அவுஸ்திரேலியாவிலிருந்து நாடுகடத்தப்படுவதற்கு எதிராக சட்டப்போராட்டத்தை மேற்கொண்டுவரும் பிரியா-நடேஸ் குடும்பம் சார்பில் தாக்கல்செய்யப்பட்ட வழக்கொன்றில் அவர்களுக்கு சார்பாக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பிரியா, அவரது கணவர் நடேஸ் மற்றும் மூத்த மகள் கோபிகா ஆகியோர் தமது bridging விசாவை புதுப்பிக்கமுடியாதவகையில் குடிவரவு அமைச்சர் மேற்கொண்டிருந்த நடவடிக்கையில், procedural fairness- பரிசீலனை சார்ந்த நியாயத்தன்மை பேணப்படவில்லை என Federal Circuit நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பிரியா குடும்பத்தினரின் bridging விசா விண்ணப்ப விவகாரத்தில் குடிவரவு அமைச்சர் Alex Hawke குடிவரவுச் சட்டத்திலுள்ள “lower the bar” என்ற அம்சத்தை முன்மொழிந்திருப்பதாக கடந்த ஆண்டு ஜுன் மாதம் இக்குடும்பத்திற்கு அறிவிக்கப்பட்டதைத்தொடர்ந்து, பிரியா, நடேஸ் மற்றும் கோபிகா ஆகிய மூவருக்கும் 12 மாதங்களுக்கான bridging விசா வழங்கப்பட்டது. ஆனால் இரண்டாவது மகள் தருணிகா இதில் உட்படுத்தப்படவில்லை.
குடிவரவு அமைச்சரால் முன்மொழியப்பட்ட “lower the bar” அடிப்படையில் பிரியா, நடேஸ் மற்றும் கோபிகா ஆகியோர் bridging விசாவிற்கு மீளவும் விண்ணப்பிப்பதற்கான வாய்ப்பு நீக்கப்பட்டது.
தருணிகா ஏற்கனவே தாக்கல்செய்திருந்த விண்ணப்பம் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும், இவ்விசாரணை முடியும் வரை அவர் நாடுகடத்தப்படக்கூடாது எனவும் நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பின் அடிப்படையில், இவ்விவகாரம் குடிவரவு அமைச்சரின் முடிவுக்காக காத்திருப்பதால், தருணிகாவுக்கு bridging விசா வழங்கப்படவில்லை என உள்துறை அமைச்சு தெரிவித்திருந்தது.
இக்குடும்பம் நீண்டதொரு சட்டப்போராட்டத்தை மேற்கொண்டுவரும் பின்னணியில், எதிர்காலத்தில் பிரியா குடும்பத்தின் bridging விசாவை மீளப்பெறுவதற்கான எந்த முடிவும் மீள்பரிசீலனைக்கு உட்படுத்தப்படும் வாய்ப்பினை இந்த வெற்றி பெற்றுத்தந்துள்ளதாக, இக்குடும்பத்தின் சட்டத்தரணி Carina Ford தெரிவித்துள்ளார்.
Federal Circuit நீதிமன்றின் இத்தீர்ப்பிற்கு எதிராக அரசு மேன்முறையீடு செய்யலாம் அல்லது செய்யாமல் விடலாம் என Carina Ford மேலும் தெரிவித்தார்.
அவ்வாறு அரசு மேன்முறையீடு செய்யாதபட்சத்தில், பிரியா குடும்பம் தமது bridging விசா முடிந்தபின்னர் அதற்காக மீள்விண்ணப்பம் செய்யமுடியுமென Carina Ford சுட்டிக்காட்டினார்.
இக்குடும்பத்தின் bridging விசா எதிர்வரும் செப்டம்பர் மாதம் முடிவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.