அடுத்த மாதம் தொடங்க உள்ள ஃபிபா உலகக் கிண்ணத் தொடருக்கான அர்ஜெண்டினா கால்பந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியை லியோனல் மெஸ்ஸி தலைவராக வழிநடத்துடுகிறார்.
எதிர்வரும் ஜூன் மாதம் 11 ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 19ஆம் திகதி வரை ஃபிபா உலகக் கிண்ணத் தொடர் நடைபெற உள்ளது. அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ நாடுகளில் இந்த தொடர் நடைபெறுகிறது. மொத்தம் 48 அணிகள் தொடரில் பங்கேற்று விளையாடுகின்றன. 39 நாட்கள் நடைபெறும் இந்த தொடரில் 104 போட்டிகள் இடம்பெற உள்ளன.
இந்த சூழலில் நடப்பு உலக சாம்பியனான அர்ஜெண்டினா அணியில் மொத்தம் 26 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். அணித் தலைவராக லியோனல் மெஸ்ஸி செயல்படுவதுடன், கோல்கீப்பர்களாக எமிலியானோ மார்டினெஸ், ஜெரோனிமோ ருல்லி, ஜுவான் மூசோ ஆகியோர் செயல்பட உள்ளனர்.
தடுப்பு வீரர்களாக லியாண்ட்ரோ பலேர்டி, நிக்கோலஸ் டாக்லியாஃபிகோ, கோன்சாலோ மான்டியல், லிசாண்ட்ரோ மார்டினெஸ், கிறிஸ்டியான் ரொமேரோ, நிக்கோலஸ் ஒடமெண்டி, ஃபகுண்டோ மெடினா, நஹுவேல் மோலினா ஆகியோர் செயல்பட உள்ளனர்.
ஜூலியன் அல்வாரெஸ், நிக்கோலஸ் கோன்சாலஸ், தியாகோ அல்மடா, கியுலியானோ சிமியோன், நிகோ பாஸ், லாடரோ மார்டினெஸ் ஆகியோர் முன்கள வீரர்களாக விளையாட உள்ளனர்.
மற்றும் லியாண்ட்ரோ பரேடெஸ், ரோட்ரிகோ டி பால், வாலண்டின் பார்கோ, ஜியோவானி லோ செல்சோ, எக்ஸிகுயல் பலாசியோஸ், அலெக்சிஸ் மேக் அலிஸ்டர், என்ஸோ பெர்னாண்டஸ் ஆகியோரும் அணியில் உள்ளடங்கியுள்ளனர்.
குரூப்-ஜே பிரிவில் இடம்பெற்றுள்ள அர்ஜெண்டினா அணி, அல்ஜீரியா, ஆஸ்திரியா, ஜோர்டான் உள்ளிட்ட அணிகளுடன் குரூப் சுற்றில் விளையாடுகிறது.
கடந்த 2022 இல் கத்தாரில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் அர்ஜெண்டினா அணி பிரான்ஸை வீழ்த்தி வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.

