கோட்டா அரசின் புதிய அரசமைப்பு எதற்கு? – போட்டுடைத்தார் சுரேஷ்

0
281
Article Top Ad

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அரசு கொண்டுவரவுள்ள புதிய அரசமைப்பு தொடர்பில் ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் தலைவரும் முன்னாள் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் சில சந்தேகங்களை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் எமது செய்திச் சேவைக்கு அவர் வழங்கிய விசேட செவ்வியில் மேலும் தெரிவித்ததாவது:-

“புதிய அரசமைப்பு எதற்கு என்ற கேள்வி ஆரம்பத்தில் இருந்து இருக்கின்றது. புதிய அரசமைப்பு என்ன புதிய விடயங்களைக் கொண்டு வரப்போகின்றது என்ற கேள்வியும் எல்லோர் மத்தியிலும் இருக்கின்றது.

ஏற்கனவே இருக்கின்ற அரசமைப்பில் 20ஆவது திருத்தச் சட்டம் என்பது ஜனாதிபதிக்கு மேலதிகமான அதிகாரங்களைக் கொடுத்துள்ளது. ஆகவே, ஜனாதிபதி தனக்கான அதிகாரங்களை ஏற்கனவே கையில் எடுத்துள்ளார்.

தேர்தல் முறைமை தொடர்பில் ஒரு பிரச்சினை இருக்கின்றது. இனிமேல் நடைபெறவுள்ள தேர்தல்களை விகிதாசார முறைமையிலா அல்லது கலப்பு முறைமையிலா நடத்துவது என்ற கேள்வி இருக்கின்றது.

இந்தத் தேர்தல் தொடர்பான மாற்றத்தை தற்போதைய அரசமைப்பின் இன்னொரு திருத்தத்தின் ஊடாகக் கொண்டுவரப்பட்டு அது முடிவுக்குக் கொடுவரப்படலாம்.

ஆனால், இதற்கு மாறாக புதிய அரசமைப்பு பற்றி இப்போது பேசப்படுகின்றது.

இந்தப் புதிய அரசமைப்பின் ஊடாக இது ஒரு பௌத்த நாடாக அல்லது இது ஒரு பௌத்த அரசியல் சாசனமாக மாற்றுவதற்கான முயற்சி மேற்கொள்ளப்படலாம்.

ஏனெனில் புதிய அரசமைப்பின் வரைவு இதுவரை நாடாளுமன்றத்திலோ அல்லது வெளியிலோ  முன்வைக்கப்படவில்லை. அந்த வரைவைப் பார்ப்பதற்கான சாத்தியப்பாடுகள் எதுவும் யாருக்கும் கிடைக்கவில்லை.

சிங்கள – பௌத்த வாக்குகளால்தான் இந்த ஆட்சியை அமைத்துள்ளதாக ஜனாதிபதி தலைமையிலான அரச தரப்பினர் கூறுகின்றனர். சிங்கள மக்கள்தான் தமக்கு முழுமையாக வாக்களித்துள்ளனர் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான சூழ்நிலையில் புதிய அரசியல் சாசனம் என்பது தமிழ் மக்களுடைய அல்லது ஏனைய சிறுபான்மை இனங்களுடைய அபிலாஷைகளை உள்ளடக்கி இருப்பதற்கான வாய்ப்புக்கள் மிக மிகக் குறைவு.

அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டமே தேவை இல்லை என்று கூறக்கூடிய அரசுதான் இப்போது இருக்கின்ற அரசு.

13ஆவது திருத்தச் சட்டம் தேவையில்லை, இலங்கைத் தமிழ் மக்களுக்கு இனப்பிரச்சினை என்ற ஒன்று கிடையாது, சில பொருளாதாரப் பிரச்சினைகள் மாத்திரம்தான் இருக்கின்றன, அவற்றைத் தீர்த்துவிட்டால் போதும் என்று சொல்லக்கூடியவர்தான் இப்போது இருக்கின்ற ஜனாதிபதி.

இலங்கையின் இப்போதைய ஜனாதிபதியையும், அரச தரப்பினரையும் பொறுத்த வரைக்கும் இது சிங்கள – பௌத்த நாடாக இருக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கின்றனர். முழு இலங்கையும் சிங்கள – பௌத்த மேலாதிக்கத்துக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் என்பதிலும் அவர்கள் தெளிவாக இருக்கின்றனர்.

எனவே, வரப்போகின்ற புதிய  அரசமைப்பு இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் உருவாக்கப்பட்ட 13ஆவது திருத்தச் சட்டத்தையும் இல்லாமல் செய்கின்ற அரசியல் சாசனமா அல்லது 13ஆவது திருத்தத்தில் உள்ளவற்றில் சிலவற்றை எடுத்து விடுவதற்கான அரசியல் சாசனமா? போன்ற கேள்விகள் எழுந்துள்ளன.

13ஆவது திருத்தச் சட்டத்திலுள்ள மாகாண சபை அதிகாரங்களை மத்திய அரசு கையகப்படுத்தும் கைங்கரியங்களில் தற்போது ஈடுபட்டு வருகின்றது.

இப்படிப் பல விடயங்களைச் செய்த பின்னர் எலும்பும் தோலுமான எதுவுமற்ற ஒரு மாகாண சபையாக புதிய அரசமைப்பில் வரலாம்.

உள்ளவற்றை நாம் இழந்துபோகக்கூடாது என்ற நிலைப்பாட்டில் நாம் இருக்கின்றோம்” – என்றார்.
…………