மக்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்! – சஜித் அணி தெரிவிப்பு

0
183
Article Top Ad

 

ஏழை மக்களின் வயிற்றில் சம்மட்டியால் அடித்துள்ள இந்த அரசிடமிருந்து மக்களைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புகாமி தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நடைபெற்ற வரவு – செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றும்போது மேற்கண்டவாறு கூறிய அவர், மேலும் தெரிவிக்கையில்,

“நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2022ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்தில் ஏழைகளே இலக்கு வைக்கப்பட்டு தாக்கப்பட்டுள்ளார்கள். ஒருவர் விபத்து நடந்தால் விபத்தில் சிக்கியவர்கள் அரசுக்கு நட்டஈடு செலுத்த வேண்டுமாம்.

ஒரு விபத்து நடந்தால்  அதில் சிக்கியவர்கள் காப்புறுதி நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு நட்டஈடுகளைப் பெற்று தமது பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதே வழமை.

ஒரு ஏழை விபத்தை ஏற்படுத்தினால் விபத்தால் நட்டப்பட்டு அரசுக்கும் தண்டம் செலுத்துவதென்றால் அவனின் நிலை என்ன?

மரக்கறிகளின் விலைகள் கூட கிலோ 700 ரூபாவைத் தாண்டி விட்டன. ஏழை மக்கள் மரக்கறிகளைக்கூட வாங்கி சாப்பிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் உரமின்றி விவசாயத்தைக் கைவிடும் நிலைக்குச்  சென்றுள்ளனர். மீண்டும்  ஒரு உணவுப்பஞ்சத்தை நோக்கி நாடு நகர்ந்து கொண்டிருக்கின்றது.

அமெரிக்க வரவு – செலவுத்திட்டத்தைச் சமர்ப்பித்து  ஏழை மக்களின் வயிற்றில் சம்மட்டியால் அடித்துள்ள இந்த அரசிடமிருந்து மக்களைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்” – என்றார்.