புதிதாக விதிக்கப்பட்ட பயணக்கட்டுப்பாடுகளால் தாம் ஏமாற்றமடைந்துள்ளதாகவும் இது நியாயமற்றது என்றும் தென்னாபிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோசா கண்டனம் வெளியிட்டுள்ளார்.
ஓமிக்ரேன் வைரஸ் இந்த மாத தொடக்கத்தில் தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்டதை அடுத்து கடந்த புதன்கிழமை உலக சுகாதார அமைப்புக்கு தெரிவிக்கப்பட்டது.
கடந்த இரண்டு வாரங்களில் தென்னாபிரிக்காவின் அதிக மக்கள் தொகை கொண்ட மாகாணமான கௌதங்கில் கண்டறியப்பட்ட பெரும்பாலான தொற்றுகளுக்கு இந்த மாறுபாடு காரணம் என கண்டறியப்பட்டது.
இந்த வைரஸ் மீண்டும் தொற்றக்கூடிய அதிக அபாயத்தைக் கொண்டிருப்பதாக கண்டறியப்பட்டதை அடுத்து தென்னாபிரிக்கா மற்றும் அதனை அண்டிய நாடுகளுக்கு இங்கிலாந்து, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் பயண தடைகளை அறிவித்தன.
இந்நிலையில் குறித்த தடைகள் அவசரமாக நீக்கப்பட வேண்டும் என தென்னாபிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோசா கேட்டுக்கொண்டுள்ளார்.