தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், மாலை 6 மணியளவில் நிறைவடைந்துள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக இன்று நடைபெற்றது. 4,023 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 5.73 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இவர்களில் 14.59 லட்சம் பேர் முதல்முறை வாக்காளர்கள்.
தமிழகம் முழுவதும் 249 மாதிரி வாக்குச்சாவடிகள், 325 அனைத்து மகளிர் வாக்குச்சாவடிகள், 71 மாற்றுத் திறனாளிகள் பணியாற்றும் வாக்குச்சாவடிகள், 79 இளம் பணியாளர்கள் பணியாற்றும் வாக்குச்சாவடிகள் என மொத்தம் 33,211 இடங்களில் 75,064 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.
அனைத்து வாக்குச்சாவடிகளிலும் குடிநீர், கழிவறை, தடையற்ற மின்சாரம், அவசர மருத்துவம், கைப்பிடியுடன் கூடிய சாய்வுதளம், மாற்றுத் திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி, நிழற்பந்தல், வாக்காளர்களுக்கு உதவ தன்னார்வலர்கள் ஏற்பாடு என அனைத்து வசதிகளும் செய்யப்பட்டிருந்தன.
இத்தேர்தலில் 1,06,408 வாக்குப்பதிவு இயந்திரங்கள், தலா 75,064 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் விவிபாட் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. கூடுதலாக 20 சதவீத இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.
பாதுகாப்பு பணியில் துப்பாக்கி ஏந்திய 300 கம்பெனி துணை இராணுவப் படையினர் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் 24 மணி நேரமும் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் 83,875 காவல் துறை பணியாளர்கள், 40,427 காவல் துறை அல்லாத முன்னாள் இராணுவத்தினர் உள்ளிட்ட பணியாளர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த தேர்தல் தமிழக வரலாற்றில் அதிகமாக வாக்குச் சதவீதம் பதிவான தேர்தலாக இந்த தேர்தல் பதிவாகியுள்ளது.
இம்முறை 85 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2011ஆம் ஆண்டு 78 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தமையே அதிக வாக்கு சதவீதமாக இருந்தது.
பிற்பகல் 5 மணி நிலவரப்படி 82 சதவீதமான வாக்குகள் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தேர்தல் முடிவுகள் எதிர்வரும் மே 4ஆம் திகதி வெளியிடப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

