வெளிநாடுகளில் இருந்து பணத்தை அனுப்ப “ஹவாலா” உண்டியல் வழிமுறையை அதிகளவான இலங்கையர்கள் நாடுவதாக தகவல்

0
376
Article Top Ad

இலங்கையின் மத்தியவங்கி நாணயமாற்றுவீதத்தை குறைந்த அளவில் வைத்திருக்கும் காரணத்தினால் அதிகளவான இலங்கையர்கள் “ஹவாலா” என அறியப்படும் உண்டியல் பணம் அனுப்பும் முறைக்கு மாறியுள்ளதாக economynext.com இணையத்தளம் செய்திவெளியிட்டுள்ளது.

 

தற்போது என்ன நடக்கிறது?

இலங்கையின் வெளிநாட்டு நாணயக் கையிருப்பு நவம்பர் மாதம் 30ம் திகதியன்று 1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மாத்திரமே இருந்தது. இது அண்மைக்கால வரலாற்றில் இலங்கை கொண்டிருக்கும் மிகக்குறைந்த வெளிநாட்டு நாணயக் கையிருப்பாகும்.

இதனிடையே வெளிநாட்டுக் கடனில் சிக்கித்திணறும் இலங்கை எதிர்வரும் 2022 ஜனவரி 18ம் திகதி அன்று 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடன் தவணையாகத் திருப்பிச் செலுத்தவேண்டும். இதுவரைகாலமும் என்ன நெருக்கடி இருந்தாலும் கடன் தவணைகளை உரிய தினத்தில் திருப்பிக்கொடுக்கும் நாடு என்ற நம்பிக்கை இலங்கை மீது இருந்தது. ஆனால் எதிர்வரும் காலப்பகுதியில் குறிப்பிட்ட தினத்தில் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாது இது வரலாறு காணாத பொருளாதார நெருக்கடிக்குள் நாட்டைத்தள்ளிவிடும் அபாயம் காணப்படுகின்றது.

பாரிய டொலர் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கை தற்போது நடைமுறைப்படுத்தியிருக்கும் நிலைமை காரணமாக வெளிநாடுகளில் இருந்து பணத்தை வங்கிகள் மூலம் அனுப்புபவர்கள் இழப்புக்களை எதிர்கொண்டுவருவதை எக்கனமி நெஸ்ட் இணையத்தளம் சம்பத் என்ற வெளிநாட்டில் வாழும் இலங்கையரின் கதை மூலம் வெளிக்கொணர்ந்துள்ளது.

புகலிடப் பணியாளராக துபாயில் வசிக்கும் இலங்கையரான சம்பத் தனது மாத வருமானத்தை இலங்கைக்கு அனுப்பிவைப்பதற்கு உண்டியல் முறைமையையே நாடப்போவதாகக் கூறியுள்ளார்.

“ஒவ்வொரு திர்ஹாம் பணத்திற்கும் மேலதீகமாக 10 ரூபாவை எனது நண்பர்கள் பெறுகின்றனர். ஆனால் வங்கி முறையைப் பயன்படுத்தும் நான் இதனால் நான் மாதாந்தம் 15,000 ரூபா வரையில் இழக்கின்றேன் என்பதையும் கடந்தவாரத்தில் நான் அறிந்துகொண்டேன்.”என எமிரேட்ஸ் டவருக்கு அருகிலுள்ள உணவகத்தில் பணிபுரியும் சம்பத் குறிப்பிட்டார்.

2010ம் ஆண்டு முதல் ஐக்கிய அரபு இராச்சியத்தில் பணிபுரியும் சம்பத் வங்கிகளுடாகவே இதுவரைகாலமும் இலங்கைக்கு பணம் அனுப்பிவந்தார். இதற்கு ஹவாலா இடைத்தரகர்கள் தொடர்பாக அவர் கொண்டிருந்த கரிசனைகளும் காரணமாகும்.

ஆனால் கடந்த மாதத்தில் இலங்கைக்கு உண்டியல் முறைமை மூலம் பணத்தை அனுப்பும் இடைத்தரகர்களையும் நீண்டகாலமாக அதனைப்பயன்படுத்தும் நண்பர்களையும் பற்றி அறிந்திருக்கின்றார் சம்பத்.

‘ நான் ஒரு திர்ஹாம் நாணயத்திற்கு 55 இலங்கை ரூபாவையே பெற்றேன். ஆனால் எனது ஹவாலா உண்டியல் முறையைப் பயன்படுத்தும் எனது நெருங்கிய நண்பர் 66 ரூபாவைப் பெற்றார்’ என்கின்றார் சம்பத் .

“வங்கியூடாக அனுப்புவதற்கும் உண்டியல் முறையில் அனுப்புவதற்கும் ஏன் இவ்வளவு வித்தியாசம் என்பதை என்னால் விளங்கிக்கொள்ளமுடியவில்லை. அடுத்த மாதம் முதல் நான் ஹவாலா உண்டியல் முறை மூலமாகவே பணத்தை அனுப்பப்போகின்றேன். தற்போது இலங்கையில் காணப்படும் அதிகரித்த பொருட்கள் விலையேற்றத்தை ஹவாலா உண்டியல் முறைமூலம் அனுப்பும் போது கிடைக்கும் மேலதீக 15000 ரூபாவைக் கொண்டு ஈடுகட்ட எண்ணுகின்றேன்”என அவர் மேலும் கூறினார் என எக்கனமி நெக்ஸ்ற் இணையத்தளத்திற்காக ஷிஹார் அனீஸ் எழுதிய செய்திக்கட்டுரையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹவாலா /உண்டியல் முறைமை என்றால் என்ன?

ஹவாலா அன்றேல் உண்டியல் பணம் அனுப்பும் முறை என்பது ஒரு இடத்தில் இருந்து இன்னுமொரு இடத்துக்கு பணத்தை அனுப்ப தெற்காசியர்கள் பயன்படுத்தும் ஒரு முறை ஆகும்.இம்முறை 8ம் நூற்றாண்டு முதல் நடைமுறையில் இருந்துவருவதாக கருதப்படுகின்றது.

குறிப்பாக புகலிட நாடுகளில் இருந்து தாயகப் பகுதிகளுக்கு சட்டத்திற்குப் புறம்பான வழியில் பணம் அனுப்புவதை குறிக்கிறது.

ஹவாலா/ உண்டியல் முறைமை எப்படி நடக்கிறது?

பணம் அனுப்ப விரும்பும் ஒருவர் அவருக்கு அருகாமையில் இருக்கும் பணம் அனுப்பும் நிறுவனம் அல்லது முகவரிடம் செல்வார். பெரும்பாலும் அவர்கள் சமூகத்தில் அறியப்பட்டவர்களாக, நம்பிக்கை வாய்ந்தவர்களாக இருப்பர்.

அவர் தான் அனுப்ப விரும்பும் தொகையையும் அனுப்ப விரும்பும் நபரின் தொடர்புகளையும் வழங்குவார். அன்றைய பண மாற்று விகிதத்துக்கு ஏற்ப எவ்வளவு பணம் கொடுக்கப்படும் என்று பற்றுச்சீட்டு அல்லது உறுதி வழங்கப்படும்.

இந்தச் சேவைக்கு ஒரு கட்டணம் வசூலிக்கபடும். இந்த நிறுவனத்தின் கிளை அல்லது முகவர் அனுப்பப்பட வேண்டியவருக்கு அருகாமையில் இருப்பார். அவர்கள் சென்று பணத்தை உரியவருக்கு வழங்குவர்.

இலங்கைக்கு பணம் அனுப்பும்போது சட்ட ரீதியாக அனுப்புமாறு வேண்டுகோள்

இதேவேளை வெளிநாடுகளில்‌ தொழில்புரிகின்ற சில இலங்கையர்கள்‌ இலங்கைக்கு பணம் அனுப்பும்போது சட்ட ரீதியாக அனுப்புமாறு இலங்கை மத்திய வங்கி வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பில் அறிவித்தலொன்றை விடுத்துள்ள மத்திய வங்கி இதனைத் தெரிவித்துள்ளது.

வெளிநாடுகளில்‌ தொழில்புரிகின்ற சில இலங்கையர்கள்‌இ இலங்கையில்‌ தம்மைச்‌ சார்ந்திருக்கின்றவர்களுக்கு பணம்‌ அனுப்புகின்ற போதுஇ அறிந்தோ அறியாமலோ, சட்டத்திற்குப்‌ புறம்பான வழிகளுடாக பணத்தை அனுப்புகின்றனர்‌ என இலங்கை மத்திய வங்கிக்கு தகவல்‌ கிடைத்துள்ளது.

அவ்வாறு பணம்‌ அனுப்புகின்ற போது, சில தரகர்கள்‌, வெளிநாட்டில்‌ தொழில்புரிகின்ற இலங்கையர்களின்‌ வெளிநாட்டு நாணயத்தைச்‌ சேகரித்து, அதற்குச்‌ சமனான தொகையை இலங்கை ரூபாவில்‌ ௮த்தகைய பணியாளர்களைச்‌ சார்ந்துள்ளோரின்‌ கணக்குகளுக்கு நிதியியல்‌ முறைமையினூடாக பணமாக அல்லது பரிமாற்றல்களாக வரவுவைக்கின்ற நிகழ்வுகள்‌ தொடர்பில்‌ மத்திய வங்கிக்கு தெரியவந்துள்ளது.

பணம்‌ தூயதாக்குதலைத்‌ தடுப்பதற்கான சட்டத்தின்‌ ஏற்பாடுகளை மீறுகின்றமைக்காக சட்டத்தின்‌ நியதிகளுக்கமைய அவர்கள்‌ தண்டனை விதிக்கத்தக்க தவறுகளைப்‌ புரிகின்றனர்‌ என்பது பற்றி பொதுமக்கள்‌ அறியாதிருக்கக்கூடும்‌.

மேலும்‌, கிடைக்கப்பெற்ற தகவல்களின்‌ அடிப்படையில்‌ அத்தகைய கொடுக்கல்வாங்கல்கள்‌ போதைப்பொருள்‌ கடத்தலுடன்‌ அல்லது வேறு சட்டவிரோத நடவடிக்கைகளுடன்‌ தொடர்புடையதாக இருக்கக்கூடுமென சந்தேகம்‌ எழுந்துள்ளது.

ஆகவேஇ அறிந்தோ, அறியாமலோ இத்தகைய சட்டரீதியற்ற நடவடிக்கைகளுக்குள்‌ சிக்கிக்கொள்ள வேண்டாமென்று வெளிநாட்டில்‌ வதிகின்ற அனைத்து இலங்கையர்களுக்கும்‌ அதேபோன்ற அவர்களைச்‌ சார்ந்திருப்போருக்கும்‌ இலங்கை மத்திய வங்கி அறிவிக்கின்றது.

சட்டத்திற்குப்‌ புறம்பான தொழிற்படுத்துநர்களால்‌ பாதிக்கப்படவேண்டாம்‌ என்றும்‌ இலங்கைக்கு பணம்‌ அனுப்புகின்ற போது இலங்கை மத்திய வங்கியால்‌ மேற்பார்வை செய்யப்படுகின்ற வங்கிகள்‌ மற்றும்‌ நிதியியல்‌ நிறுவனங்கள்‌ அல்லது சர்வதேச வங்கிகள்‌ அல்லது நிதியியல்‌ நிறுவனங்களூடாக மாத்திரம்‌ பணம்‌ அனுப்புவதை உறுதிசெய்யுமாறும்‌ இலங்கை மத்திய வங்கி தொடர்புடைய அனைத்துத்‌ தரப்பினரையும்‌ வலியுறுத்துகின்றது.