கனடாவின் நிரந்தரக் குடியுரிமைக்கான முக்கிய குடியேற்றத் திட்டமான Express Entry முறையில் புதிய மாற்றங்கள் நவம்பர் 3ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளன.
கனடாவின் தொழிலாளர் சந்தைத் தேவைகளுக்கு ஏற்ப திறமையான பணியாளர்களைத் தெரிவுசெய்து, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கக்கூடியவர்களுக்கு முன்னுரிமை வழங்கும் நோக்கில் இந்த மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இதன்படி, கனடாவில் தகுதியான பணி அனுபவம் கொண்டவர்கள் மற்றும் அதிக ஊதியம் வழங்கப்படும் தகுதியான தொழில்களில் வேலைவாய்ப்பைப் பெற்றுள்ள வெளிநாட்டவர்கள் கூடுதல் புள்ளிகளைப் பெறுவதற்கான வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
புதிய மதிப்பீட்டு முறையின்படி, கனடாவில் குறைந்தபட்சம் ஒரு வருட தகுதியான பணி அனுபவம் பெற்றவர்கள், தங்களது தொழிலின் ஊதியத் தரத்தைப் பொறுத்து 20 முதல் 70 வரையான கூடுதல் புள்ளிகளைப் பெற முடியும்.
அதேவேளை, கனடாவில் தகுதியான அதிக ஊதியத் தொழிலில் முறையான வேலைவாய்ப்புச் சலுகையைப் பெற்றுள்ள விண்ணப்பதாரர்களுக்கு 50 முதல் 100 வரையான கூடுதல் புள்ளிகள் வழங்கப்படலாம்.
இந்தப் புள்ளிகள் விண்ணப்பதாரரின் தொழில் வகை மற்றும் கனடாவின் தேசிய சராசரி ஊதியத்துடன் ஒப்பிடப்படும் குறித்த தொழிலின் சராசரி ஊதியத்தை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படும்.
இதற்கு முன்னர், சில வேலைவாய்ப்புகளுக்கு Express Entry திட்டத்தின் கீழ் புள்ளிகளைப் பெறுவதற்கும் தகுதியை நிரூபிப்பதற்கும் Labour Market Impact Assessment (LMIA) சான்றிதழ் அவசியமாக இருந்தது.
எனினும், நவம்பர் 3ஆம் திகதி முதல் தகுதியான வேலைவாய்ப்புச் சலுகைகளுக்கு LMIA சான்றிதழ் கட்டாயமில்லை என்ற புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதனால், தகுதியான வேலைவாய்ப்பைப் பெற்றுள்ள வெளிநாட்டவர்கள் குடியேற்ற விண்ணப்ப நடைமுறைகளை முன்னெடுப்பதில் சில நிர்வாகச் சிக்கல்கள் குறையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், LMIA தேவையில்லை என்பதற்காக எந்தவொரு வேலைவாய்ப்புச் சலுகையும் தானாகவே ஏற்றுக்கொள்ளப்படாது. வேலைவாய்ப்பு உண்மையானதா, நிறுவனத்தின் செயல்பாடுகள் முறையானவையா, விண்ணப்பதாரருக்குத் தேவையான தகுதிகள் உள்ளனவா என்பன குடிவரவு அதிகாரிகளால் பரிசோதிக்கப்படும்.
Express Entry விண்ணப்பத் தொகுப்பில் ஏற்கனவே இடம்பெற்றுள்ளவர்களின் Comprehensive Ranking System (CRS) புள்ளிகள் புதிய விதிமுறைகளுக்கு அமைய மீண்டும் கணக்கிடப்படும்.
இதற்காக விண்ணப்பதாரர்கள் தங்களது தகுதியான கனேடிய பணி அனுபவம் மற்றும் வேலைவாய்ப்புத் தொடர்பான தகவல்களைச் சரிபார்த்து, தேவையான விபரங்களைப் புதுப்பிக்க வேண்டியிருக்கலாம்.
மேலும், புதிய புள்ளி முறைமை நடைமுறைக்கு வரும் காலப்பகுதியில் புள்ளிகளை மீளக் கணக்கிடுவதற்காக குடியேற்ற அழைப்புகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு, அந்தச் செயல்முறை நிறைவடைந்த பின்னர் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என கனேடிய குடிவரவு அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
குறிப்பாக, பொறியியல், மருத்துவம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் திறன்மிகு தொழில்துறை உள்ளிட்ட துறைகளில் பணியாற்றும் தகுதியான நிபுணர்களுக்கு இந்த மாற்றங்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையக்கூடும்.
கனடாவின் தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதுடன், பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான திறமையான பணியாளர்களை வெளிநாடுகளிலிருந்து ஈர்ப்பதே இந்த மாற்றங்களின் முக்கிய நோக்கமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், கூடுதல் புள்ளிகளைப் பெறுவது நிரந்தரக் குடியுரிமைக்கான அழைப்புக் கடிதம் கிடைப்பதை உறுதிப்படுத்தாது. ஒவ்வொரு அழைப்புச் சுற்றிலும் நிர்ணயிக்கப்படும் புள்ளி எல்லை மற்றும் ஏனைய தகைமைகளுக்கு உட்பட்டே விண்ணப்பதாரர்கள் தெரிவுசெய்யப்படுவார்கள்.
கனடாவின் குடியேற்றக் கொள்கையில் பொருளாதாரத் தேவைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த மாற்றம், அந்நாட்டில் நிரந்தரக் குடியுரிமை பெற விரும்பும் திறமையான வெளிநாட்டுப் பணியாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
மூலம்: கனடாவின் குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமைத் திணைக்களம் (IRCC).



