ஜெனிவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை குறித்த சமர்பிக்கப்பட்ட 46/1 பிரேரணை நேற்றையதினம் நிறைவேற்றப்பட்டது. இருந்தபோதிலும் பிரேரணைக்கு ஆதரவாகவும் எதிராகவும் அளிக்கப்பட்ட வாக்குகளையும் அளிக்கப்படாத வாக்குகளையும் வைத்து பல்வேறு வியாக்கியானங்களை இலங்கையின் ஆளும் தரப்பினர் முன்வைத்துவருவதனை அவதானிக்க முடிகின்றது.
இலங்கை நேரப்படி நேற்றையதினம் மாலை 3.30 மணியளவில் இடம்பெற்ற இலங்கை தொடர்பான பிரேரணையின் மீதான வாக்கெடுப்பின் போது தீர்மானத்திற்கு ஆதரவாக 22 வாக்குகளும் எதிராக 11 வாக்குகளும் அளிக்கப்பட்டன. 14 நாடுகள் வாக்களிப்பில் பங்கேற்றிருக்கவில்லை. இதனையடுத்து 11 மேலதீக வாக்குகளால் பிரேரணை நிறைவேற்றப்பட்டது.
இதுதொடர்பாக நேற்று பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துவெளியிட்டிருந்த இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் டினேஷ் குணவர்த்தன,
“47 அங்கத்துவ நாடுகளைக் கொண்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் 22 நாடுகள் மட்டுமே பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளன. அந்தவகையில் 11 நாடுகள் பிரேரணைக்கு எதிராகவே வாக்களித்துள்ளன.அத்துடன் மேற்படி வாக்களிப்பில் 14 நாடுகள் கலந்து கொள்ளாத நிலையில் 25 நாடுகள் மேற்படி பிரேரணை தொடரபில் எதிரான நிலைப்பாட்டையே வெளிப்படுத்தியுள்ளன. அந்த வகையில் இலங்கைக்கு எதிராக பிரேரணையை முன்வைத்த நாடுகளினால் மனித உரிமைகள் பேரவையில் பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்ள முடியாமல் போயுள்ளது.”
என்று தெரிவித்ததுடன் இது தமக்கு மிகவும் மகிழ்ச்சியான தருணம் எனவும் குறிப்பிட்டிருந்தார் . ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிலுள்ள 47 நாடுகளில் 25 நாடுகளது ஆதரவு பிரேரணைக்கு கிடைக்க வில்லை எனவும் சுட்டிக்காட்டியிருந்தார்.பிரேணைக்கு எதிராக வாக்களித்த நாடுகளுக்கும் வாக்களிக்காத நாடுகளுக்கும் வெளிவிவகார அமைச்சர் நன்றிகளைத் தெரிவித்திருந்தார்.
இலங்கையின் முன்னாள் மத்திய வங்கி ஆளுநரும் தற்போதைய இராஜாங்க அமைச்சருமான அஜித் நிவார்ட் கப்ரால் வாக்கெடுப்பு முடிவுகள் தொடர்பாக தனது டுவிட்டர் தளத்தில் கருத்துவெளியிடுகையில்,
ஐநா மனித உரிமைகள் பேரவையிலுள்ள 47 நாடுகளில் இலங்கை மீதான பிரேரணைக்கு எதிராக வாக்களித்த 11 நாடுகளது சனத்தொகையானது ஒட்டுமொத்த மனித உரிமைப்பேரவையின் சனத்தொகையில் 43 சதவீதத்தைக் கொண்டுள்ளதாகவும் வாக்களிக்காத 14 நாடுகளதும் சனத்தொகை 39 சதவீதத்தைக் கொண்டுள்ளதாகவும் மாறாக பிரேணைக்கு ஆதரவாக வாக்களித்த 22 நாடுகளதும் சனத்தொகை வெறுமனே 18 வீதத்தை மட்டுமே கொண்டுள்ளதாகவும் அதன்படி பிரேரணைக்கு ஆம் சொல்லாத 25 நாடுகளதும் சனத்தொகை 82 சதவீதமாக இருப்பதாகவும் அவர்களுக்கு தமது நன்றியைத் தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
வெளிவிவகார அமைச்சரினதும் இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ராலுதும் வியாக்கியானங்கள் தொடர்பாக ஜெனிவாவிற்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் தயான் ஜயதிலக்கவிடம் சிரச டீவியின் நிகழ்ச்சியில் வினவியபோது அவர் தன்னையறியாமல் ஏளனமாக சிரித்துவிட்டார். இது இலங்கைக்கு கிடைத்த மிகப்பெரிய தோல்வி என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஜெனிவாவில் இலங்கை தொடர்பான பிரேரணைகள் சமர்பிக்கப்பட்டுவரும் 2009ம் ஆண்டு முதல் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு கிடைத்த அதி குறைந்த வாக்குகளாக இம்முறை கிடைக்கப்பெற்ற 11 வாக்குகளே அமைந்துள்ளதாக அவர் உறுதிபடத்தெரிவித்தார். வெளிவிவகார அமைச்சரின் வியாக்கியானத்திற்கு ஜேவிபி ஐக்கிய மக்கள் சக்தி உட்பட அரசியல் கட்சிகளும் சமூக வலைத்தளத்தில் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்களும் சிரிக்கவும் சிந்திக்கவும் தக்க வகையில் பதிவுகளை இட்டுள்ளனர்.
பிரேரணைக்கு ஆதரவாகவோ எதிராகவோ வாக்களிக்காதவர்களையும் ஏதோ தமக்கு சார்பானவர்கள் போன்று காண்பித்து வெற்றியாக உரிமைகோரும் இலங்கை அரசாங்கத்தின் வியாக்கியானங்கள் தொடர்பாக சமூக வலைத்தளத்தில் சுட்டிக்காட்டியுள்ள தரவுகள் சிந்திக்க வைக்கின்றது.
2019ம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை சுட்டிக்காட்டியுள்ளவர்கள் அந்த தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஸ 6.9 மில்லியன் வாக்குகளைப் பெற்ற அதேவேளை சஜித் பிரேமதாஸ 5.5 மில்லியன் வாக்குகளைப் பெற்றிருந்தார். 2.5 மில்லியன் பேர் வாக்களிப்பில் பங்கேற்றிருக்கவில்லை. வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன அளித்துள்ள வியாக்கியானத்தின் படி பார்த்தால் சஜித் பிரேமதாஸவே தேர்தலில் வெற்றிபெற்றுள்ளார் என சமூக வலைத்தளத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.