கனடாவில் நிரந்தர வதிவிட உரிமையை (Permanent Residence – PR) எதிர்பார்த்திருக்கும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள், சர்வதேச மாணவர்கள் மற்றும் திறமையான பணியாளர்களுக்கு புதிய வாய்ப்பு உருவாகியுள்ளது.
கனடாவின் குடிவரவு அமைச்சர் லீனா மெட்லெஜ் டியாப் (Lena Metlege Diab), 2026 நவம்பர் 9ஆம் திகதி புதிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.
இதன்படி, கிராமப்புற சமூகங்களுக்கான குடிவரவுத் திட்டமான Rural Community Immigration Pilot (RCIP), 2027 ஜனவரி 1ஆம் திகதி முதல் நிரந்தர குடிவரவுத் திட்டமாக மாற்றப்படவுள்ளது.
கனடாவின் சிறிய நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் நிலவும் தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதும், அப்பகுதிகளில் குடியேற விரும்புவோருக்கு நிரந்தர வதிவிட உரிமை பெறுவதற்கான வாய்ப்பை வழங்குவதுமே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
யார் விண்ணப்பிக்கலாம்?
கனடாவில் ஏற்கெனவே பணிபுரியும் தற்காலிக வெளிநாட்டுத் தொழிலாளர்கள், தகுதியுள்ள சர்வதேச பட்டதாரிகள் மற்றும் கனடாவுக்கு வெளியே வசிக்கும் திறமையான பணியாளர்கள் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க முடியும்.
ஆனால், விண்ணப்பிப்பவர்கள் சில முக்கிய நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
- திட்டத்தில் பங்கேற்கும் சமூகத்தில், அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட முதலாளியிடமிருந்து வேலை வாய்ப்பைப் பெற்றிருக்க வேண்டும்.
- அந்தச் சமூகத்தின் பரிந்துரையைப் பெற வேண்டும்.
- பொதுவாக, கடந்த மூன்று ஆண்டுகளில் குறைந்தபட்சம் ஓராண்டு தகுதியான பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
- தேவையான கல்வித் தகுதிகளையும் ஆங்கிலம் அல்லது பிரெஞ்சு மொழித் திறனையும் கொண்டிருக்க வேண்டும்.
- விலக்கு அளிக்கப்படாதவர்கள், குடியேறுவதற்குத் தேவையான நிதி இருப்பதை நிரூபிக்க வேண்டும்.
குறிப்பிட்ட சமூகங்களில் கல்வி கற்ற சில சர்வதேச பட்டதாரிகளுக்கு பணி அனுபவ நிபந்தனையிலிருந்து விலக்கு வழங்கப்படலாம்.
எந்தெந்த பகுதிகளில் இந்த வாய்ப்பு உள்ளது?
இத்திட்டம் கனடாவின் ஆறு மாகாணங்களில் உள்ள 14 சமூகங்களில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
ஒன்ராறியோவில் North Bay, Sudbury, Timmins, Sault Ste. Marie மற்றும் Thunder Bay ஆகிய ஐந்து பகுதிகள் இதில் அடங்குகின்றன.
ரொறன்ரோ, பிராம்டன், மிசிசாகா, ஸ்காபரோ போன்ற பகுதிகளில் வசிப்பவர்களும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்த முயற்சிக்கலாம்.
ஆனால், திட்டத்தில் இடம்பெற்றுள்ள பகுதிகளில் தகுதியான வேலைவாய்ப்பைப் பெற்று, அங்கேயே குடியேறும் உண்மையான நோக்கத்தைக் கொண்டிருக்க வேண்டும்.
எவ்வாறு விண்ணப்பிப்பது?
முதலில், திட்டத்தில் பங்கேற்கும் சமூகங்களில் எந்தெந்த தொழில்களுக்குப் பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள் என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.
அதன்பின்னர் அங்கீகரிக்கப்பட்ட முதலாளிகளிடம் வேலைவாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
தகுதியான வேலைவாய்ப்பைப் பெற்றதும், சமூகத்தின் பரிந்துரையைப் பெறுவதற்கான நடவடிக்கையை முதலாளி முன்னெடுப்பார்.
பரிந்துரை கிடைத்த பின்னர், கனடாவின் குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமைத் திணைக்களமான IRCC ஊடாக நிரந்தர வதிவிட உரிமைக்கு விண்ணப்பிக்க முடியும்.
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் PR விண்ணப்பம் பரிசீலிக்கப்படும் காலத்தில், குறிப்பிட்ட முதலாளியிடம் பணிபுரிவதற்கான இரண்டு ஆண்டு வேலை அனுமதியையும் பெறக்கூடும்.
புதிய குடிவரவு வாய்ப்பு!
கனடா அரசாங்கம் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இத்திட்டத்தின் கீழ் நிரந்தர வதிவிட உரிமை வழங்குவதற்கான இலக்குகளை அறிவித்துள்ளது.
இது கனடாவின் பெரிய நகரங்களுக்கு வெளியே வாழவும் பணிபுரியவும் தயாராக இருப்பவர்களுக்கு ஒரு மாற்று வாய்ப்பாக அமையலாம்.
இருப்பினும், வேலைவாய்ப்பு அல்லது சமூகத்தின் பரிந்துரை கிடைப்பதால் மட்டும் நிரந்தர வதிவிட உரிமை உறுதியாகிவிடாது. அனைத்து குடிவரவு நிபந்தனைகளையும் பூர்த்தி செய்வது அவசியமாகும்.
மேலதிக விவரங்களுக்கும் விண்ணப்பிக்கும் நடைமுறைகளுக்கும் கனடா அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தைப் பார்வையிடலாம்:
செய்தி, ஆய்வு மற்றும் தகவல் விளக்கப்படங்கள்: அருண் ஆரோக்கியநாதன் (Arun Arokianathan)
GlobeTamil.com | 9 நவம்பர் 2026
குறிப்பு: குடிவரவு விதிமுறைகள் மற்றும் தகுதி நிபந்தனைகள் காலத்துக்குக் காலம் மாற்றமடையலாம். விண்ணப்பிப்பதற்கு முன்னர் IRCC இணையத்தளத்தில் https://www.canada.ca/en/immigration-refugees-citizenship/news/2026/11/overview-of-the-rural-community-immigration-program.html தகவல்களை உறுதிப்படுத்திக்கொள்ளவும்.




