பிரெக்சிட்டிற்குப் பின்னர் பல ஆண்டுகளாக நீடித்து வந்த உணவு ஏற்றுமதி தொடர்பான வர்த்தக சிக்கல்களை குறைக்கும் நோக்கில், பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கிடையில் புதிய உணவு மற்றும் விவசாய வர்த்தக ஒப்பந்தத்தை கைச்சாத்திடுவதற்கான உடன்பாடுகள் எட்டப்பட்டுள்ளன.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் உணவு வர்த்தக பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என அரசாங்கம் எதிர்பார்க்கிறது.
பிரெக்சிட்டிற்குப் பின்னர், பிரித்தானியாவில் இருந்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கும், வடஅயர்லாந்துக்கும் அனுப்பப்பட்ட இறைச்சி, பால், மீன் மற்றும் குளிரூட்டப்பட்ட உணவுப் பொருட்களுக்கு கடுமையான சுங்க சோதனைகள் மற்றும் சுகாதார சான்றிதழ் நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தன.
இதனால், ஏற்றுமதி தாமதங்கள், கூடுதல் செலவுகள் மற்றும் சிறிய வர்த்தக நிறுவனங்களுக்கு பொருளாதார சிரமங்களும் ஏற்பட்டன.
புதிய ஒப்பந்தத்தின் கீழ், உணவு பொருட்களுக்கான எல்லைச் சோதனைகள் குறைக்கப்படுவதுடன், சுகாதார மற்றும் கால்நடை பரிசோதனை நடைமுறைகளும் எளிமைப்படுத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஒப்பந்தம் பொருளாதார வளர்ச்சிக்கும் உணவு விநியோக நிலைத்தன்மைக்கும் முக்கியமானதாக இருக்கும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
என்றாலும், இந்த ஒப்பந்தம் மூலம் பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றிய விதிமுறைகளுக்கு நெருக்கமாகும் அபாயம் இருப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சனங்களையும் முன்வைத்துள்ளன.
வணிக அமைப்புகள் மற்றும் உணவு ஏற்றுமதி துறையினர் இதனை வரவேற்றுள்ள நிலையில், இந்த ஒப்பந்தம் எதிர்காலத்தில் பிரித்தானியா – ஐரோப்பிய ஒன்றிய உறவுகளை மேலும் சீராக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.

