“வடக்கு, கிழக்கில் நிலவும் காணிப்பிரச்சினைகளுக்கு சுமூக தீர்வை காண வேண்டும் என்பதில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உறுதியாக உள்ளது. அதன் பிரகாரம் மயிலிட்டி பிரச்சினைக்கு சட்டத்துக்கு உட்பட்டு தீர்வு வழங்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தெரிவித்துள்ளார்.
உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள தமது காணிகளை விடுவிக்குமாறுகோரி , காணி உரிமையாளர்கள் மயிலிட்டி இராணுவ முகாமுக்கு முன்னாள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1990 ஆம் ஆண்டு குறித்த பிரதேசத்தில் இருந்து மக்கள் வெளியேறிய நிலையில் இராணுவம் காணிகளை கையகப்படுத்தியிருந்தது.
இந்த நிலையில் போராட்டம் நடைபெற்ற இடத்துக்கு ஆளுங்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் சென்று, மக்களுடன் கலந்துரையாடினார்.
மக்களின் கோரிக்கைகள் மற்றும் அவர்கள் கூறிய விடயங்களை நாடாளுமன்ற உறுப்பினர் கேட்டறிந்து இது தொடர்பில் அரசாங்க அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதாக உறுதியளித்தார்.
“தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், மக்களுக்குரிய காணிகள் கட்டங்கட்டமாக விடுவிக்கப்பட்டு வருவதாகவும். இந்த விடயத்தில் நாம் வெளிப்படை தன்மையுடன் செயல்பட்டு வருகின்றோம்‘‘ என்றும் க.இளங்குமரன் மக்களுக்கு வாக்குறுதி அளித்தார்.
மக்களுக்கு ஒப்படைக்கப்படும் காணிகளை உரிய வகையில், உரிய ஆவணங்களுடன் கையளிக்க வேண்டும். அப்போதுதான் இப்பிரச்சினை நிரந்தரமாக தீரும். உரிய ஆவணங்கள் இருந்தால் நிச்சயம் காணிகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் ஆட்சி மக்களுக்கானது, எனவே, மக்களின் சொத்துகளை பலவந்தமாக வைத்துக்கொள்வதற்குரிய எண்ணம் அரசாங்கத்துக்கு இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேசிய பாதுகாப்புக்கு அத்தியாவசியம் அற்றது எனக் கருதப்படும் இடங்களை விடுவிக்குமாறு அரசாங்கம் உரிய தரப்புகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. எனவே, நிச்சயம் காணிப்பிரச்சினைக்கு தீர்வு கிட்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

