உலகின் முன்னணி டென்னிஸ் வீரர் நொவாக் ஜோகோவிச்சிற்கு வழங்கிய விஸாவை அவுஸ்திரேலிய அரசாங்கம் அதிரடியாக ரத்துச்செய்துள்ளது.
இம்மாதம் 17ம் திகதி ஆரம்பமாகவுள்ள ஆண்டின் முதலாவது கிராண்ட்ஸ்லாம் போட்டிகளான அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் போட்டியில் பங்கேற்ற ஜோகோவிச் நேற்று மெல்பேர்ண் விமான நிலையத்தினை வந்தடைந்திருந்தார்.
கொவிட் -19 தடுப்பூசி செலுத்தாத ஜோகோவிச்சிற்கு விளையாட அவுஸ்திரேலிய அரசாங்கம் அனுமதி வழங்கியமை தொடர்பாக கடும் விமர்ச்சனங்களும் கண்டனங்களும் மக்கள் மத்தியில் எழுந்ததையடுத்து அவுஸ்திரேலிய அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
பெருவாரியான மக்களின் கண்டனங்களை அடுத்து கருத்துவெளியிட்டிருந்த அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிஸன் சட்டம் என்பது சட்டம் தான் அது அனைவருக்கும் சமனானது எனக் குறிப்பிட்டிருந்தார்
சுமார் எட்டுமணி நேரம் விமானநிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்ட ஜோகோவிச் ‘ தடுப்பூசி செலுத்துவதை தவிர்த்துக் கொள்வதற்கு போதுமான மருத்துவ சான்றுகளை சமர்ப்பிக்காத காரணத்தால் அவருக்கான விஸாவை ரத்துச்செய்வதாக அவுஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்பு படை அறிவித்துள்ளது. தற்போது மெல்பேர்ணில் உள்ள தடுப்பு ஹோட்டலொன்றுக்கு ஜோகோவிச் கொண்டு செல்லப்பட்டுள்ளளார்.
அவுஸ்திரேலிய அரசாங்கம் விஸாவை ரத்துச் செய்தமைக்கு எதிராக ஜோகோவிச் தரப்பு மேன்முறையீடு செய்துள்ளது. இந்த மேன்முறையிடு நிராகரிக்கப்படுமிடத்து அவுஸ்திரேலிய நேரப்படி வியாழன் மாலைக்குள் அவர் நாடு திருப்பி அனுப்பப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரொஜர் பெடரர் ரபேல் நடால் போன்று மொத்தமாக இதுவரை 20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளவர் ஜோகோவிச் .
அவுஸ்திரேலிய ஓபன் போட்டிகளைப் பொறுத்தவரையில் அவரே சிறந்த சாதனையைக் கொண்டுள்ளார். எந்த ஒரு வீரரை விடவும் அதிகப்படியாக 9 அவுஸ்திரேலிய ஓபன் பட்டங்களை வென்று முன்னணியில் திகழ்கின்றார் ஜோகோவிச் .
இப்போது அவர் பங்கெடுக்கமுடியாத நிலையிலும் காயம் காரணமாக சுவிட்ஸர்லாந்து வீரர் ரொஜர் பெடரர் பங்கெடுக்காத நிலையிலும் ஸ்பெயின் வீரர் ரபேல் நடாலுக்கு சிறந்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.