நிறைவேற்று அதிகாரத்தின் கீழ் எடுக்கப்பட்டுள்ள தீர்மானங்கள்தான் தற்போது நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு பிரதான காரணமாகவுள்ளது. பொது மக்களின் போராட்டங்களை கையாளும் அதிகாரம் இராணுவத்திடம் ஒப்படைக்கப்படுவது மிகப்பெரிய தவறாகும் என மனித உரிமைகள் ஆர்வலரும் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளருமான சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் குளோப் தமிழ் இணைத்திற்கு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,
இலங்கையில் பொருளாதார நெருக்கடி மாத்திரமல்ல அரசியல் நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது. அரசியல், சமூக, பொருளாதாரம் என பல நெருக்கடிகளை மக்கள் எதிர்கொள்ளும் சூழ்நிலைக்கு தற்போதைய ஆட்சியாளர்கள் எடுத்த மற்றும் உறுதியாக எடுக்காத தீர்மானங்கள்தான் காரணமாகவுள்ளன.
இலங்கை என்பது மனித உரிமைகளை மதிக்காத ஒரு நாடாகும். இலங்கையில் அமையப்பெறும் அரசாங்கங்கள் சட்டத்தை மதிப்பதில்லை என்பதுடன் அதனை நடைமுறைப்படுத்துவதும் இல்லை. அதனால் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் தொடர்பில் ஆச்சிரியப்படுவதற்கும் ஏதுமில்லை. சட்டங்கள் இலங்கையில் முறையாக நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. மனிதவுரிமைகளும் பாதுகாக்கப்படுவதில்லை. சட்டம் ஒழுங்கு பாதுகாப்புத் தரப்பினரிடம் கையளிக்கப்படுகிறது.
சட்டத்திற்கு மதிப்பளிக்காத ஒரு நாடு வன்முறையின் ஊடாகதான் மக்கள் புரட்சிகளுக்கு தீர்வை அளிக்கிறது. எரிவாயு மற்றும் எரிபொருளை கோரி போராடும் மக்கள் மீது கடுமையான கட்டுப்பாடுகளை அல்லது அவசரகாலச் சட்டத்தை பிரயோகிப்பதன் ஊடாகதான் அவை கலவரங்களாகவும் வன்முறைகளாகவும் மாறுகின்றன. அரசாங்கத்தின் மீதும் பொலிஸார் மீதும் மக்கள் நம்பிக்கையிழந்துள்ளனர். ஆனால், இவற்றுக்கு தீர்வை வழங்கும் பொறுப்பும் அரசாங்கத்திடம்தான் உள்ளது.
அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கை அதிகரிக்கும் போதுதான் இந்தப் பிரச்சினைகள் தீரும் என்பதுடன் சர்வதேச சமூகமும் நம்பிக்கையுடன் நிதி உதவிகளை வழங்கும். மக்களின் போராட்டங்களை ஒடுக்குவதற்கு இராணுவத்தினரை பயன்படுத்தக் கூடாது. வன்முறைகளின் பின்புலத்தில்தான் இராணுவத்தினர் உருவாக்கப்பட்டுள்ளனர். மக்களின் போராட்டங்களை வன்முறை நோக்கில் காணும் மனோநிலையில் இருந்து இராணுவத்தினரும் பொலிஸாரும் வெளிவரும் கற்பித்தல்கள் வழங்கப்பட வேண்டும். சிவில் பாதுகாப்புக்காக இராணுவத்தினரை அழைக்கும் ஜனாதிபதியின் செயல்பாடு இடைநிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.