெரும் சிக்கலல்ல என கூறுகின்றார் ஜோசப் ஸ்டாலின் .
‘ எயார் லங்கா நிறுவனத்திற்கு எவ்வளவு காசு கொடுத்தார்கள் . சீனி மோசடியில் எவ்வளவு காசு போயுள்ளது . வரிக்கட்டணம் எடுக்காமல் எவ்வளவு காசு இருக்கின்றது. எமக்கு வந்துள்ள தகவல்களுக்கு அமைவாக எவ்வளவு காசு போயிருக்கின்றது என்பது எமக்கு தெரியும். எனவே தம்மிடம் காசில்லை என அரசாங்கம் சொல்வது தவறாகும். நாங்கள் சுபோதினி குழுவின் அறிக்கையை அமுல்படுத்தக் கூறினோம் . அதற்கு 71 பில்லியன் ரூபா தேவை. தற்போது அமைச்சரவை கொண்டுவந்த திட்டத்தை அமுல்படுத்த கோருகின்றோம் . அதற்கு 33 பில்லியன் ரூபா மாத்திரமே தேவை. 33பில்லியன் ரூபா தேடுவது கஷ்டமானதல்ல.’
எனத் தெரிவித்தார்.
ஒக்டோபர் 21ம் திகதி பாடசாலை ஆரம்பிக்க அரசாங்க எடுத்துள்ள தீர்மானம் பற்றி கருத்துவெளியிட்ட அவர் ஆசிரியர்களின் சம்பளப்பிரச்சனை உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்படாமல் பாடசாலைகளை ஆரம்பிக்கப்படுவதை வன்மையாகக கண்டிப்பதாகக் குறிப்பிட்டார். யுனெஸ்கோ நிறுவனம் கூட ஆசிரியர்களை மையமாக வைத்தே கல்விச் செயற்பாடுகள் இடம்பெறவேண்டும் என வலியுறுத்தியுள்ளதையும் ஸ்டாலின் சுட்டிக்காட்டினார். ஆசிரியர்கள் அதிபர்களுடன் கலந்துரையாடாமல் பாடசாலைகளைத் திறக்க அரசாங்கம் நடவடிவக்கை எடுப்பது ஏற்கமுடியாத செயற்பாடு எனவும் அவர் மேலும் கூறினார்.
ஆசிரியர்கள் தமது வேலைநிறுத்தப்போராட்டம் தொடர்பாக ஆயிரம் காரணங்களைக் கூறினாலும் நீங்களும் பெற்றோர்கள் தானே எனவே மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவது பற்றி அக்கறை இல்லையா என்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஸ்டாலின்
‘ எங்கே பாதிக்கப்பட்டுள்ளது. பாடசாலைகளை இன்னமும் ஆரம்பிக்கவில்லை. பரீட்சைகள் ஆரம்பிக்கப்படவில்லை.வேறுவிடயங்கள் ஆரம்பிக்கப்படவில்லை .ஒன்லைன் மட்டும் தாம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.வேறெதுவும் பாதிக்கப்படவில்லை. புhடசாலையை 21ம்திகதிதான் ஆரம்பிக்கப்போவதாக கூறுகின்றனர். நுவம்பர் மாதம் 15ம்திகதியே பரீட்சைகள் நடத்ததிட்டமிட்டுள்ளனர். கல்வி சீரழிந்துள்ளது கொவிட் காரணமாகவேயாகும். 100ற்கு 60 மாணவர்களுக்கு கல்வியே இருக்கவில்லை. நாம் இதற்கு எவ்வித பொறுப்பேற்க அவசியமில்லை. கொவிட் காரணமாகவே அனைத்தும் பிற்போடப்பட்டன. ஆசிரியர்கள் போராட்டம் காரணமாக ஒன்லைன் மட்டுமே பாதிக்கப்பட்டது. அதற்கும் அரசாங்கம் பேசி உரிய தீர்வை எடுத்திருந்தால் இந் நிலை ஏற்பட்டிருக்காது’ எனத் தெரிவித்தார் .
அரசாங்கமும் ஆசிரியர்களும் மல்லுக்கட்டி நிற்பதால் மாணவர்களுக்கான பெறுமதியான காலம் வீணடிக்கப்படுகின்றது என்ற உண்மையை எவரும் மறுக்கமுடியாது. பாடசாலைக்கல்வி என்பதே கா.பொத.GCE A/L உயர்தரம்வரை மொத்தமாக 13ஆண்டுகள் தான் அதிலும் கொரோனாவால் 2 ஆண்டுகள் இப்படி பாழாகிப் போய்விட்ட நிலையில் இனியேனும் மாணவர்கல்வியை சரியான தடத்திற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கவேண்டும்
கணனி மற்றும் திறன்பேசி வசதி உள்ள மாணவர்கள் தொகை இலங்கையில் 40 சதவீத்திற்கும் குறைவாக இருந்தாலும் இலங்கையில் 90 சதவீதத்திற்கு அதிகமான வீடுகளில் தொலைக்காட்சி வசதி உள்ளது. எனவே எதிர்கால கல்வித்திட்டங்கள் தொலைக்காட்சியைப் பயன்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்படவேண்டும் என்ற யதார்த்த பூர்வ யோசனையும் முன்வைக்கப்படுகின்றது . கல்வி திட்டம் என்பதனூடாக மாணவர்களுக்கு பென்ட்ரைவில் பாடங்களை உட்புகுத்தி வழங்கும் நடைமுறையும் நாட்டின் பல பகுதிகளில் அரசாங்கம் அல்லாத தனிப்பட்ட நபர்கள் மற்றும் அமைப்புக்களால் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் அதன் புதிய கல்வி மறுசீரமைப்பு திட்டத்தைக் கொண்டுவருவதற்கு 2023ம் ஆண்டுவரை காத்திருக்காது தற்போதைய தேவையை உணர்ந்தும் எதிர்காலத்தின் போக்கை கணித்தும் துரிதமாற்றங்களை உடன் அமுல்செய்வதனூடாக மாணவர்களின் எதிர்காலத்தை சுபீட்சமானதாக மாற்றமுடியும்.
ஆக்கம்: அருண் ஆரோக்கியநாதர்