ஈரான் உடனான அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தால் ஹார்முஸ் நீரிணையில் தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்கா, ஈரான் இடையே கடந்த 8ஆம் திகதி இருதரப்பு போர் நிறுத்தம் அமுல் செய்யப்பட்டது.
இரு வார போர் நிறுத்தம் கடந்த 23ஆம் திகதியுடன் நிறைவடைந்ததுடன், குறித்த தினமே காலவரையின்றி போர் நிறுத்தத்தை நீட்டிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் அறிவித்திருந்தார்.
போர் காரணமாக ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியுள்ளது. இதற்கு பதிலடியாக இந்த நீரிணையின் இருபுறமும் அமெரிக்க போர்க்கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த சூழலில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில், “காலம் கடந்து சென்று கொண்டிருக்கிறது. ஈரான் தரப்பு விரைந்து முடிவு எடுக்க வேண்டும்’’ என எச்சரித்துள்ளார்.
ஈரான் உச்ச தலைவர் முஜ்தப்பா காமேனி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈரான் தேசப்பற்றாளர்களின் ஒற்றுமையால் எதிரிகளின் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டு இருக்கிறது. ஈரான் மக்களின் மனதில் அச்சத்தை விதைக்க எதிரி நாடு முயற்சி செய்கிறது. இதற்கு இடம் கொடுக்கக் கூடாது’’ என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே அமெரிக்கா, ஈரான் இடையே அமைதி ஒப்பந்தத்தை இறுதி செய்ய பாகிஸ்தான், துருக்கி, எகிப்து உள்ளிட்ட நாடுகள் தீவிர முயற்சி செய்து வருகின்றன. இஸ்லாமபாத்தில் இன்று மீண்டும் அமைதிப் பேச்சுகளன் ஆரம்பமாகியுள்ளதுடன், அமெரிக்க ஈரான் பிரதிநிதிகளும் அங்கு விரைந்துள்ளனர்.
என்றாலும், ஈரானின் சரக்கு கப்பல்களை அடுத்தடுத்து கைப்பற்றி வருவதாக அமெரிக்கா கூறியுள்ளதுடன், இதனால் இராணுவ மற்றும் பொருளாதார ரீதியிலான நெருக்கடியை சமாளிக்க முடியாமல் அமைதி ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திடும் என எதிர்பார்ப்பதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமைதி பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தால் ஹார்முஸ் நீரிணையில் மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்படும் என்றும் தற்போது 19 போர்க்கப்பல்கள் மத்திய கிழக்கில் முகாமிட்டுள்ளதாகவும் அமெரிக்கா கூறியுள்ளது.

