இசையால் இதயங்களை மகிழ்ச்சியிலாழ்த்திய “சங்கீத மேகம்”

0
175
Article Top Ad
முப்பது நிமிட நிகழ்ச்சி என்றாலே அதிலும் தூங்கிவழியும் பேர்வழிகள் நிறைந்த உலகம் இது. ஆனால் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற நிகழ்ச்சியில் அரங்கமே வழிமேல் விழிவைத்து ஒவ்வொரு பாடலையும் ரசித்துப் பரவசமடைந்த நிகழ்ச்சியைக் கண்டுகளிக்கும் அரிய வாய்ப்பு கடந்த ஞாயிற்றுக்கிழமை  சங்கீத மேகம் இசைநிகழ்ச்சியினூடாக வாய்த்திருந்தது. 
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக நடைபெற்றிருக்க வேண்டிய நிகழ்ச்சி ஆனால் கொவிட்-19 உட்பட பல்வேறு காரணங்களுக்காக பல தடவைகள் ஒத்திவைக்கப்பட்டு இறுதியாக ஜுன் 5ம் திகதி அன்று மருதானை எல்பின்ஸ்டன் அரங்கில் வெகு சிறப்பாக நடந்தேறியிருக்கின்றது. 
தமிழ் இசை உலகில் தமது திறமைகளை வெளிப்படுத்த தமிழ் நாட்டில்  போன்றன்று இலங்கையில் வாய்ப்புக்கள் மிகமிகக் குறைவு. கடந்த இரண்டு ஆண்டுகளாக தமது ஆற்றல்களைப் பறைசாற்றுவதற்காக பல்வேறு அர்ப்பணிப்புக்களைச் செய்து கவனத்தை சிதறவிடாமல் காத்திருந்த கலைஞர்கள் கிடைத்த சந்தர்ப்பத்தை மிகவும் சிறப்புறப் பயன்படுத்தினார்கள் என்பதை எள்ளளவிலும் சந்தேகத்திற்கு இடமின்றிக் கூறிவிடலாம்
 என்னதான் முயன்றாலும் திறமை கொண்டிருந்தாலும் இலங்கைத் தமிழ்க் கலைஞர்களின் மேடை நிகழ்ச்சிகள் தமிழகக் கலைஞர்களின் ஆற்றலுக்கு ஈடுகொடுப்பதில்லை எங்கேனும் குறைகாணும் மனநிலை எம்மவர்களிடையே நிலவுவதுண்டு. இந்தியக் கலைஞர்களுக்கு நாம் எந்தளவிலும் குறைந்தவர்கள் இல்லை   என்பதை சந்தேகத்திற்கிடமின்றி சங்கீத மேகத்தின் மூலம் நிரூபித்துக்காண்பித்துள்ளனர் எமது கலைஞர்கள்.
அடி மேல் அடியடித்தால் அம்மியும் நகரும் என்ற பழமொழிக்கு ஒப்பவோ என்னவோ கடந்த இரண்டு வருடகாலமாக மேற்கொண்ட தயார்ப்படுத்தல் பயிற்சிகளின் பிரதிபலனை எல்பின்ஸ்டன் வந்திருந்த ஒவ்வொருக்கும் துலாம்பரமாக  உணர்ந்திருப்பர் என்றால் மிகையல்ல
பாடகர்களான பிரகாஷ், அபினேஷ், அமான்,பாடகிகளான மேகன் தக்ஷினி, தனுஜா     ஆகியோர்  தமக்கே  உரிய   தனித்துவமான  குரலில் தமிழ் சினிமாவில் என்றென்றும் மனது மறக்காத பல இடைக்காலப்பாடல்களை பாடி ரசிகர்களை மெய்மறக்கச் செய்திருந்தனர்.
 சௌந்தரி டேவிட் றொட்றிகோ அவர்களை இலங்கையின் இசைத்துறையில் தெரியாவர்கள் அரிது அதிலும் ஆங்கில இசைத்துறையில் தெரியாதவர்கள் அபூர்வம். சர்வதேச ரீதியிலும் கீர்த்தி பெற்று பல விருதுகளையும் தனதாக்கிய  Soul Sounds இசைக்குழுவின் ஸ்தாபக இயக்குநர் . அவரது முதலாவது தமிழ் இசை நிகழ்ச்சியே இந்த சங்கீத மேகம் இசை நிகழ்ச்சி. ஆனால் இதனைப் பார்த்துப் பரவசமடைந்தவர்கள் நிச்சியமாக இது அவரது முதலாவது நிகழ்ச்சியல்ல அவர்  இதற்கு முன்பு பல தமிழ் இசை நிகழ்ச்சிகளை நடத்தியிருக்க வேண்டும் என்று நினைக்கும் அளவில்  அச்சுப்பிசகாமல்  முதல் நிகழ்ச்சி  மிக மிக சிறப்பாக நடைபெற்றிருக்கின்றது.
மலையகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட பாடகர் பிரகாஷ் தாம் ஒரு சகலகலா வல்லவன் என்பதை பல்வேறு பாடல்களைப் பாடியதுடன் அவற்றின் உணர்வை வெளிப்படுத்தும் வகையில் ஆடியும் ஆர்ப்பரித்தும் அங்கலாய்த்தும்   அனைவரையும் கட்டிப்போட்டு களிகூரச் செய்திருந்தார். என் காதலே என் காதலே என்ற டுயட் படத்தில் இடம்பெற்ற பாடலை பிரகாஷ் பாடி  மறைந்த மாபெரும் பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியத்திற்கு அஞ்சலி செலுத்தியபோது தமது கைப்பேசி வெள்ளொளியை ஒளிக்கவிட்டு அரங்கமே அசைந்து இசைத்து அஞ்சலி செலுத்தியமை நிகழ்ச்சியில் முத்தாய்ப்பாய் அமைந்திருந்தது
மேகன் தன் வசீகரக் குரலால் பல பாடல்களைப் பாடி மெய்மறக்கச் செய்திருந்தார். தனுஜா அவுஸ்திரேலியாவில் வந்து ஆனந்தக் காற்றில்  பறக்கவிட்டிருந்தார்.
அபினேஷ் பார்க்கும் போது பக்கத்துவீட்டுப் பையன் போன்று தெரிந்தாலும் பாடிய பாடல்களால் பார் போற்றும் திறமை தனக்கும் உண்டு என நிருபித்துக் காட்டினார். சுந்தரி கண்ணால் ஒரு சேதி பாடலைப்பாடி பரவசப்படுத்திய அவர் சௌந்தரி கண்ணால் ஒரு சேதி என்று சபைக்குப் பொருத்தமாக மாற்றிப்பாடியபோது வெளிப்பட்ட நாணம் பார்வையாளர்களையும் பற்றிக்கொண்டது
அமான் ரிபாய் குறிப்பாக ஏ.ஆர். ரஹ்மானின் அசத்தலான பாடல்களைப் பாடிய போது அரங்கமெங்கும்  அபரிமீதமான மகிழ்ச்சிப்பிரவாகம் வெளிப்பட்டது.

உலகத்தரம் வாய்ந்த கலைஞன் என்று பல மேடைகளில் நிருபித்த இரத்தினம் ரத்னதுரை முதற்கொண்டு அனைத்து இசைக்கலைஞர்களும் தமது பாகத்தை வேறெவருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்ற வகையில் வெளிப்படுத்தியிருந்தனர் என்பதை  நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தவர்கள் ஆமோதிப்பர்.

நிகழ்ச்சியைத் தொகுத்து செவ்வனே வழங்கிய பிரதாஸ் சுப்ரமணியம் எப்படி ஒரு நிகழ்ச்சியைத் தொகுக்க வேண்டும் என்பதற்கு ஒரு  முன்மாதிரியை விட்டுச் சென்றிருந்தார் என்று கூறினால் தப்பில்லை. ஒரு நிமிடம் கூட நிகழ்ச்சி தொய்வின்றி நடப்பதற்கு அவரது உற்சாகமும் புத்திசாதுர்யமும் நிறைந்த அறிவிப்பு கைகொடுத்தது என்றால் மிகையல்ல.

பல்வேறு ஒத்திவைப்புக்கள் ஏமாற்றங்களுக்கு மத்தியிலும் தமிழ் திரையிசை மீதுள்ள அதீத காதலால்  நிகழ்ச்சியின் இயக்குநரும் ஏற்பாட்டாளருமான சௌந்தரி டேவிட் ரொட்றிகோவும் அவரது கணவர் பிரதீப் உட்பட இசைக்கலைஞர்களும் பாடகர்களும் எப்படியேனும் இந்த நிகழ்ச்சியை அரங்கேற்றிக் காண்பிப்போம்  எமது திறமையை உலகிற்கு பறைசாற்றுவோம் என்று கொண்டிருந்த தீராக் கனவு சிறப்புறவே நிறைவேறியிருக்கின்றது.
 அருண் ஆரோக்கியநாதன்