Article Top Ad
பதினைந்து வருடங்களாக கிரிக்கெட் உலகின் அத்தனை மாயா ஜாலங்களையும் நிகழ்த்திவிட்டு நீள்துயிலான ஷேன் வோர்னின் உருவச்சிலைக்கு அஞ்சலி செலுத்துவதற்காக இன்று மெல்பேர்ன் கிரிக்கெட் மைதானத்திற்கு (MCG) சென்றிருந்தேன்.
மெல்பேர்ன் கிரிக்கெட் மைதானத்தின் வெளிப்பிரகாரத்தில் வைக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலியாவின் அதி உன்னத சாதனையாளர் சிலைகளின் வரிசையில் ஷேன் வோர்னுக்கு வைக்கப்பட்டுள்ள – அவர் பந்து வீசும் பாணியிலான – சிலை, பூங்கொத்துக்களும் VB பியர் டின்களும் பந்துகளும் என்று எத்தனையோ நினைவுப்பொருட்களால் நிறைந்து கிடந்தது. அவை எனக்குள் பல நினைவுகளை துயிலெழுப்பத் தொடங்கியது.
ஷேன் வோர்னின் நினைவுகளை நான் எழுத முற்படுவதென்பது, ஏறக்குறைய ஒரு புத்தகத்தை எழுதுவதற்கான முயற்சியைக் கோருகின்ற பெரும் பணி. ஷேன் வோர்ன், கிரிக்கெட் உலகில் மிளிரத் தொடங்கிய காலம், நான் கிரிக்கெட் ஆட்டங்கள் பார்க்கத் தொடங்கிய காலம். SportStar சஞ்சிகைகளை வெறித்தனமாக சேர்த்துத் திரிந்த காலம்.
துல்லியமான வர்ணனைகளைத் தர மறுத்த இரையும் வானொலிகளின் வழியாக, கிரிக்கெட் ஸ்கோர் கேட்டு குதூகலித்த காலம். ஆட்டத்தின் முடிவு தெரியாமல் அயர்ந்து தூங்கி, அடுத்த நாள் விசாகனிடம் சென்று என்ன நடந்தது என்று காலையில் கேட்டுத் தெரிந்துகொண்ட காலம். கொத்துக் கொத்தாக எத்தனையோ நினைவுகள் மனதில் பரவிக்கிடக்கின்றன.
எங்களைப் பொறுத்தளவில் அன்று ஷேன் வோர்ன் ஒரு கிரிக்கெட் ரௌடி. தனது அணியின் பத்துப் பேரையும் கலைத்துவிட்டு, தான் தனியாக எதிரணியை விழ்த்துவதற்கு களத்தில் வெறிகொண்டு அலைந்த ஒரு கொதியன்.
அன்று ஷேன் வோர்னின் அத்தனை குணங்களினாலும் மானசீகமாக வசீகரிக்கப்பட்டவர்களில் நான் ஒருவன். மானிப்பாய் செல்லமுத்து மைதானத்தில், இடது பக்கம் சாய்ந்து கொண்டு நான்கைந்து அடி நடந்து சென்று, ஷேன் வோர்ன் போலவே நான் பந்து வீசி, திருப்தியடைந்துகொண்ட நாட்களை, இன்று மெல்பேர்ன் கிரிக்கெட் மைதானத்தின் முன்றலில் நின்று எண்ணிப் பார்த்தேன்.
விளையாட்டின் பெரும் நாயகர்கள் என்று போற்றப்படுவதற்கு, தனியே விளையாட்டுத் திறமை மாத்திரம் கொட்டிக்கிடந்தால் போதாது. ஒரு சர்ச்சைக்குரியவனாக ஆடு களத்திற்கு உள்ளேயும் – வெளியிலும் திமிறிக்கொண்டு திரியவேண்டும் என்பது அந்தக் காலத்தில் என்னைப் போன்றவர்களிடமிருந்த எதிர்பார்ப்பு. அதனால்தான், சச்சின் போன்ற ஒழுக்க சீலர்கள் எங்களை ஒருபோதும் கவர்ந்ததில்லை. அவர்கள் சாதனைகளுக்காக மாத்திரம் உற்பத்திசெய்யப்பட்டவர்கள் என்ற பட்டியலில் சேர்த்துவிட்டு நகர்ந்துவிட்டோம்.
ஷேன் வோர்னின் கிரிக்கெட் காலம் எனப்படுவது அவர் ஆடுகளத்திலும் அதற்கு வெளியிலும் ஏக காலத்தில் சர்ச்கையாகவே தொடர்ந்துகொண்டிருந்தது. பிரித்தானிய தாதியொருவருக்கு பலான தகவலொன்றை (SMS) அனுப்பினார் என்று ஆரம்பித்து, போதை மாத்திரையைப் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் அணியின் உப தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, கடைசியில் பெரும் குழப்படிகாரனாக விவாகரத்தைப் பெற்றுக்கொள்வதில் வந்து நின்றது. அதற்குப் பிறகும் அவரது சர்ச்சைகள் ஓயவில்லை.
பிரித்தானிய நடிகையொருவரை திருமணம் செய்துகொள்ளப்போவதாக, அவரை அழைத்துக்கொண்டு ஷேன் வோர்ன் மெல்பேர்னுக்கு வந்தபோது, இருவரையும் கலைத்துக்கொண்டு ஊடக உலங்குவானூர்திகள் மெல்பேர்ன் வானில் பறந்து திரிந்தன. பிறகு, தனது இரண்டாவது திருமணத்துக்காக 13 அறைகள் கொண்ட வீடொன்றை வாங்கிக்கொண்டு லண்டன் போய்விட்டார் என்று ஆஸ்திரேலிய ஊடகங்கள் அப்போது கதறின. பின்னர், அந்த உறவும் அறுந்தது. இடையில் இன்னொரு காதலி, இன்னொரு துணையாள், இன்னொரு இரவுத்துணை என்று மாரிகாலத்து நுளம்புபோல சர்ச்சை அவரை மொய்த்துக்கொண்டேயிருந்தது.
ஆனால், தனிப்பட்ட வாழ்வு எவ்வளவுதான் கொந்தளிப்புக்களுடன் கொப்பளித்துப்போயிருந்தாலும், ஷேன் வோர்ன் ஆடு களத்தில் இறங்கிவிட்டால், அவரது பந்துகளுக்கு விக்கெட்டுக்கள் அவர் காதலிகள் போலவே நாணிச் சரிந்தன. அவர் குறித்த ஊடகச் செய்திகளுக்கு இணையாக அவரது விக்கெட் எண்ணிக்கையும் எகிறியது.
எதையும் ஒரு சாதனையோடு அணுகுவது ஷேன் வோர்னுக்கு போதை போலானது. அந்தப் போதையின் உச்சம் 2007 இல் இதோ இந்த மெல்பேர்ன் கிரிக்கெட் மைதானத்தில் அரங்கேறியது. அன்ட்ரூ ஸ்ட்ரௌஸின் விக்கெட்டை வீழத்தி, ஷேன் வோர்ன் டெஸ்ட் கிரிக்கெட்டில் எழுநூறாவது விக்கெட்டை வீழ்த்திய முதல் வீரன் என்ற சாதனையை எட்டியபோது, அரங்கில் நுனிக் கதிரையிலிருந்து ஷேன் வோர்னைப் பார்த்துக்கொண்டிருந்த 90 ஆயிரம் பேரும் எழுந்து நின்று உலகையே கூவி அழைத்தார்கள்.
இன்று பூட்டியிருக்கும் இந்த மெல்பேர்ன் கிரிக்கெட் மைதானம் சாதரணமானது அல்ல. ஷேன் வோர்னினால் மாத்திரமே எத்தனையோ சாதனைகளால் நிறைந்தது. ஷேன் வோர்னின் சாதனைகளால் மாத்திரமே ஆஸ்திரேலியாவுக்கு எத்தனையோ ஆட்டங்களை வென்று கொடுத்தது. எதிர்வரும் 30 ஆம் திகதி ஷேன் வோர்னுக்காக நிரம்பி வழியப்போகிறது.
தனிப்பட்ட வாழ்வில் எத்தனையோ சர்ச்சைகளையும் சாபங்களையும் அள்ளிச் சூடிக்கொண்டாலும், தன் திறமையால் உலகையும் ஆஸ்திரேலிய மக்களின் ஒட்டுமொத்த அபிமானத்தையும் பெற்றுக்கொண்ட ஷேன் வோர்னின் இறுதிநிகழ்வு அரச மரியாதையுடன் எதிர்வரும் 30 ஆம் திகதி, மெல்பேர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. பிரதமர் ஸ்கொட் மொறிஸன் உட்பட ஆஸ்திரேலியாவின் அத்தனை முக்கியஸ்தர்களும் சமூகமளிக்கவுள்ளார்கள்.
வெளிநாடுகளிலிருந்தும் பலர் வருகை தரவுள்ளார்கள். இந்த மெல்பேர்ன் கிரிக்கெட் மைதானத்தின் ஒரு பார்வையாளர் அரங்கிற்கு ஷேன் வோர்னின் பெயர் சூட்டப்படவுள்ளது. ஆஸ்திரேலியாவின் அதி உயர் விருதும் (Order of Australia) அவருக்கு வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இன்று மெல்பேர்ன் கிரிக்கெட் மைதானத்திற்கு முன்னால் நின்றுகொண்டிருந்தபோது, எத்தனையோ தாய்மார், வோர்னின் உருவச்சிலைக்கு அருகில் தங்களது மழலைச் செல்வங்களைத் தூக்கிச் சென்று – “He is Shane Warne. Great Man of our country” என்று அறிமுகம் செய்துகொண்டார்கள்
அவுஸ்திரேலியாவில் வாழும் ஊடகவியலாளரும் ஷேன் வோர்னின் தீவிர ரசிகருமான தெய்வீகன் எழுதிய பதிவு