சுவீடனின் புதிய பிரதமரைத் தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு, இன்று (புதன்கிழமை) நடைபெறவுள்ளது.
நாட்டின் முதல் பெண் பிரதமராக நிதியமைச்சர் மக்டெலனா ஆண்டர்சன் தேர்வு செய்யப்படுவாரா என்பது அன்றைய தினம் தெரியவரும்.
சுவீடன் பிரதமராகவும், சமூக ஜனநாயக கட்சித் தலைவராகவும் இருந்த ஸ்டெஃபான் லோஃப்வென் அண்மையில் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்தார்.
இதையடுத்து, பிரதமர் பதவியை அவர் ராஜிநாமா செய்தார். அவருக்கு பதிலாக கட்சித் தலைவராக நிதியமைச்சர் மக்டலெனா ஆண்டர்சன் தேர்வு செய்யப்பட்டார்.
அடுத்த பிரதமராக அவர் தேர்வு செய்யப்படுவதற்கு நாடாளுமன்றத்தின் ஆதரவைப் பெற வேண்டும். 349 உறுப்பினர்கள் கொண்ட நாடாளுமன்றத்தில் 175 பேரின் ஆதரவு அவருக்கு தேவைப்படுகிறது. ஆளும் சமூக ஜனநாயக கட்சிக்கு இப்போது 100 உறுப்பினர்கள் உள்ளனர்.
அதன் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவையும் சேர்த்து 174 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. பெரும்பான்மைக்கு ஓரிடம் குறையும் நிலையில், எதிர்க்கட்சிகள் பிரிவால் மக்டெலனா ஆண்டர்சனுக்கு போதிய ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.