பதவிகள் எவருக்கும் நிரந்தரமே இல்லை! * எந்நேரமும் எதுவும் நடக்கலாம் – பஸில் அதிரடிக் கருத்து

0
171
Article Top Ad

* எத்தனை புதிய கட்சிகள் உருவாகினாலும் அவை ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு ஒருபோதும் சவாலாக இருக்கமாட்டா
“இலங்கையின் தற்போதைய அரசியல் நிலவரத்தின்படி எந்நேரமும் எதுவும் நடக்கலாம். எவருக்கும் பதவிகள் நிரந்தரம் இல்லை.”

– இவ்வாறு அதிரடிக் கருத்து வெளியிட்டுள்ளார் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பஸில் ராஜபக்ச.

தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பில் சிங்கள ஊடகம் ஒன்றுக்குக் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“எனது சுயவிருப்பத்தின் பிரகாரமே தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜிநாமா செய்தேன். எவரினதும் அழுத்தங்களால் எனது எம்.பி. பதவியை நான் துறக்கவில்லை.

அரசியலில் எனது பயணம் தொடரும் என்று நான் ஏற்கனவே கூறிவிட்டேன். அந்தப் பயணம் எப்படி அமையும் என்று என்னால் வெளிப்படையாகக்  கூற முடியாது.

நான் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராகக் களமிறங்கவுள்ளேன் என்றும் செய்திகள் வெளிவருகின்றன. இதையடுத்து சிலர் எனக்கு எதிராகப் புதிய கட்சிகளை ஆரம்பிக்கும் நடவடிக்கையிலும் இறங்கியுள்ளனர்.

இதை நினைக்கும்போது சிரிப்புத்தான் வருகின்றது. எத்தனை புதிய கட்சிகள் உருவாகினாலும் அவை ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு ஒருபோதும் சவாலாக இருக்கமாட்டா.

எதிர்வரும் காலங்களில் என்ன தேர்தல் நடந்தாலும் அதில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி வெற்றி வாகை சூடும்.

இலங்கையின் தற்போதைய அரசியல் நிலவரத்தின்படி எந்நேரமும் எதுவும் நடக்கலாம். எவருக்கும் பதவிகள் நிரந்தரம் இல்லை. இன்று உயர் பதவியில் இருப்பவர்கள் நாளை சாதாரண பதவியில் இருக்கலாம். இன்று சாதாரண பதவியில் இருப்பவர்கள் நாளை உயர் பதவியில் இருக்கலாம்.

இலங்கை அரசியலில் எதிர்வரும் காலங்கள் தீர்க்கமானதாக இருக்கும்” – என்றார்.