
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் பணிப்பாளர் சபைக் கூட்டத்தின் போது இலங்கையின் புதிய கிரிக்கெட் நிர்வாகத்தின் நிலைமைகள் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு விளையாட்டுத்துறை அமைச்சரினால் நிலைமாறுதல் குழு அண்மையில் நியமிக்கப்பட்டமை தொடர்பாகவே ஐசிசி பணிப்பாளர் சபையில் இவ்வாறு ஆராயட்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஆராய இரண்டு ஐசிசி பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்து சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடியுள்ளதாகவும் ஐசிசி தெரிவித்துள்ளது.
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் பணிப்பாளர் சபை கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தியாவின் அஹமதாபாத் நகரில் நடைபெற்ற போதே இந்த விடயங்கள் ஆராயப்பட்டுள்ளன.
இந்தக் கூட்டத்தில் ஐசிசியின் எதிர்காலப் போட்டிகள் மற்றும் நிர்வாக ரீதியான சில முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட்டுள்ளன.
இதன்போது, போதிய வெளிச்சமில்லாத சந்தர்ப்பத்தில் டெஸ்ட் போட்டிகளில் இளஞ்சிவப்பு நிறப் பந்தைப் பயன்படுத்துவது குறித்து ஆராயப்பட்டுள்ளது.
விதிமுறைக்கு மாறான பந்துவீச்சு பாணி தொடர்பாக முறையிடுவதற்கு போட்டி மத்தியஸ்தர்கள் ஹோக்-ஐ (Hawk-eye) தரவுகளை அணுகுவதற்கு அனுமதி வழங்கப்பட்டடுள்ளது.
அத்துடன், ரி20 போட்டிகளில் 15 நிமிட இடைவேளையைக் கட்டாயமாக்குதல் மற்றும் ஆட்டம் மீண்டும் தொடங்கும் போது துடுப்பாட்ட வீரர்கள் தயாராக இருக்க வேண்டும் என்ற நிபந்தனை கடுமையாக்கப்பட்டுள்ளது.
ஐசிசி மகளிர் சம்பியன்ஸ் கிண்ணம் 2027க்கான கால அட்டவணையை ஜூன்-ஜூலை மாதங்களில் இருந்து, 2027 பெப்ரவரி 14 முதல் 28ஆம் திகதிகளுக்கு மாற்றுவதற்கு ஐசிசி பணிப்பாளர் சபை ஒப்புதல் அளித்துள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் சபையினால் நடத்தப்படவுள்ள 2028ஆம் ஆண்டு நடத்தப்பட உள்ள ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ணத்துக்கான இந்தியாவின் போட்டிகளை நடுநிலையான ஒரு நாட்டில் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, உறுப்புரிமை கடப்பாடுகளை கடுமையாக மீறியதன் காரணமாக, கிரிக்கெட் கனடாவை ஐசிசி உறுப்பினர் பதவியிலிருந்து உடனடியாக அமலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தவும் ஐசிசி பணிப்பாளர் சபை தீர்மானித்துள்ளது.

