சு.கவை காட்டிக்கொடுத்தவர்கள் இன்று அக்கட்சிக்குத் தலைமை! – மைத்திரி அணி மீது ‘மொட்டு’ கடும் விமர்சனம்

0
192
Article Top Ad

“ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொள்கைகளைக் காட்டிக்கொடுத்தவர்கள்தான் இன்று அக்கட்சியை வழிநடத்துகின்றனர்.”

– இவ்வாறு கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் எம்.பி.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டுள்ள அவர் இவ்வாறு, சுதந்திரக் கட்சியை விளாசித் தள்ளினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“அரசு என்ற வகையில் நாம் சில திட்டங்களை முன்னெடுக்கையில் பின்னடைவு ஏற்படலாம். அவ்வாறு சர்ச்சைகள் உருவாகும்போது அதில் சந்தர்ப்பவாத அரசியலை ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நடத்தி வருகின்றது. குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க அக்கட்சியினர் முயற்சிக்கின்றனர்.

உரப்பிரச்சினையின்போது அரசுக்கு எதிர்ப்பு ஏற்பட்டது. இந்நிலையில், இந்தத் திட்டத்துக்கு தாமும் எதிர்ப்பு என சுதந்திரக் கட்சி ‘பல்டி’ அடித்தது. சிலவேளை இந்தத் திட்டம் வெற்றியளித்திருந்தால் அதற்கும் தான்தான் காரணம் என மைத்திரிபால சிறிசேன உரிமை கோரி இருப்பார்.

அரசுக்குள் இருந்துகொண்டு, சிறப்புரிமைகளை அனுபவித்தபடியே அவர்கள் விமர்சிக்கின்றனர். அவர்களின் கொள்கை என்னவென்பது புரியவில்லை” – என்றார்.