மாகாணசபை தேர்தலுக்கான வாய்ப்பு ஏன் குறைவு? நடந்தால் களமிறங்கத் தயார்! – விக்கி அதிரடி

0
270
Article Top Ad
“கடந்த தடவை போன்று இம்முறையும் கட்சித் தலைவர்கள் சேர்ந்து என்னை முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்கச் சொன்னால் அதனை நான் சாதகமாகப் பரிசீலிப்பேன். எனினும், என்னுடைய கணிப்பின்படி இப்போதைக்கு மாகாண சபைத் தேர்தல் நடைபெறாது.”
– இவ்வாறு வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
எமது இணையத்தளத்துக்கு காணொளி வழியாக அவர் வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“மாகாண சபைத் தேர்தல் என்பது வெறும் பேச்சளவில் மட்டும்தான் இன்னமும் சில காலங்களுக்கு இருக்கும் என்று நான் நினைக்கின்றேன். இதற்கு மூன்று முக்கிய காரணங்கள் இருக்கின்றன.
முதலாவது, மாகாண சபைத் தேர்தலை வெற்றிகொள்ளும் நிலையில் அரசு இல்லை என்பதை உளவுத்தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன என்று செய்திகளில் படித்தேன். இந்நிலையில், நாடு இன்று எதிர்கொண்டுள்ள நெருக்கடியான நிலையில் எதிர்க்கட்சிகளைப் பலப்படுத்த அரசு விரும்பமாட்டாது.
இரண்டாவது, புதிய அரசமைப்பைக் கொண்டு வருவதில் அரசு முனைப்பாகச் செயற்படுகின்றது. மாகாண சபைகளை இல்லாமல் செய்வது அரசின் இந்தப் புதிய அரசமைப்பு நோக்கங்களில் ஒன்று என்பதை நான் நம்புகின்றேன். எனவே, தேர்தலிலும் பார்க்க அரசமைப்பைக் கொண்டு வருவதே அரசின் குறிக்கோளாக இருக்கும் என்று நாம் நம்புகின்றேன்.
மூன்றாவது, நாடு தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியில் எந்தவொரு தேர்தலையும் நடத்துவதற்கு அரசால் பெருந்தொகைப் பணத்தைச் செலவிட முடியாது. வடக்கு, கிழக்கில் மட்டும் தேர்தலை நடத்தினால் மற்றைய மாகாணங்களைச் சேர்ந்த மக்களின் எதிர்ப்பை அரசு எதிர்கொள்ள வேண்டிவரும்.
என்னைப் பொறுத்தவரையில் அரசு கூறுவதுபோல் அடுத்த வருடம் ஆரம்பத்தில் மாகாண சபைத் தேர்தல் நடைபெறும் என்பது வெறும் வெற்றுப்பேச்சாகும்.
ஆனால், இந்தியா மற்றும் சர்வதேச சமூகத்தை ஏமாற்றுவதற்கு மாகாண சபைத் தேர்தலை நடத்தப்போவதாக அரசு இப்படி அடிக்கடி கூறிக்கொண்டுதான் வரும்.
ஒருவேளை சர்வதேச சமூகத்தின் அழுத்தம் அதிகமாக இருக்கும் பட்சத்தில் மாகாண சபைத் தேர்தலை அரசு நடத்தலாம். ஆனால், அதற்கான வாய்ப்பு மிகமிகக் குறைவு என்றுதான் நான் நம்புகின்றேன்.
நான் வடக்கு மாகாண முதலமைச்சராக இருந்தபோது எனக்கு எதிராகப் பல நடவடிக்கைகளைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எடுத்தனர். எனது வேலைத்திட்டங்களில் நான் வெற்றியடையக்கூடாது என்பதில் பலர் முட்டுக்கட்டையாக இருந்தார்கள். உதாரணமாக வடக்கு மாகாண முதலமைச்சர் நிதியத்தை நாங்கள் எப்படியாவது எடுத்துக்கொள்ளக்கூடாது என்ற நோக்கத்துடன் கூட்டமைப்பிலிருந்து பலர் வேலை செய்தார்கள். ஆகவே, பிள்ளையான் (கிழக்கு மாகாண முன்னாள் முதலைச்சர்) கூறுவது போல் என்னை மீண்டும் முதலமைச்சராக வரவிடாமல் தவிர்ப்பதற்கு மாகாண சபைத் தேர்தலை நடத்த விடாமல் செய்வதற்குக் கூட்டமைப்பினர் கடந்த காலங்களில் நடவடிக்கை எடுத்திருக்கக்கூடும்.
கடந்த தடவை போன்று இம்முறையும் கடசித் தலைவர்கள் சேர்ந்து என்னை முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்கச் சொன்னால் அதனை நான் சாதகமாகப் பரிசீலிப்பேன். எனினும், என்னுடைய கணிப்பின்படி இப்போதைக்கு மாகாண சபைத் தேர்தல் நடைபெறாது” – என்றார்.