அரச நிறுவனங்கள் டிஜிட்டல் முறைமையில் செயற்படுகின்ற நிலைமை அதிகமாகக் காணப்பட்டாலும், தகவல் மற்றும் இணையப் பாதுகாப்பு தொடர்பான போதியளவு கவனம் செலுத்தாமை, காலங்கடந்த தொழிநுட்பப் பயன்பாடு மற்றும் அரச துறையில் இணையப் பாதுகாப்பு முகாமைத்துவத்திற்குத் தேவையான திறன்வாய்ந்த பணியாளர்களின் பற்றாக்குறை போன்றவற்றால் அந்நிறுவனங்களின் தகவல் மற்றும் தகவல் தொழிநுட்ப தொகுதிகள் பாரிய இடர்களை எதிர்கொண்டுள்ளது.
இந்நிலைமைகளைக் கட்டுப்படுத்துவதற்காக இலங்கை கணணி அவசரப் பதிலளிப்புக் குழுவால் (SLCERT), இலங்கையில் 2019-2023 தகவல் மற்றும் இணையப் பாதுகாப்பு மூலோபாயம் மற்றும் ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச தகவல் பாதுகாப்பு தரநிர்ணயங்களுக்கு அமைவாக அரச நிறுவனங்களுக்கான தகவல் மற்றும் இணையப் பாதுகாப்பு கொள்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
2016 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க தகவலுக்கான உரிமைச் சட்டத்தின் ‘பகிரங்க அதிகாரசபைகள்’ என வரையறுக்கப்பட்டுள்ள அனைத்து அரச நிறுவனங்களும் இக்கொள்கையை நடைமுறைப்படுத்தல் கட்டாயமானதாகும். அதற்கமைய, அரச நிறுவனங்களுக்காக முன்மொழியப்பட்டுள்ள தகவல் மற்றும் இணையப் பாதுகாப்புக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்காக தொழிநுட்ப அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.